under review

கீழ்இடையாலம் ரிஷபநாதர் கோவில்

From Tamil Wiki
Revision as of 08:16, 14 July 2023 by Madhusaml (talk | contribs)

கீழ்இடையாலம் ரிஷபநாதர் கோவில் (பொ.யு. 15-ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கீழ்இடையாலத்தில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

திண்டிவனத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தெற்கிலுள்ள சமணத்தலமாகிய கீழ் இடையாலத்தில் முதலாவது தீர்த்தங்கரராகிய ரிஷப நாதருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.

வரலாறு

இங்கு பொ.யு. 15-ஆம் நூற்றாண்டில் கோயில் தோற்றுவிக்கப்பட்டதெனவும், அதற்கு அப்போது அரசாட்சி செய்த அரசதானங்கள் அளித்துச் சிறப்பு செய்ததாகவும் செவிவழிச் செய்தி உள்ளது.

அமைப்பு

கீழ்இடையாலம் ரிஷபநாதர் கோவில் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், பிரம்மதேவர் கருவறை ஆகியவற்றைக் கொண்டது. ஆரம்ப காலத்தில் கருவறையையும், அர்த்தமண்டபத்தினையும் கொண்ட இக்கோயில் விரிவாக்கம் பெற்று மகாமண்டபம் முகமண்டபம் ஆகியவற்றை கொண்டது. 1944-ஆம் ஆண்டு இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டும், புதிய மண்டபங்கள், இணைக்கப்பட்டது. அண்மைக் காலத்தில் மீண்டும் புதுப்பிக்கும் பணி நடைபெற்றிருக்கிறது. இவ்வாறு பலமுறை திருப்பணிகள் நிகழ்ந்திருப்பதால் கோயிலின் பண்டைய கலைப்பாணி முற்றிலும் மாற்றப்பட்டது.

இக்கோயிலின் கோபுரமும் திருச்சுற்று மதிலும் பொ.யு. 18-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டவை. இதே காலகட்டத்தில் முகமண்டபத்திற்குத் தென்புறத்தில் பிரம்மதேவருக்குச் சிறிய கருவறையும் எழுப்பப்பட்டது. இதன் கருவறையின் விமான மேற்பகுதி தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசர்களது கலைப்பாணியைக் கொண்டு விளங்குகிறது.

கோயில் பிரகாரத்தின் வடக்குச் சுவரை ஒட்டி மூன்று சிறிய அறைகள் உள்ளன. இவற்றை முனிவாசம் என அழைப்பர். இங்கு சமண சமயச் சான்றோர் மூவர் உறைந்து தவநெறி போற்றியதாகக் கூறப்படுகிறது. இங்கு மல்லிசேன முனீஸ்வரரும், வாமனாச்சாரியாரும், விமல ஜினதேவரும் தவநெறியில் இருந்திருக்கலாம். இத்தலத்திலுள்ள கல்வெட்டுக்கள் இதனை மறைமுகமாக உணர்த்துகின்றன.

சிற்பங்கள், உலோகத்திருமேனிகள்

கருவறையில் ஆதிநாதர் அமர்ந்த கோலத்தில் தியான நிலையில் உள்ளார். மண்டபத்தினுள்ளும் இவரது கல்சிற்பம் ஒன்று உள்ளது. பிரம்மதேவர் கருவறையிலும் சிறிய அளவிலான சிற்பம் ஒன்று உள்ளது. இவையனைத்தும் 19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. அர்த்தமண்டபத்தினுள் ஆதிநாதர், அனந்தநாதர், மகாவீரர், பார்சுவநாதர், மகாவீரர், சதுர்விம்சதி தீர்த்தங்கரர்கள், தரணேந்திரன், சர்வானயக்ஷன், கணதரர், ஜினவாணி முதலிய பலரையும் குறிக்கும் உலோகத்திருமேனிகள் உள்ளன.

சித்தர் பாறை, கல்வெட்டுக்கள்

கீழ்இடையாலம் ஊரை ஒட்டியுள்ள ஏரியின் கரையில் அதிக உயரமில்லாத பாறையை சித்தர்பாறை என அழைக்கின்றனர். இந்த பாறையின் சமமான பகுதியில் வட்டவடிவ அமைப்பிற்குள் நான்கு பாதங்களும், இருக மண்டலங்களும் இரண்டு சாமரங்களும், புத்தகத்தினை வைக்கும் தாங்கியும் செதுக்கப்பட்டுள்ளன.

  • இவற்றைச்சுற்றி வடமொழியில் கல்வெட்டொன்று உள்ளது. இது மல்லிசேன முனீஸ்வரருக்கும், வாமனாச்சாரியாருக்கும் வணக்கம் செலுத்தும் செய்தியைக் கொண்டுள்ளது.
  • சற்று தொலைவிலுள்ள மற்றொரு பாறையிலும் வட்டவடிவ அமைப்பிற்குள் இரண்டு இரண்டு பாதங்களும், புத்தகம் தாங்கியின் திருவுருவமும் உள்ளன. இதிலுள்ள சாசனம் விமலஜினதேவர் என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டுக்கள் பொ.யு. 15-16-ஆம் நூற்றாண்டைய வரிவடிவம் கொண்டவையாதலால், இந்த மூன்று அறவோர்களும் பொ.யு. 15 அல்லது 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாவர்.
  • பலி பீடத்தில் இடையாலத்தைச் சார்ந்த ஜினதேவர் என்னும் கல்வெட்டு செய்தி பொறிக்கப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டு பொ.யு. 16-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இந்த கல்வெட்டு குறிப்பிடும் ஜினதேவரும் சித்தர் பாறையிலுள்ள சாசனம் கூறும் விமலஜினதேவரும் ஒருவரே.
  • ஆதிநாதர் கோயிலிலுள்ள மானஸ்தம்பம் முப்பத்தைந்து அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லினாலானது. அப்பாண்டை நயினார் என்பவர்மானத்தம்பத்தை நிறுவிய செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு பொ.யு. 19-ஆம் நூற்றாண்டைய வரி வடிவத்தைப் பெற்றுள்ளதால், சென்ற நூற்றாண்டில் இந்த மானஸ்தம்பம் நிறுவப்பட்டதை அறியலாம்.

மல்லிசேனரும், வாமனாச்சாரியாரும்

மல்லிசேனரும், வாமனாச்சாரியாரும் திருப்பருத்திக்குன்றத்திலுள்ள கோயிலை நிர்வகித்து வந்தவர்கள். இவர்கள் இடையாலம் ஊரைச்சார்ந்தவர்கள் எனவும், சமண சாத்திரங்களைக் கற்றுத்தேர்ந்த பேரறிவாளர்கள் எனவும், பிற்காலத்தில் திருப்பருத்திக் குன்றத்துக் கோயிலைக் கண்காணிக்கும் பொறுப்பினை ஏற்று நடத்தியவர்கள் என்றும் கருதப்படுகிறது. திருப்பருத்திக்குன்றத்திலுள்ள முனிவாசம் என்னும் கருவறைகளுள் இரண்டு அறைகள் மல்லிசேனருக்கும், வாமனாச்சாரியாருக்கும் ஏற்படுத்தப்பட்டவை. மேலும் இவர்கள் உயிர் நீத்த பின்னர் அவர்களது பூதவுடல்கள் திருப்பருத்திக் குன்றத்துக் கோயிலுக்குச் சற்று தொலைவிலுள்ள அருணகிரிமேட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. இதனைக் குறிக்கும் வகையில் அங்கு பீடங்களும் நிறுவப்பட்டிருக்கின்றன. திருப்பருத்திக்குன்றக் கோயிலிலுள்ள பீடங்களில் வாமனாச்சாரியாருக்கும், மல்லிசேனமுனிஸ்வரருக்கும் வணக்கம் செலுத்தும்வகையில் கல்வெட்டுக்கள் உள்ளன.

சித்தாந்தச் சுவடிகள்

இடையாலம் கோயிலில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு இலக்கியங்கள், தத்துவ நூல்கள் ஆகியவை ஓலைச் சுவடிகளாக இருந்துள்ளன. இந்த சித்தாந்தச் சுவடிகள் மூடுபத்திரியிலுள்ள கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இக்கோயிலில் வழிபாடுகளைச் செய்து வந்த உபாத்தியாரது கனவில் சித்தாந்தச் சுவடிகள் தோன்றி, அவை மூடுபத்திரிக்குக் கொண்டு செல்லப்பட வேண்டுமெனக் கூறியதாகவும், பின்னர் படிப்படியாக அச்சுவடிகள் மாயமாக மறைந்து மூடுபத்திரிக்குச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் நினைவாக யுகாதிப் பண்டிகையின் போது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குச் 'சித்தாந்தச் சாப்பாடு' என்னும் உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வழிபாடு

சித்தர்பாறையிலுள்ள அறவோர் திருவடிகளுக்கு ஆண்டுக்கொருமுறை உகாதிப்பண்டிகை நாளில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

உசாத்துணை

  • தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991

}


✅Finalised Page