கீதாரி

From Tamil Wiki

கீதாரி (2008) சு.தமிழ்ச்செல்வி எழுதிய நாவல். ஆடுமேய்த்து அலையும் வாழ்க்கை முறை கொண்ட கீதாரி இனக்குழுவைச் சேர்ந்த இரு பெண்களின் வாழ்க்கைகள் நவீன மயமாதலால் அலைக்கழிவதன் சித்திரத்தையும் கீதாரிச் சாதியைச் சேர்ந்த முதியவர் ராமு கீதாரியின் அழியாத மாண்பைப் பற்றிய சித்திரத்தையும் அளிக்கிறது

எழுத்து, வெளியீடு

சு. தமிழ்ச்செல்வி கீதாரி நாவலை 2008ல் எழுதினார். இதை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

ராமு கீதாரி என்னும் முதிய ஆடுமேய்ப்பவர் இந்நாவலின் கதை மையம். ராமு கீதாரி தன் மனைவி இருளாயி, மகள் முத்தம்மாள், வெள்ளைச்சாமி எனும் வளர்ப்பு மகன் ஆகியோருடன் வாழ்கிறார். ஒருநாள் ஒரு பைத்தியக்காரப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். இரட்டைப்பிள்ளைகள் பிறக்கின்றன. மூத்தவள் சிவப்பி, இளையவள் கரிச்சா. அவர்கள் இருவரில் சிவப்பியை உள்ளூர் பண்ணையார் சாம்பசிவம் ஆறுவயதில் தத்து எடுக்கிறார். கரிச்சா ராமு கீதாரியுடன் வளர்கிறாள். கரிச்சா வெள்ளைச்சாமியை மணந்துகொள்ள நேர்கிறது. சாம்பசிவத்தால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் சிவப்பி தற்கொலை செய்துகொள்கிறாள். வெள்ளைச்சாமியால் பிள்ளை இல்லை என ஒதுக்கப்படும் கரிச்சா ராமு கீதாரியுடன் வந்துவிடுகிறாள். அங்கே அவள் கருவுற்றிருப்பது தெரிகிறது. கரிச்சா பாம்புகடித்து மறைந்தபின் அவள் பிள்ளையை ராமு கீதாரி வளர்க்கிறார்.

இலக்கிய இடம்

முழுக்க முழுக்க மேய்ச்சல் வாழ்க்கை கொண்ட மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் நிகழும் கதை. அவர்களின் வாழ்க்கை பற்றிய ஏராளமான நுண்ணிய செய்திகளை அளிக்கிறது. நவீன வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ளும்போது பெண்களே பாதிக்கப்படுகிறார்கள் என்று காட்டுகிறது.யதார்த்தவாத அழகியலுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுதப்படாத வாழ்க்கையைச் சொல்வதனால் குறிப்பிடத்தக்க படைப்பாகிறது.

உசாத்துணை