கால்டுவெல்

From Tamil Wiki
Revision as of 17:56, 4 February 2022 by Subhasrees (talk | contribs) (கால்டுவெல் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இராபர்ட் கால்டுவெல்
இராபர்ட் கால்டுவெல்

கால்டுவெல் (இராபர்ட் கால்டுவெல்) (மே 7, 1814 – ஆகஸ்ட் 28, 1891) தமிழ்ப் பணியாற்றிய கிறிஸ்தவ மதபோதகர். தமிழாய்வாளர், சமூகப்பணியாளர், கல்விப்பணியாளர். தமிழில் திராவிடம் என்னும் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர்.

திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்து, பிராந்திய வரலற்றாய்வுக்கான முன்வரைவு, தேசியக்கல்விக்கான வரைபடச் சித்திரம், இனவரைவியல் ஆய்வுகளுக்கான முன்வடிவம் எனப் பல தளங்களில் அடிப்படை கருத்துருவங்களை உருவாக்கிய முன்னோடி.

’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’, 'திருநெல்வேலி வரலாறு' இவருடைய முக்கியமான படைப்புகள்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

கால்டுவெல் அயர்லாந்தில் கிளாடிஸ் என்னும் ஆற்றங்கரையில் அன்டிரிம் என்னும் சிற்றூரில் மே 7, 1814 அன்று பிறந்தார்.

தொடக்கக் கல்வியை அயர்லாந்தில் பயின்ற கால்டுவெல் பத்தாவது வயதில் பெற்றோருடன் தாய்நாடாகிய ஸ்காட்லாந்துக்கு சென்றார். பதினாறு வயது வரை ஆங்கில இலக்கிய இலக்கணங்களைத் பயின்று தேர்ச்சி பெற்றார். டப்ளின் ஓவியக் கல்லூரியில் ஓவியத்துறையில் கற்று  சிறந்த ஓவியருக்கான பரிசுகளைப் பெற்றிருக்கிறார். அருள்திரு அர்விக் என்பவரின் தூண்டுதலால் இறையியலில் ஈடுபாடு கொண்டவரானார்

கால்டுவெல் இருபதாவது வயதில், லண்டன் மாநகரக் கிருத்துவச் சமயத் தொண்டர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். இச்சங்கத்தின் சார்பில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, ஆங்கிலம் இலத்தீன் கிரேக்கம் ஆகிய மொழிகளைக் கற்றார். அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர். டேனியல் சேண்ட்போர்ட் என்பவர் கிரேக்க மொழியின் சிறப்புகளைப் பிற மொழிகளுடன் ஒப்புமைப்படுத்தி விளக்கிய திறனால் ஈர்க்கப்பட்டார். சமயநூல்களின் ஒப்பியல், மொழி ஒப்பியல் ஆகியவற்றில் கால்டுவெல்லுக்கு அப்போதே ஆர்வமிருந்தது.

தனி வாழ்க்கை

லண்டன் திருச்சபை சார்பாக ஜனவரி 8, 1838 அன்று கால்டுவெல், கப்பல் மூலம் சென்னை வந்தார். ஐரோப்பாவில் இருந்து கடலில் பயணம் செய்தபோது இவர் வந்த கப்பல் மீது பிரெஞ்சு கப்பல் ஒன்று மோதி மூழ்கியது. அதில் பலர் இறந்து அறுவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். கப்பலை 'பிளிமத்' துறைமுகத்தில் பழுது பார்த்து பின்னர் கிளம்பியது. அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் இருந்து இந்தியா வரும் கப்பல்கள் தென்னாப்பிரிக்கா வழியாக வரவேண்டி இருந்ததால், நான்கு மாதப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும் குடிமைப்பணி அதிகாரியுடன் நட்பு ஏற்பட்டது. அவர் ஆந்திராவில் பணி புரிந்தவர் என்பதால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார். அவர் வழியாகக் கால்டுவெல் அம்மொழிகளை அறிமுகம் செய்து கொண்டார்[1].

கால்டுவெல்லுக்கு சென்னையில் ட்ரூ, வின்ஸ்லோ, பவர், ஆண்டர்சன் ஆகிய ஆங்கிலேய தமிழறிஞர்களின் நட்பு கிடைத்தது. ட்ரூ திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். ஈழதேசத்தில் இறை சேவையில் இருந்த வின்ஸ்லோ தமிழகராதி தொகுத்து வெளியிட்டிருந்தார். பவர் கிறிஸ்தவ சமய நூல்கள தமிழாக்கம் செய்தவர். ஆண்டர்சன் சென்னையில் ஆங்கிலக் கல்லூரி துவங்கியவர். இவர்களுடனான நட்பு கால்டுவெல்லின் தமிழார்வத்தையும் தமிழறிவையும் மேலும் வளர்த்தது.

கால்டுவெல் 1844 இல் நாகர்கோயில் இலண்டன் மிஷன் அமைப்பைச் சேர்ந்த சார்ல்ஸ் மால்ட் என்பவரின் மகள் எலிசா மால்ட் (1822-1899) என்பவரை மணந்தார். அவர்களுக்கு சார்லஸ் கால்டுவெல், வில்லியம் ஆல்ஃப்ரட், அடிங்டன், ஆர்தர் லூயி, என்னும் நான்கு மகன்களும் இசபெல்லா, மார்த்தா லூயிசா, மேரி எமிலி ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர். கால்டுவெல்லின் மனைவி, எலிசா தமிழ்மொழியிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.

இறையியல் பணி

தென் தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் ராபர்டோ டி நொபிலி மற்றும் வீரமாமுனிவர் காலம் முதலாகவே கிறிஸ்தவம் வேரூன்றத் தொடங்கியிருந்தது. ஸ்வார்ட்ஸ் (சுவார்த்தர்) என்னும் போதகர் திருநெல்வேலி பகுதியில் இறைப்பணியில் புகழ் பெற்றிருந்தார். அந்தக் காலகட்டத்தில் நாடார் இனத்தவர் பலரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியிருந்தனர். அவ்விதம் புதிதாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த பலரும் முதலூர் என ஒரு ஊர் அமைத்துக் குடியேறினர். பின்னர் அவ்விதம் திருநெல்வேலி மாவட்டத்தில் பல ஊர்கள் கிறிஸ்தவக் குடியிருப்புகளாகத் தோன்றின. இடையான்குடியிலும் அதுபோல கிறிஸ்தவர்கள் பலர் வாழ்ந்தனர். அப்போது ஒருமுறை தாமிரபரணியில் பெருவெள்ளம் ஏற்பட்டு பல சிற்றூர்களை அழித்தது. வெள்ளத்தால் வீடிழந்த மக்கள் கொள்ளைக் காய்ச்சல் என்னும் நோயால் இறந்தனர். அது மதம் மாறியதால் ஏற்பட்ட தெய்வ சாபமென பல மக்கள் அஞ்சினர்.  இக்காலகட்டத்தில் தொடர்ச்சியாக கிறித்தவர்கள் தங்கள் பழைய மதத்திற்கு திரும்பிச் சென்றனர்.

இந்தக் காலகட்டத்தில்தான் சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த கால்டுவெல் ஏறத்தாழ நானூறு மைல் தொலைவில் உள்ள திருநெல்வேலி பகுதிக்கு நடைபயணமாக செல்ல முடிவெடுத்தார். செல்லும் வழியில் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைகளையும் மொழியையும் நன்கு அறிந்து கொள்ள முடியுமென எண்ணினார். சிதம்பரம், மாயவரம் வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில காலம் தங்கி  டேனிஷ் மிசன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு கும்பகோணம் வழியாகத் தஞ்சாவூர் சென்று, அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு உரையாடினார். திருச்சிராப்பள்ளி வழியாக நீலமலை(ஊட்டி) சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் மதபோதகரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கினார். கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் தங்குமிடம் மறுக்கப்பட்டு துன்புற்றார். மதுரையில் திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியரைக் (Tracy) கண்டு உரையாடினார். பின்பு நவம்பர் 1841-ல் நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார். நவம்பர் 28, 1841-ல் நாசரேத்தில் தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒரு விரிவுரையும் செய்தார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதலூரில் விரிவுரையை நிகழ்த்தினார். அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம் சுற்றி அடைந்தார்.

இடையான்குடி கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. கால்டுவெல் அதை மீட்டமைத்தார். அந்த ஊர் அவருடைய செயல்மையமாக அமைந்தது, கடைசிக் காலத்தில் அவர் நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது.

1880-ல் இடையங்குடியில் கால்டுவெல் ஒரு தேவாலயத்தை கட்டினார். அந்த தேவாலயத்திற்காக லண்டனில் இருந்து மணிகள் கொண்டு வரப்பட்டன.

கல்விப் பணி

இடையாங்குடி கள்ளியும் பனைகளும் மட்டுமே வளரும் செம்மண் தேரிப் பகுதி. எளிய குடிசைகளே அதிகம் இருந்தன. அங்கிருந்த ஒரு கிறிஸ்தவக் கோவிலையும் சிறு வீட்டையும் திருத்தியமைத்து சேவையைத் தொடங்கினார். கால்டுவெல் இடையான்குடியை மையமாக்கி முதன்மையாக கல்விப்பணியை முன்னெடுத்தார். அனைத்து மதத்தினருக்கும் கல்வி அளிப்பது அவருடைய கொள்கையாக இருந்தது. அதைப்பற்றி அன்று சில எதிர்ப்புகள் இருந்தாலும் கால்டுவெல் அதில் உறுதியாகவே இருந்தார்.

எளிய மக்களுக்கான உண்டு-உறைவிடப்பள்ளிகள், பெண்களுக்கான தனிப்பள்ளிகள் என பல கல்வி நிறுவனங்களை அமைத்தார். இறையியல் பள்ளி ஒன்றையும் உருவாக்கினார். சாயர்புரம் பள்ளி கால்டுவெல்லால் கல்லூரியாக ஆக்கப்பட்டது. பட்டப்படிப்பு வரை அதற்கு அனுமதி கிடைத்தது. தமிழகத்தின் கல்வி மறுமலர்ச்சியில் கால்டுவெல்லின் பங்களிப்பு முக்கியமானது.

1877 –ல் இடையான்குடியில் பெண்களுக்காக ஒரு பள்ளியை உருவாக்கினார். மத வேறுபாடின்றி அனைவரும் பெண்களை அங்கு கல்விக்கு அனுப்ப வேண்டும் என்று கோரினார். அதன் பொருட்டு அன்றிருந்த உயர் குடிகளின் வீடுகளுக்கு பெண்களை அனுப்பி அவர்கள் இல்லத்து பெண்களை கல்வி கற்க அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். அப்போது அவர்களில் சிலர் “கல்வி என்பது தாசிகளுக்கும் அரச குமாரிகளுக்கும் உரியது. எங்கள் வீட்டுப்பெண்கள் அரசகுமாரிகள் அல்ல, அப்படியென்றால் தாசிகள் என்று அர்த்தமா?” என்றார்கள் என்பது செவிச்செய்தி.

கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம் நூலில் இடம்பெற்றுள்ள இடையான்குடி பற்றிய சித்தரிப்பில் தான் உருவாக்கிய நகரை மேற்பார்வையிட மரத்தில் மேல் ஏறி உட்கார்ந்திருக்கிறார் கால்டுவெல். அப்பகுதியை பொட்டலாக விற்ற நில உரிமையாளரான நாடார் தன் நிலத்தை பாத்திபோட்டு சீரழித்துவிட்டார் என்று புலம்புகிறார். சீரான தெருக்கள் அந்த அளவுக்கு அவரது கண்களுக்கு வித்தியாசமாக தெரிகின்றன.[2]

மொழியியல் ஆய்வுகள்

கால்டுவெல் இடையன்குடியில் இருந்த காலத்தில் திருக்குறளையும், சீவக சிந்தாமணியையும், நன்னூலையும் கற்றார். இடையான்குடியில் 50 ஆண்டுகள் மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்னும் நூல் மிக முக்கியமான படைப்பு. அந்த நூலின் மூலம் இந்திய மொழிகளில் திராவிட மொழிக்குடும்பம் தனித்து இயங்கும் ஓர் அமைப்பு என்ற கருத்தை ஆய்வுலகில் நிறுவியவர்.[3]


கால்டுவெல் இந்த ஒப்பிலக்கண ஆய்வை அவருடைய இந்தியவியல் ஆய்வின் ஒரு பகுதியாக நிகழ்த்தினார். திராவிட மொழிக்குடும்பம் என்னும் கருதுகோளை உருவாக்கினார். தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகளை ஆராய்ந்த கால்டுவெல்  அவற்றுக்கு ஒரு பொதுவான இலக்கண அமைப்பு இருப்பதை உணர்ந்தார். அவை சம்ஸ்கிருதச் சொற்களஞ்சியம், சம்ஸ்கிருத இலக்கணம் ஆகியவற்றின் துணையின்றி தனித்தியங்கும் இயல்பு கொண்டவையாக இருப்பதால் இவை முற்றிலும் வேறு மொழிக்குடும்பம் என்பது அவருடைய கருத்து. இந்தமொழிகளை அவர் திராவிட மொழிகள் என்றார். திராவிட என்னும் சொல்லை சிற்ப- தாந்த்ரீக மரபில் இருந்து எடுத்துக்கொண்டார். திராவிட என்பது ஒரு இனமாக இருக்கலாம் என்ற ஊகத்தை அவர் முன்வைத்தார். அந்த ஊகத்தை உடனடியாக ஒரு கோட்பாடாக ஆக்கிக் கொண்டு திராவிட இயக்கம் உருவானது.[ii][4] அவரிடமிருந்தே திராவிடவியல் ஆய்வுகள் தொடங்குகின்றன.

கால்டுவெல் முன்வைத்த திராவிடமொழிகொள்கை பின்னர் பெரிதாகப் பேசப்பட்டது. தமிழ் மொழிக் குடும்பம் இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்ல என்றாலும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து அக்கருதுகோளை முதன்மைப்படுத்தியவர் கால்டுவெல். இவரது மொழி ஆராய்ச்சியின் விளைவாக திராவிட இனவாதம்  தமிழகத்தில் வலுவாக உருவானது. எல்லிஸ், கால்டுவெல் போன்றோரால் முன்வைக்கப்பட்டு மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, ஞானியார் அடிகள் போன்ற சைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது.[5]

1856 ஆம் ஆண்டு Comparative Grammar of the Dravidian of South Indian Family Language என்ற ஆங்கில நூலை எழுதினார். இந்நூல் உலக அளவில் மொழியியல் ஆய்வுக்குப் பெரிதும் துணை செய்யும் நூலாக இருக்கிறது. இந்நூலுக்காக அவர் படித்த கிளாஸ்கோ பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.   திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று அழைக்கப்படும் இந்நூலின் தமிழ் வடிவப் பெயர் “திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்”.

”குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன் முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர். குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும், நில வழியாகவும் பெலுசித்தான், மெசபடோமியா முதலிய வடமேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர்.” என்பது கால்டுவெல்லின் கருத்து.

வரலாற்று ஆய்வுகள்

திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம்.

திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி கால்டுவெல் ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஆர்வம் காட்டி பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத்தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் இறுதியில் "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராஸ் அரசினால் வெளியிடப்பட்டது.

முறைப்படி தரவுகளைச் சேகரிப்பது, அவற்றை ஒழுங்குபடுத்தி முடிவுகளை அடைவது, அவற்றை ஆர்வமூட்டும் முறையில் முன்வைப்பது ஆகியவற்றில் ஐரோப்பிய- கிறித்தவ முறைமையை அறிமுகம் செய்தவர். புராணங்கள் தொன்மங்கள் நம்பிக்கைகள் ஆகியவற்றை தவிர்த்து வரலாற்றை தரவுகளின் அடிப்படையில் எழுத நமக்குக் கற்பித்த முன்னோடிகளில் ஒருவர் கால்டுவெல். நம் வரலாற்றெழுத்தை தொடங்கிவைத்தவர் என்ற முறையில் முக்கியமானவர்[6].

திருநெல்வேலி சரித்திரம் மூலம் நம்முடைய பிராந்திய வரலற்றாய்வுக்கான முன்வடிவை உருவாக்கினார்.

அவர் நிறுவிய கல்வி நிறுவனங்கள் மூலம்  இந்தியத் தேவையையும் மேலைநாட்டு ஞானத்தையும் இணைத்து தேசியக்கல்விக்கான வரைபடச்சித்திரத்தை தொடங்கி வைத்தார்.

‘திருநெல்வேலிச் சாணார் வரலாறு [1849]’ என்ற நூல் வழியாக நம்முடைய இனவரைவியல் ஆய்வுகளுக்கான முன்வடிவத்தை உருவாக்கினார்[3] ஆனால் அந்த நூல் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது, நெடுங்காலமாக அச்சிலும் இல்லை. வாழ்நாள் முழுக்க நாடார்கள் நடுவே பணியாற்றியவராயிருப்பினும் அந்த நூலில் நாடார்களை கிட்டத்தட்ட ‘வரலாறு அற்றவர்களாக’ ’பண்படாக் குடிகளாக’ சித்தரித்திருக்கிறார். அவர்களின் குமுக நெறிகள், வழிபாட்டு முறைகள் அவருக்குப் பிடிகிடைக்கவில்லை.

மறைவு

தன் 77ஆம் வயதில், ஆகஸ்ட் 28, 1891 ஆம் நாள், கொடைக்கானலில் மரணமடைந்தார்.   இடையான்குடி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு

  • ’அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல்’ - யோ.ஞானசந்திர ஜான்சன் - கால்டுவெல்லின் வாழ்க்கையை, அருட்பணியை, சேவையை விரிவான குறிப்புகளாக முன்வைக்கும் ஆய்வுநூல்.
  • கால்டுவெல்லின் பன்முகப் பணிகள் - ப.ச.ஏசுதாசன்
  • கால்டுவெல்லின் நினைவலைகள் - பி.கனகராஜ் மொழியாக்கம்


பிற ஆய்வு நூல்கள்

சமகாலத்தில் கால்டுவெல் பற்றிய தனிக்கவனத்தை உருவாக்கியவர் ஆய்வாளர் எம்.வேதசகாயகுமார். கால்டுவெல்லைப்பற்றிய இருவாசிப்புகள் உள்ளன, ஒன்று ஆதிக்கச்சாதிகளின் கோணத்தில் நிகழ்த்தப்பட்ட் திராவிட இயக்கப் பார்வை என்றும் இன்னொன்று அடித்தள மக்களின் விடுதலைக்கு உதவியவர் என்ற கோணத்திலான பார்வை என்றும் இரண்டாம் பார்வையில் கால்டுவெல்லையும் அவர் சார்ந்த பிற ஆய்வுகளையும் மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்பதையும் வேதசகாயகுமாரின் தரப்பு என்று சுருக்கமாகச் சொல்லலாம் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

சென்னைப்பல்கலை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் முயற்சியால் நவம்பர் 1, 2008  முதல் மாற்றுவெளி  என்ற ஒரு ஆய்விதழ் தொடங்கப்பட்டது.  அதில் முதல் ஆய்விதழ் கால்டுவெல் சிறப்பிதழாக வெளிவந்தது. அதில் ‘கால்டுவெல் என்னும் சிக்கல்’ [எம் வேதசகாயகுமார்] ‘கால்டுவெல்லின் திராவிடம்-ஒரு வாசிப்பு’ [வ கீதா] ‘கால்டுவெல் பின்காலனிய வாசிப்பு’ [ அ.மங்கை] ‘திராவிடஇயல் சிலகுறிப்புகள்’ [வீ அரசு] ‘கால்டுவெல் என்ற மனிதர்’ [தொ.பரமசிவன்] போன்ற குறிப்பிடத்தக்க கட்டுரைகள் வெளியாகின.

விவாதங்கள்

திருநெல்வேலிச் சாணார் வரலாறு கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. ஏனென்றால் அன்றிருந்த உண்மை நிலையையும், பண்பாட்டுசூழலையும் அந்நூல் பிரதிபலிக்கவில்லை. அது கால்டுவெல்லின் மதிப்பீடு மட்டுமாக இருந்தது. நாசரேத் ஞானமுத்து என்ற கிறித்தவர் கால்டுவெல் மேல் வழக்கு தொடர்ந்தார்.  கால்டுவெலின் நூலுக்கு மறுப்பாக ஜி.யூ.போப்பின் மாணவரும் கிறித்தவப் பேரறிஞருமான அருமைநாயகம் சட்டாம்பிள்ளை  ஒரு நூலை எழுதினார். அதை பிரசுரிக்க நிதிவசூல் செய்தார். அதை குற்றம் என்று கண்ட சீர்திருத்தக் கிறித்தவசபை புகார் கொடுக்க அருமைநாயகம் கைதுசெய்யப்பட்டார். பின்னர் விடுதலை ஆனபிறகு நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரத்தில் தனி கிறித்தவ சபை ஒன்றை நிறுவினார். ஏசுரட்சகர் சபை என்று இது அழைக்கப்பட்டது

இந்து நாடார்களிடையே கொதிப்பு உருவானது. ஆனால் கால்டுவெல் ‘இப்போது நாடார்கள் மேம்பட்டுவிட்டனர், காரணம் கிறித்தவர்களின் சேவை. இன்று அவர்கள் முந்தைய வரலாற்றை நினைத்து நாணி,அதை மறைக்க விரும்புகிறார்கள் .ஆகவே கோபம் கொள்கிறார்கள்’ என்றுதான் பதிலளித்தார். தன் பிழைகளை உணரவேயில்லை.


படைப்புகள்

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்

  • நற்கருணை தியான மாலை (1853)
  • தாமரைத் தடாகம் (1871)
  • ஞான ஸ்நானம் (கட்டுரை)
  • நற்கருணை (கட்டுரை)
  • பரதகண்ட புராதனம்

கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்

  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)
  • திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)
  • தின்னவேலி (திருநெல்வேலி) சாணர்கள்: அவர்களின் மதம், மற்றும் ஒரு சாதியாக அவர்களது நெறிகள் மற்றும் குணங்கள்; அவர்களிடையே கிறிஸ்தவம் பரவுவதற்கு உள்ள வசதிகள் மற்றும் தடைகள் பற்றிய சிறப்புக் குறிப்புகளுடன் - ஒரு வரைவு (The Tinnevelly Shanars: A Sketch of - Their Religion, and Their Moral Condition and Characteristics, as a Cast; with Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them, 1849)[5][6]
  • திருநெல்வேலி உயர் வகுப்பு மற்றும் உயர் சாதியினரிடையே கிறிஸ்தவ மதமற்றத்திற்கு செய்யப்பட்ட பணிகள் (Evangelistic Work amongst the Higher Classes and Castes in Tinnevelly. Rev. Dr. Caldwell’s Third Journal. [1876.])
  • மதத்தின் உள்ளிருக்கும் கோட்டை (The Inner Citadel of Religion. S.P.C.K.: London, [1879.])
  • காப்பாற்றப் படாதவர்களின் அணிவகுப்பு [மதத்தின் வழியில்.] (The March of the Unsaved. [A religious tract.] G. Stoneman: London, [1896.])
  • திருநெல்வேலியில் வேல்ஸ் இளவரசர் மற்றும் "டெலாகே சாலையிலிருந்து இடையான்குடி வரை" (The Prince of Wales in Tinnevelly, and "From Delahay Street to Edeyengoody.". London : S.P.C.K., 1876.)
  • குடுமியின் மீதான அவதானிப்புகள் (Observations on the Kudumi. J. J. Craen: [Madras?] 1867.)
  • இந்தியாவில் மிசனரிப் பள்ளிகளில் கிறிஸ்தவரல்லாத மாணவர்களுக்கு மதக்கட்டளைகளை தெரிவிப்பதை நிறுத்திவைத்தல் தொடர்பாக- மதறாஸ் பங்குத்தந்தைக்கு ஒரு கடிதம் (On reserve in communicating religious instruction to non- Christians in mission schools in India: a letter to the Right Reverend the Lord Bishop of Madras. Madras : S.P.C.K. Press, 1879.)
  • கிறிஸ்தவத்துக்கு இந்து மத்ததுடன் உள்ள தொடர்பு (The Relation of Christianity to Hinduism. R. Clay, Sons, & Taylor: London, [1885.])
  • திருநெல்வேலி கிறிஸ்தவ மிசனின் ஆரம்ப கால வரலாற்றுப் பதிவுகள் (Records of the Early History of the Tinnevelly Mission, etc. Higginbotham & Co.: Madras, 1881.)
  • மூன்று பாதை வழிகாட்டிகள் (The Three Way-marks. Christian Vernacular Education Society: Madras, 1860.)

உசாத்துணை