கா.சுப்ரமணிய பிள்ளை

From Tamil Wiki
Revision as of 14:54, 16 February 2022 by Jeyamohan (talk | contribs)

கா. சுப்ரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை) (காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை) (5 நவம்பர் 1888 - 30 ஏப்ரல் 1945) தமிழறிஞர், தமிழ் இலக்கிய வரலாறாசிரியர். சைவசித்தாந்த வல்லுநர், வழக்குரைஞர், தமிழ்ப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்; உரையாசிரியர், சொற்பொழிவாளர்.தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளை அறிந்த பன்மொழிப் புலவர்.

பிறப்பு, கல்வி

கா. சுப்பிரமணியபிள்ளை திருநெல்வேலியில் சைவ வெள்ளாளர் மரபில் காந்திமதிநாத பிள்ளை, மீனாட்சியம்மை இணையருக்கு 1888 – நவம்பர் – 5 ல் பிறந்தார். திருநெல்வேலி திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி. 1906ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறினார். 1908 -ல் ஆண்டில் சென்னை மாகாணக் கல்லூரியில் எஃப்.ஏ (Fellow of Arts) தேர்வில் வென்றார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்றார். பவர்முர்கெட் என்ற ஆங்கிலேயர் தமிழ் ஆராய்ச்சிக்கென அமைத்த பரிசினைப் பெற்றார். 1910ஆம் ஆண்டில் வரலாற்றைச் சிறப்புப் பாடமாகப் படித்து பி.ஏ பட்டம்பெற்றார்.1913ஆம் ஆண்டில் ஆங்கில இலக்கியத்திலும் 1914ஆம் ஆண்டில் தமிழில் இலக்கியத்திலும் தேறிஎம்.ஏ பட்டங்களைப் பெற்றார். சென்னைச் சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல் பட்டத்தையும் 1917ஆம் ஆண்டில் எம்.எல் பட்டத்தையும் பெற்றார்.

பொதுவாழ்க்கை

சென்னையில்

நீதிபதி சேஷகிரி ஐயருடைய உதவியால், அவருக்கு 1919ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார். கா. சு. பிள்ளை 1920ஆம் ஆண்டில் குற்றங்களின் நெறிமுறைகள் (Principles of Criminology) என்னும் தலைப்பில் 12 சொற்பொழிகள் ஆற்றி கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் இரவீந்திரநாத் தாகூர் குடும்பத்தினர் உருவாக்கியிருந்த ‘தாகூர் சட்ட விரிவுரைப் பரிசு’ பெற்றார். 1922ஆம் ஆண்டில் சென்னை மாகாண அரசு அமைத்த கலைச் சொல்லாக்கக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக இடம் பெற்றார். பிறமொழி கலவாத தனித் தமிழ்நூல்களை வெளியிடுவதற்கென்று உருவாக்கப்பட்ட திருநெல்வேலி தென்னிந்தியா சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக 1926ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியை 1932ஆம் ஆண்டு வரை வகித்தார். தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான சர். பி. டி. தியாகராயச் செட்டியாரின் உதவியால் சட்டப்பேராசிரியராக உயர்ந்தார். 1927ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் உருவாக்கப்பட்ட விதிமுறையின் காரணமாக 1927ஆம் ஆண்டில் சட்டப் பேராசிரியர் பதவியைத் துறந்தார்.

நெல்லையில்

பேராசிரியப் பதவியைத் துறந்த கா. சு. பிள்ளை தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். 1927 ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு வரை அங்கேயே தங்கியிருந்து சைவக்குரவர்களான சுந்தரர், சேக்கிழார், மணிவாசகர் முதலியவர்களைப் பற்றிய வரலாற்று ஆய்விலும் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பணியிலும் ஈடுபட்டார். 1930ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகியதும் கா. சு. பிள்ளை மீண்டும் நெல்லைக்குத் திரும்பினார். அங்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு திருநெல்வேலி நகராட்சியில் உறுப்பினராகப் பணியாற்றினார். நெல்லை நகரில் அமைந்திருக்கும் காந்திமதி அம்மன் உடனுறை நெல்லையப்பர் கோயிலின் அறங்காவலராகவும் பணியாற்றினார். அப்பொழுது, தமிழ் வழிபாட்டுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் தேவார, சைவ ஆகமப் பாடசாலைகளைத் தோற்றுவித்தார்

1934ஆம் ஆண்டில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு முதன்முறையாக நெல்லையில் கூடியது. அம்மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவராக கா. சு. பிள்ளை பொறுப்பேற்றார். அம்மாநாட்டில் தமிழின் பெருமை, தமிழர் பெருமை குறித்து எடுத்துரைத்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவின்படி, பாளையங்கோட்டையில் 1934ஆம் ஆண்டில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. அச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற கா. சு. பிள்ளை 1938ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார்.

காஞ்சியில்

கா.சு. பிள்ளை 1938ஆம் ஆண்டு முதல் 1940ஆம் ஆண்டு வரை காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார். அப்பொழுது தன் நண்பர் இசைமணி சுந்தரமூர்த்தி ஓதுவார் என்பவருடன் தங்கியிருந்தார்.

சிதம்பரத்தில்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராக 1929 – 30 ஆம் கல்வியாண்டில் பணியாற்றினார். பத்தாண்டுகள் கழித்து 1940-41ஆம் கல்வியாண்டிலிருந்து 1943-44ஆம் கல்வியாண்டு வரை நான்காண்டுகள் அப்பல்கலைக் கழகத்தில் மீண்டும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, 1-7-1944ஆம் நாள் ஓய்வுபெற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது முறையாக தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய பொழுது வாதநோயால் பாதிக்கப்பட்டார். எனவே, தன்னுடைய ஆய்வுரைகளையும் நூல்களையும் உதவியாளர் ஒருவர் மூலம் எழுதிவந்தார். 1944ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் இருந்து நெல்லைக்குத் திரும்பினார்

மறைவு

கா. சு. பிள்ளை, தம்முடைய 56வது வயதில் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் மரணமடைந்தார்.