காமன் எரிப்பு ஆட்டம்

From Tamil Wiki
Revision as of 23:23, 31 January 2022 by Navingssv (talk | contribs) (காமன் எரிப்பு ஆட்டம்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
காமன் எரிப்பு ஆட்டம்

சிவபெருமான் காமனை எரித்த கதையை கூத்தாக நிகழ்த்தி காட்டுவது காமன் எரிப்பு ஆட்டமாகும். இதனை காமாண்டி எரிப்பு நடனம், காமாண்டி கொளுத்தல், மன்மதன் கூத்து, காமாண்டி நாடகம் என வேறு பெயரிலும் அழைக்கின்றனர். இது இலாவணி என்னும் நிகழ்த்து கலையில் இருந்து வேறானது.

நடைபெறும் முறை

இந்த நிகழ்த்து கலை சிவப்புராணம் தொடர்பானது. காமனும், ரதியும் இக்கலையில் முக்கிய பாத்திரங்களாக நடிக்கின்றனர். ரதியும், மன்மதனுமாக புனைந்து இருவர் ஆட, சிலர் அவர்களுக்குப் பின்னணிப் பாடல்கள் பாடுகின்றனர். இவர்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் ரதியும், மன்மதனும் சார்ந்ததாக இருக்கும். மன்மதனை சிவன் எரித்தது சரி என்றும், தவறு என்றும் இரு தரப்பினராக பிரிந்து பாடும் கருத்துகள் இதில் இடம்பெறும். இந்த பாட்டிற்கு ஏற்றார் போல் ஒப்பனை செய்வர் ஆடுவர். இக்கூத்தைப் பார்ப்பவர்களும் கூட இரு தரப்பாக பிரிந்து விடுவர்.

புராணக் கதை

மன்மதனை திருமாலின் மனத்திலிருந்து பிறந்தவன் என்றும், பிரம்மனின் மகன் என்றும் சிவப்புராணம் சொல்கிறது. பின் சிவ பெருமானின் தவத்தை கலைக்க வந்த மன்மதன், சிவனின் கோபத்திற்கு ஆளாகி எரிந்தான் என்ற செய்தியும் சிவப்புராணத்திலிருந்து அறிய முடிகிறது. இந்த கதையே காமன் எரிப்பு ஆட்டத்திலும் நிகழ்த்துகின்றனர்.

தாரகாசுரனின் கட்டற்ற வலிமையை அடிக்கி அவனை கொல்ல பிரம்மனிடம் தவமிருக்கிறான் இந்திரன். இந்திரனின் தவத்திற்கு பணிந்து சிவன், பார்வதி இருவருக்கும் பிறக்கும் குழந்தையால் தாரகாசுரன் தோற்கடிக்கப்படுவான் என்ற வரத்தை தருகிறார் பிரம்மன்.

தவத்தில் இருக்கும் சிவனை எழுப்ப இந்திரன் மன்மதனை அனுப்புகிறான். மன்மதன் தன் மலர் கணைகளை சிவன் மேல் வீச, சிவன் தவம் கலைந்து கோபம் கொண்டு காமன் எரிக்கிறார்.

காமன் எரிப்பு ஆட்டம் என்னும் இக்கலை சிவன் காமனை எரித்த பின் ரதி சிவனிடம் தவமிருந்து காமனை மீட்பதாக அமையும். ரதி காமனை மீட்கும் போது, காமன் செய்தது சரி என்றும், தவறு என்றும் இரு தரப்பாக பிரிந்து பாடுவர்.

நிகழ்த்துபவர்கள்

  • ரதி, மன்மதன் என இருவர் வேடமிட்டு முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
  • பின்னணிப் பாடகர்கள் வேஷம் புனைந்து ஆடுபவர்களுக்கு பின் பாட்டுப்பாடுவர்

நிகழும் ஊர்கள்

  • இக்கலை திருச்சி, தென் ஆற்காடு, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நிகழ்கிறது.

நடைபெறும் இடம்

  • சிவப்புராணத்தின் கதை என்பதால் சிவன் கோவில் சார்ந்த விழாக்களில் இக்கலை நிகழும்

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

வெளி இணைப்பு