கி. வா. ஜகந்நாதன்

From Tamil Wiki
Revision as of 23:44, 31 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "'''கி. வா. ஜகந்நாதன்''' ( கி.வா.ஜ) (11, ஏப்ரல் 1906 - 4 நவம்பர் 1988) தமிழறிஞர், இதழாளர், நாட்டாரியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர். உ.வே.சாமிநாதய்யரின் மாணவர். கலைமகள் இதழின் ஆசிரியர். == பிறப்பு, கல்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கி. வா. ஜகந்நாதன் ( கி.வா.ஜ) (11, ஏப்ரல் 1906 - 4 நவம்பர் 1988) தமிழறிஞர், இதழாளர், நாட்டாரியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர். உ.வே.சாமிநாதய்யரின் மாணவர். கலைமகள் இதழின் ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில்(11, ஏப்ரல் 1906 ல் வாசுதேவ ஐய-பார்வதியம்மாள் இணையருக்கு பிறந்தார். சிறிது காலத்தில் குடும்பம் சேலம் அடுத்த மோகனூருக்கு குடியேறியது. அங்கிருந்த திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். வாங்கல், குளித்தலை பள்ளிகளில் கல்வியைத் தொடர்ந்தார். உயர்நிலைப்பள்ளியை முடிப்பதற்குள் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டமையால் படிப்பு தடைப்பட்டது. அதன் பின் தானாகவே நூல்களைப் படித்தார். தன் 22 ஆவது வயதில் காந்தமலை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் கி.வா.ஜகந்நாதன் பேசியதைக்கேட்டு கிச்சு உடையார் என அழைக்கப்பட்ட சேந்தமங்கலம் சுயம்பிரகாச சுவாமிகள் இவரை அந்த ஊரிலேயே தங்கிப் பணியாற்றும்படி கூறினார். பஞ்சாயத்து அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றியபடியே, சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். ஆசிரமப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். சுவாமிகள் வழியாக அறிமுகமான ட்ரோவர் என்னும் ஆங்கிலேயருக்கும் தமிழ் கற்பித்தார்.

அக்காலத்தில் சேந்தமங்கலத்திற்கு வந்திருந்த ஸ்ரீ சிவசண்முக மெய்ஞான சிவாச்சாரியார் சுவாமிகளிடம் தமிழ் பயில விரும்பி விண்ணப்பித்தார். அவர் கி.வா.ஜகந்நாதனிடம் உ.வே.சாம்நாதய்யரிடம் சென்று தமிழ் பயிலும்படி ஆலோசனை சொன்னார். உ.வே.சாமிநாதய்யர் அப்போது சிதம்பரத்தில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வந்தார். சிதம்பரம் சென்று தன் விருப்பத்தை உ.வே.சாமிநாதய்யரிடம் கி.வா.ஜகந்நாதன் தெரிவித்தார். உ.வே.சாமிநாதய்யர் சென்னையில் பச்சையப்பா கல்லூரியில் தமிழாசிரியராகச் செல்லவிருப்பதாகவும் தன்னுடன் வந்து உடனிருந்து தமிழ் பயிலும்படியும் கி.வா.ஜகந்நாதனிடம் சொன்னார். ஆசிரியருடன் கி.வா.ஜகந்நாதன் சென்னைக்கு சென்று அவர் இல்லத்திலேயே தங்கினார். தமிழிலக்கியங்களை உ.வே.சாமிநாதய்யரிடம் பாடம் கேட்டார். அவருடைய பதிப்பு, ஆய்வுப்பணிகளுக்கு உதவினார்

உ.வே.சாமிநாதய்யரின் வழிகாட்டலில் கி.வா.ஜகந்நாதன் தமிழ் புலவர் தேர்வெழுதி மாநிலத்திலேயே முதலிடம் பெற்று வென்றார். திருப்பனந்தாள் ஆதீனத்தின் ஆயிரம் ரூபாய் பரிசையும் வென்றார்.

தனிவாழ்க்கை

கி.வா.ஜகந்நாதன் 1932ல் அலமேலு அம்மையாரை மணந்தார். கலைமகள் இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. அப்பணியில் சேர்ந்து இறுதிக்காலம் வரை கலைமகள் ஆசிரியராக நீடித்தார்.

இலக்கியவாழ்க்கை

கி.வா.ஜகந்நாதன் தன் 14 ஆவது வயதுமுதல் செய்யுள்கள் எழுதத் தொடங்கினார். ஜோதி என்னும் புனைபெயரில் அவர் எழுதிய செய்யுள்கள் அக்காலத்தைய இலக்கிய இதழ்களான தமிழ்நாடு போன்றவற்றில் வெளியாகின.


கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967-இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.