under review

கெல்லியின் கோட்டை (Kellie's Castle): Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: == உசாத்துணைகள் ==)
(Changed incorrect text: == உசாத்துணைகள் ==)
 
(No difference)

Latest revision as of 13:15, 8 May 2024

கெல்லியின் கோட்டை.png

கெல்லியின் கோட்டை (Kellie's Castle) மலேசியாவில் உள்ள ஒரு பழமையான கோட்டை. இது கிந்தா மாவட்டத்தில் உள்ள பத்து காஜாவில் அமைந்துள்ளது. கிந்தா நதியை ஒட்டியமைந்திருக்கும் ஒரு சிறிய சிற்றோடையான 'சுங்கை ராயா' அருகே இது கட்டப்பட்டது. வில்லியம் கெல்லி-ஸ்மித் என்பவரால் உருவாக்கப்பட்டது. இக்கோட்டை கட்டி முடிக்கப்படாத நிலையில், பாழடைந்த மாளிகையாகவே இருந்து வருகிறது.

கோட்டையின் வரலாறு

'கெல்லாஸ் ஹவுஸ்' எனும் பெயரில் மாளிகையின் கட்டுமானம் 1910-ல் கெல்லி-ஸ்மித்தால் தொடங்கப்பட்டது. ஆயினும், 1915-ல் கெல்லி-ஸ்மித்திற்கு மகன் பிறந்தவுடன், அம்மாளிகையை அவர் மூரிஷ், இந்தோ-சராசெனிக் மற்றும் ரோமன் வடிவமைப்புகளுடன் ஒரு பெரிய கோட்டையாக மாற்றியமைக்கத் திட்டமிட்டார். அதனைத்தொடர்ந்து, கெல்லி-ஸ்மித் இந்தியாவின் அன்றைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து 70 கைவினைஞர்களை அழைத்து வந்தார். செங்கற்கள், பளிங்குக் கற்கள், ஓடுகள் போன்ற கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. மேலும் கோட்டையில் மின்தூக்கி வசதியும் வைக்க திட்டமிடப்பட்டது.

கோட்டையின் சிறப்புகள்

கெல்லியின் கோட்டை 2.png

கெல்லியின் கோட்டை, 14 அறைகள் கொண்டது. நான்கு மாடிகளாக இக்கோட்டை கட்டப்பட்டது. கட்டுமானத் திட்டத்தில் நிலத்தடி சுரங்கங்கள், ரகசிய அறைகள், டென்னிஸ் கோர்ட், மது அறை மற்றும் சுரங்கப்பாதைகள் இருந்தன.

கெல்லி-ஸ்மித் வரலாறு

வில்லியம் கெல்லி-ஸ்மித் (1870-1926) ஸ்காட்லாந்தின் மோரே ஃபிர்த், கெல்லாஸில் 1870-ல் பிறந்தார். கெல்லி-ஸ்மித் தன்னுடைய 20-ஆவது வயதில், பொறியியலாளராக மலாயாவிற்கு வந்தார். 1890-ல் பத்து காஜாவில் 9,000 ஹெக்டேர் காடுகளை அழிக்க மாநில அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெற்ற 'சார்லஸ் அல்மா பேக்கரின்' (Charles Alma Baker) கணக்கெடுப்பு நிறுவனத்தில் அவர் பணிக்குச் சேர்ந்தார். பேக்கருடனான தனது வணிக முயற்சியில் கிடைத்த கணிசமான இலாபத்துடன், கெல்லி-ஸ்மித் கிந்தா மாவட்டத்தில் 1,000 ஏக்கர் (405 ஹெக்டேர்) நிலத்தை வாங்கினார். அந்நிலத்தில் ரப்பர் மரங்களை நட்டதோடு, ஈயச் சுரங்கத் தொழிலிலும் ஈடுபட்டார். காலப்போக்கில், தனது தோட்டத்திற்கு 'கிந்தா கெல்லாஸ்' எனப் பெயரிட்ட கெல்லி-ஸ்மித், அப்பகுதியிலிருந்த 'டின் டிரெட்ஜிங்' நிறுவனத்தையும் சொந்தமாக்கினார். 1903-ல் தனது ஸ்காட்டிஷ் காதலியான ஆக்னஸை திருமணம் செய்து கொண்ட கெல்லி-ஸ்மித் மலாயாவில் குடியேறினார். 1904-ல் அவர்களுக்கு ஹெலன் என்ற மகள் பிறந்தாள்.

தமிழ்ப்பள்ளி கட்டுமானம்

வில்லியம் கெல்லி-ஸ்மித் ‘பத்து காஜா கிந்தா கெலாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி’ எனும் பெயரில் ஒரு தமிழ்ப்பள்ளியையும் உருவாக்கியுள்ளார். இத்தமிழ்ப்பள்ளி பத்து கஜாவிலுள்ள ஜாலான் தஞ்சோங் துவாலாங்கில் அமைந்துள்ளது.

கெல்லியின் கோட்டை 3.png

கோயில் கட்டுமானம்

கெல்லியின் கோட்டையின் அருகில் ஒரு கோவிலைக் கட்டுவதற்காக இந்திய வேலையாட்கள் அவரை அணுகியபோது, கெல்லி-ஸ்மித் அவர்களது வேண்டுகோளுக்கு உடனடியாக ஒப்புக்கொண்டார் என்றும், அவரது பெருந்தன்மையைப் பாராட்டும் வகையில், அவ்வேலையாட்களால் கட்டப்பட்ட முருகன் கோயிலில் இதர உருவ சிலைகளுக்கு மத்தியில் அவரது சிலையும் கட்டப்பட்டது என்றும் இணையத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், இந்திய வேலையாட்களின் கட்டாயத்தினாலே அவர் அக்கோயிலைக் கட்ட ஒப்புக்கொண்டார் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்பானிஷ் காய்ச்சல்

1918-ம் ஆண்டில், ஸ்பானிஷ் காய்ச்சல் கெல்லியின் கோட்டையின் கட்டுமானப் பணியாளர்களைத் தாக்கியது. இதனால், அக்கோட்டையின் கட்டுமானப் பணிகள் தாமதமாகின. தவறான முதலீடுகளின் காரணத்தினாலும் கெல்லி-ஸ்மித்திற்குப் பொருளாதார ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டன. அவ்வேளையில் அவரது உடல்நிலை மோசமைடையத் தொடங்கியது.

மரணம்

கெல்லியின் கோட்டை 4.webp

வில்லியம் கெல்லி-ஸ்மித் 1926-ல் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு ஒரு சிறு பயணம் செய்தபோது நிமோனியாவால் தன்னுடைய 56 -வது வயதில் இறந்தார். அவர் கோட்டையின் கட்டுமானத்திற்காக மின்தூக்கி வாங்க வேறு நாட்டிற்குப் பயணிக்கும்போது இறந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, கெல்லி-ஸ்மித்தின் மனைவி பெரும் மனச்சோர்வுக்கு ஆளாகி தன்னுடைய பிள்ளைகளோடு ஸ்காட்லாந்திற்குத் திரும்பினார். இதனால், அக்கோட்டையின் கட்டுமானம் முடிக்கப்படாமல் கைவிடப்பட்டது. பின்னர் அக்கோட்டை ஹாரிசன்ஸ் மற்றும் கிராஸ்ஃபீல்ட் என்ற பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.

தனிச் சிறப்பு

இக்கோட்டையில் மின்தூக்கி பொருத்தப்பட்டிருந்தால் மலேசியாவில் முதன்முதலில் மின்தூக்கி பொருத்தப்பட்ட கட்டடம் எனும் சிறப்பை கெல்லிஸ் கோட்டை பெற்றிருக்கும்.

தற்போதைய நிலை

கெல்லியின் கோட்டை தற்போது மலேசியாவின் பிரபலமான உள்ளூர் சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அக்கோட்டை சீரமைக்கப்படுள்ளது. மேலும், கோட்டைக்கு எதிரே ஆற்றின் குறுக்கே ஓர் உணவகமும் திறக்கப்பட்டது. பள்ளி விடுமுறை நாட்களில், அக்கோட்டைக்குத் தினமும் 500 முதல் 700 சுற்றுப்பயணிகள் வருவர். அக்கோட்டையில் வேலை செய்வதற்காக மலாயாவிற்கு அழைத்து வரப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் சந்ததியினர் இன்றளவிலும் அச்சுற்று வட்டாரத்தில் வாழ்கின்றனர்.

திரைப்படங்களில் கெல்லிஸ் கோட்டை

1999-ம் ஆண்டில் வெளியான 'அன்னா அண்ட் தி கிங்' எனும் திரைப்படமும், 2001-ம் ஆண்டில் 'ஸ்கைலைன் குரூசர்ஸ்' எனும் திரைப்படமும் கெல்லியின் கோட்டையில் படமாக்கப்பட்டன.

நிகழ்ச்சிகள்

2015 -ம் ஆண்டில், கெல்லியின் கோட்டையில் மலேசியாவின் முதல் 24 மணி நேர நகைச்சுவை சவால் ( 24-hour Comic Challenge) இடம்பெற்றது. போர்ட் ஈப்போ, மலேசியன் காமிக் ஆக்டிவிஸ்ட் சொசைட்டி (PEKOMIK) மற்றும் மலேசியன் அனிமேஷன் சொசைட்டி (ANIMAS) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புடன், இந்த நிகழ்வு மார்ச் 21-22, 2015 அன்று நடந்தது.

சர்ச்சைகள்

  • கோட்டையிலிருந்து இந்தியப் பணியாட்களால் கட்டப்பட்ட முருகன் கோயிலுக்கு ஒரு சுரங்கப்பாதை அக்கோவிலைக் கட்டும்போதே அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  • கெல்லியின் கோட்டை அமானுடக் கதைகளின் மையமாக இன்றளவும் திகழ்கிறது. அக்கோட்டையைச் சுற்றி அமைந்துள்ள சன்னல்களில், மைதானத்தில் பேய் உருவங்கள் போன்ற விவரிக்க முடியாத காட்சிகளைக் கண்டுள்ளதாக சுற்றுப்பயணிகள் பலர் கூறியுள்ளனர். தீரா ஆசையோடு இறந்த கெல்லி-ஸ்மித்தின் ஆத்மா இன்றளவிலும் அக்கோட்டையைச் சுற்றி வருவதாக அச்சுற்று வட்டாரத்தில் வாழ்பவர்கள் நம்புகின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page