under review

கி. ஆ. பெ. விசுவநாதம்

From Tamil Wiki
Revision as of 10:59, 27 March 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)
கி. ஆ. பெ. விசுவநாதம்
கி. ஆ. பெ. விசுவநாதம்

கி. ஆ. பெ. விசுவநாதம் (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994)  பேச்சாளர், சிந்தனையாளர், ஏற்றுமதி வணிகர், அரசியல் களச்செயல்பாட்டாளர், தமிழறிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

பிறப்பு, இளமை

கி. ஆ. பெ. விசுவநாதம் திருச்சிராப்பள்ளி  நகரின் மையமான மணியக்காரத் தெருவில் நவம்பர் 10, 1899-ல் பெரியண்ணப்பிள்ளை – சுப்பம்மாள் தம்பதிக்கு 16வது பிள்ளையாகப் பிறந்தார்.

கி. ஆ. பெ. பள்ளிக்கூடம்  சென்று படிக்கவில்லை. 1904-ல் மருதமுத்துக்கோனாரிடம் திண்ணைப் பள்ளியில் தமிழும் கணிதமும் படித்தார். பிறகு, வேங்கடசாமி நாட்டார், வேதாசலம், கலியாணசுந்தரனார், சோமசுந்தர பாரதியார் போன்ற புகழ்பெற்ற தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கியங்கள் கற்றுப் புலமை பெற்றார். வாலையானந்த சுவாமிகளிடம் சைவத்தைக் கற்றறிந்தார்.

கி. ஆ. பெ. அவர்களின் தந்தையார் பெரியண்ணன் அவர்கள் தமது மூத்த சகோதரர் கிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோரின் முதலெழுத்தைக் குறிக்கும் வகையில் ‘கி.ஆ.பெ.’ (K.A.P) எனும் பெயரினைத் தொழிலுக்குப் பயன்படுத்தியதால் இந்தப் பெயரே காலப்போக்கில், விசுவநாதம் அவர்களுக்கும் தலைப் பெழுத்தாக நிலைத்து விட்டது.

தனி வாழ்க்கை

கி. ஆ. பெ. 1907ம் ஆண்டிலிருந்து தந்தைவழி புகையிலை தொழிலும் சுருட்டு வணிகமும் செய்தார். பணம் சம்பாதிக்க மலேசியா, சிங்கப்பூர் சென்று வந்தார்.

1920, செப்டம்பர் 15ம் தேதி முதல் திருமணம். செல்லக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். மூன்றாண்டுகளில் மகப்பேற்றின் போது தாயும் சேயும் இறந்தனர்.

இரண்டாவது இராசம்மாள் என்பவரை மணந்தார். நான்கு ஆண்டுகளில் அவரும் காலமானார்.

மூன்றாவதாக தமக்கையின் மகள் சுப்புலட்சுமியை மணந்தார். இவர்களுக்கு 6 பெண் மற்றும் 4 ஆண் பிள்ளைகள்.

இலக்கியவாழ்க்கை

கி. ஆ. பெ. விசுவநாதத்தின் முதல் பேச்சு மேடை  பிப்ரவரி 5,1921 இல் ஒட்டப்பிடாரத்தில் அமைந்தது. 'அன்பு' என்ற தலைப்பில் பேசினார்.

இலக்கியம், இசை, நாடகம், அரசியல், சமூகம், சீர்திருத்தம், கல்வி, வாணிகம், தொழிலாளர், ஆராய்ச்சி, மேடை, வானொலி என்று 12 துறைகளில் கி. ஆ. பெ. விசுவநாதம் பேசியுள்ளதாக ந.சுப்புரெட்டியார் கூறுகிறார்.

“உணவே மருந்து--மருந்தே உணவு” என்பது அவரின் புகழ்மிக்க வாக்கியம்.

தமிழர்நாடு எனும் இதழை ஆகஸ்ட் 17,1947-ல் தொடங்கினார். தமிழின் சிறப்பு, தமிழ் இசை, திருக்குறள் ஆய்வு, தமிழ் மருத்துவம், கல்வி என்று தமிழர்நாடு பல துறைகளில் பங்களித்தது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வடிவமைத்ததில் கி. ஆ. பெ யின் பங்கு முக்கியமானது.

'தமிழகப் புலவர் குழு' என்ற அமைப்பை தனது 60-ம் வயதில் உருவாக்கினார்.

இலக்கிய இடம்

கி.ஆ.பெ.விஸ்வநாதம் மொத்தம் 25 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் பல அவரது சிந்தனை உரைகளின் வரிவடிவமே.

அவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், திருக்குறள் விளக்கங்கள், சங்க இலக்கிய உரைகள் பள்ளி மாணவர்களுக்காக எளிய நடையில் படைக்கப்பட்டவை.

கி.ஆ.பெ அவர்களின் நூல்கள் தனிமனித ஒழுக்கம், நற்பண்புகளைப் பேணுதல், இல்லறத்தைச் செம்மையாக்குதல், தமிழ் மொழியுணர்வை ஊட்டுதல், சமூக ஒற்றுமையுணர்வின் மகத்துவம், தமிழைக் கற்க இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதல் போன்ற அம்சங்களை வலியுறுத்துவனவாக அமைந்தன.

மறைவு

கி.ஆ.பெ.விஸ்வநாதம் டிசம்பர் 19, 1994 -ல் தனது 96-ம்  வயதில் காலமானார்.

விருதுகள்

  • "முத்தமிழ்க் காவலர்" என்னும் பட்டத்தை, அன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி.எம். நாராயணசாமியால் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் டிசம்பர் 17, 1956 இல் வழங்கப்பட்டது.
  • "சித்த மருத்துவ சிகாமணி" விருது 1965ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில் வழங்கப்பட்டது.
  • "வள்ளுவ வேல்" என்னும் விருதை 1975ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நல்வழி நிலையம்  வழங்கியது.

படைப்புகள்

விஸ்வநாதம் எழுதிய நூல்கள் மொத்தம் 36. அதில் 23 நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2007-08-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

  • வள்ளுவர் (1945)
  • வானொலியிலே (1947)
  • ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (1950)
  • அறிவுக்கு உணவு (1953)
  • தமிழ் மருந்துகள் (1953)
  • வள்ளுவரும் குறளும் (1953)
  • எண்ணக்குவியல் (1954)
  • தமிழ்ச்செல்வம் (1955)
  • திருக்குறள் புதைபொருள் - பாகம் 1 (1956)
  • திருக்குறள் கட்டுரைகள் (1958)
  • நான்மணிகள் (1960)
  • வள்ளுவர் உள்ளம் (1964)
  • ஆறு செல்வங்கள் (1964)
  • தமிழின் சிறப்பு (1969)
  • நல்வாழ்வுக்கு வழி (1972)
  • நபிகள் நாயகம் (1974)
  • திருக்குறள் புதைபொருள் - பாகம் 2 (1974)
  • மணமக்களுக்கு (1978)
  • வள்ளலாரும் அருட்பாவும் (1980)
  • எனது நண்பர்கள் (1984)
  • திருக்குறளில் செயல்திறன் (1984)
  • அறிவுக்கதைகள் (1984)
  • மாணவர்களுக்கு (1988)
  • எது வியாபாரம்? எவர் வியாபாரி? (1994)

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.