under review

குருவிக்கரம்பை வேலு

From Tamil Wiki
குருவிக்கரம்பை சு. வேலு

சு. வேலு (சுப்பையாத் தேவர் வேலு; குருவிக்கரம்பை வேலு; குருவிக்கரம்பை சு. வேலு) (நவம்பர் 26, 1930 - மார்ச் 3, 2010) திராவிட இயக்க எழுத்தாளர். சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். திராவிட இயக்கம் சார்ந்து பல நூல்களை, கட்டுரைகளை எழுதினார். குத்தூசி குருசாமி வாழ்க்கை வரலாறு உள்பட பல நூல்களை எழுதினார்.

பிறப்பு, கல்வி

சு.வேலு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பையில், நவம்பர் 26, 1930 அன்று, சுப்பையாத் தேவர்-சௌபாக்கியத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். பட்டுக்கோட்டை ராசா மடத்தில் உயர் நிலைப்பள்ளியில் பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலைக் கல்வி (இன்டர்மீடியட்) கற்றார்.

தனி வாழ்க்கை

வேலு, ராமாமிர்தம் அம்மையாரை மணம் செய்துகொண்டார். மாமனார் வை. மாணிக்கத்தின் மளிகைக் கடையில் பணியாற்றினார். தனது சொந்த ஊரான குருவிக்கரம்பையில் தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தார். பேராவூரணியில் ‘வேலு மெடிக்கல் ஹால்’ என்னும் மருந்துக்கடையை நடத்தினார். 1970-ல், சென்னைக்குக் குடியேறிய வேலு, ஆங்கில மருந்து கடையையும், நெய்தல் உணவு விடுதியையும் நடத்தினார். மகன்கள்: திருமாவளவன், சித்தார்த்தன். மகள்: ரஷ்யா.

குருவிக்கரம்பை வேலு நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

குத்தூசி குருசாமி மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்த வேலு, அவரது வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து நூலாக்கினார். குத்தூசி குருசாமியின் படைப்புகள் பலவற்றைத் தொகுத்து வெளியிட்டார். குஞ்சிதம் அம்மையாரின் வாழ்க்கையை ஆவணமாக்கினார். சிந்துவெளி நாகரிகம், ஹரப்பா நாகரிகம் பற்றி ஆய்வு செய்து பல நூல்களை வெளியிட்டார். வேதம் பற்றி ஆய்வு செய்து குருவிக்கரம்பை வேலு எழுதியிருக்கும் ‘இதுதான் வேதம்' நூல், திராவிட இயக்கத்தாரால் பெரிதும் வரவேற்கப்ப்பட்டது. குருவிக்கரம்பை வேலு, 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

குருவிகரம்பை சு. வேலு

அரசியல்

பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் தலைவராகச் செயல்பட்டவருமான கே. முத்தையா வேலுவின் மாமா. அவர் மூலம் பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகள் சிறு வயதிலேயே அறிமுகமாகின. வாசித்த  ‘மாமேதை லெனின்’, ’பொதுவுடைமைதான் என்ன’ போன்ற நூல்களால் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர் எஸ்.பி. தங்கவேலுவால் திராவிட இயக்கக் கொள்கைகளின் அறிமுகம் ஏற்பட்டது. ஈ.வெ.ராமசாமி பெரியார் மீது பற்று உண்டானது. கல்லூரியில் படிக்கும்போது குத்தூசி குருசாமியின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் மீதும் அவரது எழுத்தின் மீதும் கொண்ட ஆர்வத்தால் வேலு, திராவிட இயக்க ஆதரவாளராகச் செயல்பட்டார். திராவிட இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டார்.

குருசாமி, திராவிட இயக்கத்தில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தபோது, வேலுவும், அதில் இணைந்து பணியாற்றினார். சுயமரியாதை இயக்கம் நடத்திய பல போராட்டங்களில் கலந்துகொண்டார்.

மறைவு

குருவிக்கரம்பை வேலு, மார்ச் 3, 2010-ல், தனது எண்பதாம் வயதில் காலமானர்.

வரலாற்று இடம்

குருவிக்கரம்பை வேலு திராவிட இயக்க எழுத்தாளராக மதிப்பிடப்படுகிறார். வாழ்க்கை வரலாறு, பண்பாட்டு ஆய்வு ஆகியவை அவருடைய களங்கள். குருசாமி, குஞ்சிதம் அம்மையார் ஆகியோரது வாழ்கையை ஆவணப்படுத்தினார். குத்தூசி குருசாமியின் கட்டுரைகளைத் தேடித் தொகுத்து வெளியிட்டது குருவிக்கரம்பை வேலுவின் முக்கிய பணியாக பதிப்பிடப்படுகிறது. வேலு எழுதிய ‘Tamil kingdom at Harappa' நூல் சிந்துவெளி, ஹரப்பா நாகரிகம் பற்றிய முக்கியமானதொரு ஆய்வு நூலாக ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகிறது.

நூல்கள்

  • குத்தூசி குருசாமி வாழ்க்கை வரலாறு
  • சுயமரியாதைச் சுடரொளி குஞ்சிதம் அம்மையார்
  • இதுதான் வேதம்
  • கடவுளின் எதிரி
  • சிந்து முதல் குமரி வரை
  • இவர்தான் புத்தர்
  • அரப்பாவில் தமிழர் நாகரிகம்
  • அரப்பாவில் தமிழர் ஆட்சி
  • சிந்துவெளித் தமிழகம்
  • மீன், ஊன், கள்ளும் கலந்த தமிழ்
  • வால்மீகி இராமாயணம்
  • குத்தூசி குருசாமி விலகியது ஏன்?
  • கல்லாய்ச் சமைந்த உயிரினங்கள்
  • உலகைக் கவர்ந்த படைப்பாளிகள்
  • கல்மாடும் கல்நெஞ்சும் - குருசாமியின் குத்தூசிக் கட்டுரைகள்
  • அம்பே சிவம் - குருசாமியின் குத்தூசிக் கட்டுரைகள்
  • தோற்பதே நல்லது - குருசாமியின் குத்தூசிக் கட்டுரைகள்
  • மியூசிய நாதர் கோயில் - குருசாமியின் குத்தூசிக் கட்டுரைகள்
  • Tamil kingdom at Harappa (ஆங்கில நூல்)

உசாத்துணை


✅Finalised Page