under review

குறண்டி மலை (எண்பெருங்குன்றம்)

From Tamil Wiki
Revision as of 19:50, 23 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:சமணத் தலங்கள் சேர்க்கப்பட்டது)

To read the article in English: Kurandi Malai (Enperumkundram). ‎

குறண்டி மலைக் குறித்த உத்தமபாளையம் கல்வெட்டுச் சான்று

முற்காலப் பாண்டியரின் காலத்தில் இருந்த சமணப் பள்ளிகளில் தலைசிறந்த விளங்கியது குறண்டி மலை. இது மதுரையைச் சுற்றி அமைந்த எண்பெருங்குன்றங்களுள் ஒன்று. இம்மலை பள்ளிகளை இணங்கான முடியாத வகையில் அழிந்துவிட்டது. இப்பள்ளியைப் பற்றிய குறிப்பு பள்ளிமடம், சமணர்மலை, பரங்குன்றம், உத்தமபாளையம், கழுகுமலை, சோழபாண்டியபுரம் போன்ற இடங்களில் அமைந்த கல்வெட்டுகள் மூலமே அறியமுடிகிறது.

குறண்டி மலை

குறண்டி மலை சமணப் பள்ளி கி.பி எட்டாம் நூற்றாண்டு முதல் கி.பி பதினோராம் நூற்றாண்டு வரை சிறப்புடன் விளங்கியது. குறண்டிப் பள்ளி அமைந்திருந்ததற்கான கல்வெட்டுகள் குறிப்பிடும் வெண்புநாடு, அருப்புக்கோட்டை, காரியாபட்டி வட்டங்களில் முன்பு இருந்திருக்கிறது. எனவே மதுரையிலிருந்து காரியாபட்டி செல்லும் வழியில் உள்ள குறண்டி என்ற ஊரிலேயே இப்பள்ளி இருந்திருக்க வேண்டும் என ஆய்வாளர் வெ. வேதாசலம் தெறிவிக்கிறார். குறண்டி ஊரில் இப்பள்ளி சிறிய குன்றின் மேல் அமைந்ததால் இதனை "பராந்தக பர்வதமாயின குறண்டி ஸ்ரீவல்லவப் பெரும்பள்ளி" என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதனை "குறண்டி திருக்காட்டம்பள்ளி" என்றும் அழைத்திருக்கின்றனர். இப்பள்ளி முற்றிலுமாக அழிந்த நிலையில் இதன் கல்வெட்டுப் பொறித்த கட்டிடப்பகுதிகளைத் திருச்சுழியலுக்கு அருகில் உள்ள பள்ளிமடம் சிவன் கோவிலுக்கு எடுத்து சென்று அங்குள்ள முன் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

கல்வெட்டு சான்றுகள்
சமணமலைக் கல்வெட்டு

சமண மலையில் கிடைத்த கல்வெட்டில் முற்காலப் பாண்டியர் காலத்தில் சமணத்துறவிகள், சமணத்தைப் பின்பற்றும் இல்லறத்தார் வாழ்ந்த ஊர் குறண்டி என்றும், இங்குள்ள பள்ளியில் இருந்து சமணத் துறவிகள் தமிழ்நாடெங்கும் சென்று சமணத்தை வளர்த்தனர் என்றும் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

உத்தமபாளையம் கல்வெட்டு

இவர்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்கிய அஷ்டோபவாசிபடாரர் உத்தமபாளையம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

கழுகுமலைக் கல்வெட்டு

கழுகுமலைக் கல்வெட்டுகளில் தோரிபடாரர், தீர்த்தப்படாரர், ஹரச்சந்திரதேவர், குணகீர்த்தி ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். மேலும் இக்கல்வெட்டில் குறண்டியைச் சார்ந்த பல சமணசமயத்து இல்லறத்தார் அங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களைச் செய்தவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

சோழபாண்டிபுரம் கல்வெட்டு

திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள சோழபாண்டிபுரம் சமணப்பள்ளிக் கல்வெட்டில் (கி.பி. 952) குணவீரபடாரர் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.

பள்ளிமடம் கல்வெட்டு

பள்ளிமடத்திலுள்ள கி.பி. எட்டாம் நூற்றாண்டு மாறஞ்சடையனின் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் குறண்டிப்பள்ளியில் நடைபெற்ற வழிபாடுகள் குறித்து தெரிவிக்கின்றன. குண்ணூர்ச் சாத்தான்குணத்தான் என்பவன் குறண்டி திருக்கட்டாம்பள்ளித் தீர்த்தங்கரர்க்குத் திருவிளக்கு எரிப்பதற்காக நூறு ஆடுகள் அளித்துள்ளான். சாத்தன்காரி என்பவனும் பாம்பாரூரைச் சார்ந்த ஒருவனும் திருவிளக்கு எரிப்பதற்காகக் கொடைகள் அளித்துள்ளனர். குறண்டியில் பெண் துறவியர் இருந்ததற்குச் சான்றாக கல்வெட்டில் இவர்கள் "குறண்டிக்கன்னிமார்" என்று குறிப்பிடுப்படுகின்றனர்.

உசாத்துணை

  • எண்பெருங்குன்றங்கள் - முனைவர். வெ. வேதாசலம்


✅Finalised Page