கு. அழகிரிசாமி

From Tamil Wiki
Revision as of 23:59, 31 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கு. அழகிரிசாமி ( 23 செப்டெம்பர் 1923 - 5 ஜூலை 1970)) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகளில் சாதனை புரிந்தவர் என அறியப்படுகிறார். இதழாளர், இசையிலும் நாட்டாரியலிலும் ஆய்வுகள் செய்தவர். பிறப்பு, கல்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கு. அழகிரிசாமி ( 23 செப்டெம்பர் 1923 - 5 ஜூலை 1970)) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகளில் சாதனை புரிந்தவர் என அறியப்படுகிறார். இதழாளர், இசையிலும் நாட்டாரியலிலும் ஆய்வுகள் செய்தவர்.

பிறப்பு, கல்வி

திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில்பட்டி அருகே இடைச்செவல் என்னும் ஊரில் 23 செப்டெம்பர் 1923 ல் குருசாமி-தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார். தெலுங்கு பேசும் பொற்கொல்லர் குடியைச் சேர்ந்தவர்கள். இடைச்செவலில் கி.ராஜநாராயணன் வீடு இருந்த அதே தெருவில்தான் அழகிரிசாமியின் வீடும் இருந்தது. அவர்கள் இளமைக்கால நண்பர்கள். (தமிழகத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவர் சாகித்ய அக்காதமி விருது பெற்றது இடைச்செவலில்தான்)

வசதியின்மை காரணமாக அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற "பெருமை' அவருக்கு உண்டு. பள்ளிப் படிப்பைவிட அவர் அனுபவத்தில் பெற்ற அறிவே அதிகம்.

’உறக்கம் கொள்ளுமா?’ என்ற இவரது முதல் சிறுகதை 1943-ஆம் ஆண்டு "ஆனந்த போதினி' மாத இதழில் பிரசுரமானது.

ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான். தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார்.