காலத்துகள்

From Tamil Wiki
Revision as of 21:34, 13 February 2022 by Suneelkrishnan (talk | contribs)

காலத்துகள் (பி.1978) ஒரு தமிழ் எழுத்தாளர். அவரது இயற்பெயர் அஜய். தொடர்ந்து சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எழுதி  வருகிறார்.'பதாகை' இணைய இதழின் ஆசிரியர்களில் ஒருவர். காலத்துகளின் கதைகள் இளமை கால நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்பவை. மெட்டா பிக்சன் எனும் மீ புனைவு வகையிலான சிறுகதைகளை எழுதியுள்ளார்.

பிறப்பும் கல்வியும்

அஜய் 6.5.1978 அன்று திருச்சியில் சித்ரலேகாவிற்கு மகனாக பிறந்தார். அவரது சொந்த ஊர் செங்கல்பட்டு. செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார், பின்னர் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.   

தனி வாழ்க்கை

31.8.2007 அன்று சுபாவை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஆருஷ் என்றொரு மகன் உள்ளார். தற்போது பாண்டிச்ச்சேரியில் திட்ட மேலாளராக தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஆர். அஜய் எனும் பெயரில் ஆம்னிபஸ் புத்தக விமர்சன தளத்தில் ஆங்கில குற்ற புனைவுகள் குறித்து 2012 -13 ஆம் ஆண்டுகளில் அறிமுக கட்டுரைகளை  எழுதினார். 2017 ஆம் ஆண்டு பதாகையில் வெளியான உருமாற்றம் எனும் குறுங்கதையே  அவரது முதல் புனைவு.  . பதாகை இணைய இதழை தோற்றுவித்த நட்பாஸ் உடன் சேர்ந்து பதாகை இணைய இதழை கவனித்து வருகிறார். பனிரெண்டாம் வகுப்பின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட 'இயற் ஜீரோ' எனும் நாவலும், செங்கல்பட்டை  களமாக  கொண்ட 'வேதாளத்தின் மோதிரம்' எனும் சிறுகதை தொகுப்பும் வெளி வந்துள்ளது.

இலக்கிய இடம்

அசோகமித்திரன், ரிச்மல்  கிராம்ப்டன், ஆல்பர்ட் உடர்சோ , ரெனே காசினி, ஆர்தர் கானான் டூயல் மற்றும் அரேபிய இரவுகளும் விக்கிரமாதித்யன் கதைகளும் தன்  மீது தாக்கம் செலுத்தியதாக குறிப்பிடுகிறார். இரண்டாம் கட்ட நகரத்து மத்திய வர்க்க பதின் பருவத்தினரின் வாழ்வை புனைவுகளில் கையாண்டுள்ளார். அவை நினைவேக்கத்தன்மை கொண்டிருந்தாலும்  அந்நிலையிலேயே நின்றுவிடுவதில்லை. 'தனக்கும் தன்னுடைய கடந்தகாலத்திற்கும் இடையேயான புகைமூட்டத்தை எழுதுவது என்பதே காலத்துகளின் பாணி. காலத்துகள் நினைவுகளை பெயர் மாற்றி நாட்குறிப்பாக எழுதவில்லை மாறாக நினைவுகளை இடுபொருட்களாக ஆக்கி அதிலிருந்து கதை தருணங்களை சமைக்க முயல்கிறார். வாசகருக்கு இவையாவும் கோர்வையான நினைவு குறிப்பாக தோன்றுவதே இவ்வகை எழுத்தின் நம்பகத்தன்மையை கூட்டுவது. இந்த நினைவுகுறிப்பு தன்மை ஒரு உத்தி என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம். உண்மையில் இவற்றுள் எந்த அளவிற்கு  புனைவு எந்த அளவிற்கு அசல் என்பதை எழுத்தாளரே அறிவார் அல்லது அவரும்கூட அறியமாட்டார்.' என வேதாளத்தின் மோதிரம் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில்[1] குறிப்பிடுகிறார் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்.  


இயர் ஜீரோ நாவல் குறித்து எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் எழுதிய கட்டுரையில் [2]'இருபதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் சென்னையின் புறநகர் வாழ்க்கையை அது வாழைப்பட்டை வகையிலேயே உண்மையாய், அதே சமயம், வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் வீட்டிலும் வெளியிலும் தொடர்ந்து அளிக்கப்படும் பதின்பருவ திரிபு ஆதியின் கண்ணோட்டத்தில் சற்றே சாய்மானமாகவும் வெளிப்படுகிறது.' என எழுதுகிறார்.  

நூல் பட்டியல்

நாவல்

இயர்  ஜீரோ

சிறுகதை தொகுப்பு

வேதாளத்தின் மோதிரம்

உசா  துணை

பதாகை இணைய இதழில் காலத்துகள்