under review

கு. கல்யாணசுந்தரம்

From Tamil Wiki
Revision as of 08:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கு. கல்யாணசுந்தரம்
கு. கல்யாணசுந்தரம்

கு. கல்யாணசுந்தரம் (பிறப்பு: ஏப்ரல், 1979) கணினித்தமிழ் அறிஞர். காப்புரிமை சிக்கலில்லாத தமிழ் நூல்களை இணையத்தில் அறிவுச்சேகரமாக தொகுத்தளிக்கும் மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தின்(project Madurai) நிறுவனர்.

வாழ்க்கைக் குறிப்பு

கு. கல்யாணசுந்தரம் சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் தமிழர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் லயோலா கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுமுனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சுவிச்சர்லாந்தின் லாசன்னே நகரில் உள்ள சுவிஸ் தேசிய தொழில்நுட்ப நிலையத்தில்(Swiss Federal Institute of Technology, Lausanne, Switzerland) வேதியியல் பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் முப்பத்தியாறு ஆண்டுகள் பணிபுரிந்தார். சூரிய மின்கலங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்.

தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்

1990-களின் மத்தியில் தமிழ்க்கணினி வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட கு. கல்யாணசுந்தரம் முதல் முயற்சியாக திருக்குறளை தட்டச்சிட்டு இணையத்தில் ஏற்றி அனைவரும் பயன்படுத்தும் வழி இலவசமாக அளித்தார். 1998-ல் பொங்கல் அன்று தொடங்கப்பட்ட மதுரை திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியின்றி, வணிக நோக்கமுமின்றி நடைபெறும் ஒரு தன்னார்வ முயற்சி. காப்புரிமை சிக்கலில்லாத நூல்களை தட்டச்சு செய்து, மெய்ப்புப் பார்த்து இணையத்தில் மின்னூலாக வெளியிட உதவுவது என வெவ்வேறு பணிகளில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழார்வலர்கள் பங்கேற்கும் திட்டம். தனது சொந்த செலவில் பலநூல்களை தேடிப்பிடித்து வாங்கியும், நகலெடுத்தும் உள்ளார்.

சங்க கால நூல்கள், நீதிநெறி நூல்கள், இலக்கண நூல்கள், பக்தி நூல்கள் (சைவ, வைணவ, இஸ்லாமிய, கிருத்துவ சமய நூல்கள்) காப்பியங்கள், பிரபந்த வகை நூல்கள், இருபதாம் நூற்றாண்டின் தமிழ்நாட்டு ஆசிரியர் நூல்கள், ஈழத் தமிழர், மலேசியத் தமிழர் நூல்கள் என சங்ககால நூல்கள் முதல் தற்காலத் தமிழ்நூல்கள் வரை அனைத்தும் மதுரைத்திட்டத்தின் வழி பதிவேற்றப்பட்டது. படிமக்கோப்புகளாகவும்(PDF), ஒருங்குகுறி(Unicode) எழுத்துருக்கோப்புகளாகவும், இணையப்பக்கங்களாகவும் தமிழிலக்கியங்கள் மதுரைத்திட்டத்தின் வழியாக வாசகர்கள் தரவிரக்கலாம். தமிழக அரசின் பொதுவுடமையாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் ஜெயகாந்தன் போன்ற இலக்கிய ஆளுமைகள் ஆகியோர் தாங்களே காப்புரிமை நீக்கி வழங்கிய நூல்கள் என பல தற்கால நூல்களும் மதுரைத் திட்டத்தின் சேகரிப்பில் உள்ளன. ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ள, “சிவபுரம்” என்ற தலைப்பில் 1902-ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட நூல் ஜி.யு. போப் அவர்களால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கப்பட்டதை அறிந்து, அங்கு சென்று நூலை படநகல்களாக எடுத்து அவற்றை மின்னாக்கம் செய்தார்.

பார்க்க: மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருது
பிற பங்களிப்புகள்
  • பல இயங்குதளங்களிலும் பயன்படுத்த உதவும் வகையில் “மயிலை” என்ற எழுத்துருவை 1980-களில் உருவாக்கி அனைவரும் இலவசமாகப் பயன்படுத்த உதவினார்.
  • இணையத்தின் ஆரம்ப நாட்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட “தமிழ் மின்நூலகத்தை” (Tamil Electronic Library) உருவாக்கினார்.
  • “உத்தமம்” என்றழைக்கப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (International Forum for Information Technology in Tamil – INFITT) தலைவர் மற்றும் நிறுவனர்களில் ஒருவர்.
  • ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ (Tamil Heritage Foundation) நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர்.

விருது

  • 2007-ல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றார்.
  • கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகம் கு. கல்யாணசுந்தரத்தின் இணையத் தமிழ்ப்பணியை பாராட்டி விருது வழங்கியது.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page