under review

கின்றாரா தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 20:02, 6 May 2024 by Logamadevi (talk | contribs)
கின்றாரா பள்ளிச்சின்னம்

கின்றாரா தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் பூஞ்சோங் பட்டணத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் மலேசியக் கல்வியமைச்சுப் பதிவெண் BBD8455.

கின்றாரா தமிழ்ப்பள்ளி

கின்றாரா தமிழ்ப்பள்ளிக்கு வித்திட்டவர் தோட்டப் பாட்டாளியாக இருந்த திரு. முனுசாமி. 1936-ம் ஆண்டு அவரது வீட்டில் ஐந்து காசு கட்டணத்தில் முதல் வகுப்பு தொடங்கியது. பின்னர் 1938-ம் ஆண்டு தொடங்கி ஒரு மருத்துவரின் மகனான திரு. ஜெய் என்பவரால் இவ்வகுப்பு தோட்டத்தில் குழந்தைகள் பராமரிக்கும் இடமான ஆயாக் கொட்டகையில் நடைபெற்றது. இருப்பினும் ஜப்பானிய ஆட்சியின் போது இப்பள்ளி மூடப்பட்டது.  

ஜப்பானியர் ஆட்சிக்குப் பிறகு

கின்றாரா தமிழ்ப்பள்ளி ஜப்பானியர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு கின்றாரா தோட்ட மேலாளர், தமிழ் கற்ற ஆங்கிலேயரான திரு. மில்லர் என்பவரால் கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளியாக மீண்டும் தொடங்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடக்கக்கல்வி பெறுவதற்காகப் பலகைக் கட்டிடம் அவரால் எழுப்பப்பட்டது.

பள்ளிக் கட்டிட வரலாறு

கின்றாரா தமிழ்ப்பள்ளி

தொடக்கத்தில் பலகைகளால் ஆன கட்டிடத்திலேயே கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி இயங்கிவந்தது. மாணவர்களின் அதிகரிப்பால் 1964-ம் ஆண்டு இப்பள்ளியின் இரண்டாவது கட்டிடம் டத்தோ மைக்கல் சென் முயற்சியால் கட்டப்பட்டது. 1984-ம் ஆண்டு இத்தோட்டம் ‘பெனின்கலர் அண்ட் ஐலண்ட்ஸ்’ எனும் நிர்வாகத்திடம் வீடமைப்புத் திட்டத்திற்காக விற்கப்பட்டது. அப்போதைய பூச்சோங் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ யாப் பியான் ஹான், ம.இ.கா, மற்றும் தோட்ட மக்கள் முயற்சியால் ‘பெனின்கலர் அண்ட் ஐலண்ட்ஸ்’ நிறுவனத்தினர் கின்றாரா தமிழ்ப்பள்ளிக்கு, பள்ளி இருக்கும் இத்திலேயே 1.81 ஏக்கர் நிலப்பரப்பில் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தனர். 1992-ம் ஆண்டு இறுதியில் மேலும் இரண்டு வகுப்பறைகள் கொண்ட இணைக் கட்டிடம் கட்டப்பட்டது.

மார்ச் திங்கள் 2002-ம் ஆண்டு தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியோரின் உதவியோடு கின்றாரா தமிழ்ப்பள்ளியின் மூன்று மாடிக்கட்டிடம் எழுந்தது. தொடர்ந்து 2004-ம் ஆண்டில் மாணவர்களின் அதிகரிப்பால் மேலும் இரண்டு வகுப்பறைகள் கொண்ட இணைக்கட்டிடம் கட்டப்பட்டது.

கின்றாரா தமிழ்ப்பள்ளியின் தொடர் வளர்ச்சிக்குப் பல தனியார் நிறுவனங்களும் உதவின. பள்ளி நூலக சீரமைப்பு, பள்ளித் திடல் சீரமைப்பு, கணினி அறை, சிற்றுண்டிச்சாலை, பள்ளி நுழைவாயில், ஆசிரியர் உணவருந்தும் அறை என அனைத்து வசதிகளும் கொண்ட பள்ளியாகக் கின்றாரா தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வந்தது. நில மேம்பாட்டாளரால் பள்ளிக்கு மண்டபமும் இலவசமாக் கட்டித்தரப்பட்டது. தொடர்ந்து இரண்டு வகுப்பறைகள் கொண்ட பாலர் பள்ளியும் எழுப்பப்பட்டது.

கின்றாரா பள்ளிக்கட்டிடம்

புதிய கட்டிடம்

ஜனவரி 22, 2012-ல் கின்றாரா தமிழ்ப்பள்ளியில் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போதைய பிரதமர் டத்தோ நஜீப் பின் துன் அப்துல் ரசாக் பள்ளிக்கு நான்கு மாடி இணைக்கட்டிடம் கட்டுவதற்காக ரி.ம 3.5 மில்லியன் கொடுப்பதாக வாக்குறுதி தந்தார். பல வருடங்களாகச் சர்ச்சைக்குள்ளாகி இழுபறியாக இருந்த நிலை மாறி 2022-ம் ஆண்டு கட்டுமானம் நிறைவு பெற்றது. பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நான்கு மாடி புதிய கட்டிடத்தோடு கின்றாரா தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.

பள்ளி முகவரி

SJK (T) KINRARA
JLN PUCHONG, PETALING,
47100 PUCHONG, SELANGOR

உசாத்துணை

க.முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015)


✅Finalised Page