being created

காஞ்சி கைலாசநாதர் ஆலயம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 74: Line 74:
* The Kailasanatha Temple(A Guide) by R Nagaswamy
* The Kailasanatha Temple(A Guide) by R Nagaswamy
*Opening Kailasanatha: The Temple in Kanchipuram revealed in Time and Space by Padma Kaimal
*Opening Kailasanatha: The Temple in Kanchipuram revealed in Time and Space by Padma Kaimal
{{being created}}

Revision as of 17:37, 26 February 2022

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பல்லவர் கால சிவாலயம். தென்னிந்தியாவின் பழைய கற்கட்டுமானங்களில் ஒன்று. பிற்காலத்தில் வந்த பல முக்கிய கோவிற் கட்டுமானங்களில் இக்கோயில் அமைப்பின் செல்வாக்கு உள்ளது. காஞ்சி கைலாசநாதர் ஆலயம் கி.பி. 700 வாக்கில் பல்லவ மன்னன் இராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது. இவரது மகனான மகேந்திர வர்மனும் பிறகு வந்த விஜயநகர ஆட்சியாளர்களும் சில கட்டுமானங்களை உருவாக்கியுள்ளனர். இப்போது மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில், தமிழக இந்துசமய அறநிலைத் துறையின் நிர்வாகத்தில் உள்ளது.

இடம்

சென்னையில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தில் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

பெயர்

காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் கிடைக்கும் பல்லவர் கால கல்வெட்டு ஶ்ரீ ராஜசிம்ம பல்லவேஷ்வரம் என்று இக்கோயிலை குறிப்பிடுகிறது. இக்கோவிலை கட்டிய பல்லவ மன்னன் இரண்டாம் இராஜசிம்மனின் பெயரால் இது வழங்கப்படுகிறது. இக்கோயிலின் முன்னால் இராஜசிம்மனின் மகனான மூன்றாம் மகேந்திரனால் கட்டப்பட்ட ஶ்ரீ மகேந்திரவர்மேஷ்வரக்ருஹம் என்ற சிறு கோவில் உள்ளது. காஞ்சி கைலாசநாதர் ஆலயம் சோழர் காலத்து கல்வெட்டுகளில் காஞ்சிபுரத்து பெரிய திருக்கற்றளி, கச்சிப்பேட்டு பெரிய திருக்கற்றளி, எடுதத்த ஆயிரமுடைய நாயனார் ஆலயம் போன்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில்  கைலாசநாதர் ஆலயம் என்ற பெயர் வந்துள்ளதாக தெரிகிறது.

மூலவர்

மூலவரின் இன்றைய பெயர் ஶ்ரீ கைலாசநாதர். பழைய பெயர் இராஜசிம்மேஸ்வரன். 16 பட்டை கொண்ட கறுப்பு கல்லிலாலான சுமார் எட்டடி உயர ஷோடசலிங்கம்.

தொன்மம்

இவ்வாலயத்தின் தொன்மம் பூசலார் நாயனாருடன் சம்பந்தப்பட்டது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை பல்லவ மன்னன் இராஜசிம்மன் தன் செல்வாக்கால் பிரம்மாண்டமாக கட்டி முடித்து கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்கிறார். கும்பாபிஷேகத்திற்கு முன்தினம் இறைவன் மன்னரின் கனவில் தோன்றி அடுத்த நாள் அதே ஊரில் வேறொரு கோவிலில் கும்பாபிஷேகம் இருப்பதால் குறித்து வைத்த நாளை தள்ளி போடுமாறு கேட்டுக்கொள்கிறார். மன்னர் இறைவன் சொன்ன கோவிலை தேடி போகிறார். ஏழை அடியவரான பூசலார் நிஜக்கோவில் கட்ட பொருளாதாரம் இடமளிக்காததால் தன் மனதில் கட்டிய கோவில் தான் அது என்று தெரியவருகிறது. இக்கதை சேக்கிழாரின் பெரிய புராணத்தில் உள்ளது.

பூஜைகளும் விழாக்களும்

தினசரி மற்றும் பிரதோச பூஜைகள் நடைபெறுகின்றன. மகா சிவராத்திரி விழா அன்று வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகிறது.

வரலாற்றுச் சிறப்புகள்

காஞ்சி கைலாசநாதர் ஆலயம் பிற்காலத்தில் பட்டடக்கல்லில் கட்டப்பட்ட விருபாக்ஷா ஆலயம், எல்லோராவின் கைலாசநாதர் ஆலயம் மற்றும் சோழர்கால கோவில்களுக்கு முன்னோடி கோவிலாக கருதப்படுகிறது.  வில்லிபுத்தூர் கோபுரம் போன்ற பிரம்மாண்ட கோபுரங்களுக்கெல்லாம் இக்கோயிலின் துவாரசாலை என்ற சிறிய கோபுரமே தொடக்கப்புள்ளியாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் இக்கோயிலை பற்றி "கச்சிப்பேட்டு பெரிய திருகற்றளி" என்று புகழ்ந்து கூறும் கல்வெட்டு கிடைக்கிறது.

பழைய பகையை மீட்ட காஞ்சி மீது படையெடுத்து அழிக்க வந்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் இக்கோயிலின் அழகை கண்டு மனம் மாறி படையெடுப்பை நிறுத்தி கோவிலுக்கு தானங்கள் வழங்கிவிட்டு திரும்பி சென்றதாகக் கூறும் கல்வெட்டுகள் உள்ளன. காஞ்சியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட கலைஞர்கள் விக்ரமாதித்தனுக்காக பட்டடக்கல்லில் விருபாக்ஷா கோவிலை கட்டியுள்ளனர்.

காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை பற்றி தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் ஆர். நாகசாமி கூறுகையில்: தென்னிந்தியாவில் கற்களை இணைத்து கட்டப்பெற்ற முதல் ஆலயம் இது. தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த கற்கட்டுமானங்களில் ஒன்று. அதற்கு முந்தைய கோவில்கள் மரத்திலும் பாறைகளை குடைந்தும் மட்டுமே உருவாக்கப்பட்டது. இக்கோவில் கட்டுமானம் இப்போதும் பெரிய மாற்றங்களில்லாமல் அப்படியே நீடிக்கிறது. இந்த கோவிலை புரிந்து கொண்டால் ஒரு பாரம்பரிய இந்து ஆலயம் எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதல் கிடைத்துவிடும்.

கோவில் அமைப்பு

காஞ்சி கைலாசநாதர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திராவிட பாணியில் கட்டப்பட்டது. அடித்தளம் கிரானைட் கருங்கல். அதன் மேல் மணற்கல்லால் ஆன கட்டுமானங்கள் மற்றும் சிற்பங்கள். பல்லவர் கட்டுமானங்களில் காணப்படும் சிங்கமுக தூண்கள் சோமாஸ்கந்தர் மூர்த்தி சன்னதிகள் இக்கோவிலிலும் உள்ளன. யாளிகளின் மேல் வீரர்கள் அமர்ந்திருக்கும் சிலை வரிசைகளுடன் கூடிய மதில்சுவர் அமைந்துள்ளது. திசை தேவர்கள், பன்னிரண்டு ஆதித்யர்கள், 32 பாத தேவதைகள், ஏகாதச ருத்ரர்கள், பூத கணங்கள், விஷ்ணு வடிவங்கள், லட்சுமி, ஜேஷ்டாதேவி போன்ற தெய்வங்களுக்கு கோவிலில் சிற்பங்கள் உள்ளன. கோவிலுக்கு நேர் முன்னால் அழகிய நந்தி சிற்பம் உள்ளது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை ஆலயங்களின் தொகுப்பு என்று சொல்லலாம்.

பிரதான கோயில்- இராஜசிம்மேஸ்வரம்: ஶ்ரீ கைலாசநாதர்-சிவலிங்கம் மூலவராக இருக்கும் விமானத்துடன் கூடிய கருவறை. லிங்கத்தின் பின் சுவரில் சோமஸ்கந்தர் சிற்பம். கருவறையை சுற்றி வலம் வரும் விதத்தில் சுற்றுச் சுவருடன் கூடிய சாந்தார அறை உள்ளது. கருவறைக்கு நேர் முன்னால் மகா மண்டபம் மற்றும் தூண்களுடன் கூடிய முக மண்டபம். முதலில் முன்புறத்தில் உள்ள முகமண்டபம் கருவறையுடன் இணைக்கப்படவில்லை. 17-ஆம் நூற்றாண்டில் தான் இடையில் ஒரு மண்டபம் கட்டப்பெற்று இணைக்கப்பட்டது.  மண்டபங்களிலும் தூண்களிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் பழமையானது கன்னட லிபியில் உள்ள சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் கல்வெட்டு.

மகேந்திரவர்மேஸ்வரக்ருஹம்: கோயில் வளாகத்தின் கிழக்கு முனையில் வாயில் அருகே இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரனால் கட்டப்பட்ட மகேந்திரவர்மேஸ்வரக்ருஹம் என்ற சிறு கோவில். பிரதான கோவில் கட்டிய அதே காலத்தில் கட்டப்பட்டது. கோவிலின் பெயரான மகேந்திரவர்மேஸ்வரக்ருஹம் மற்றும் கோவிலை கட்டிய செய்தி கல்வெட்டில் உள்ளது. கருவறையில் தாரலிங்கம் பிரதிஷ்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின் சுவரில் சோமஸ்கந்த மூர்த்தி உள்ளார்.

எட்டு ஆலயங்கள்: கோவிலின் வாசலில் எட்டு சிறு ஆலயங்களின் வரிசை உள்ளது. இரு ஆலயங்கள் தெற்கும் ஆறு ஆலயங்கள் வடக்கு திசையிலும் அமைந்துள்ளது. இராஜசிம்மனின் துணைவி ரங்கபதாகையின் கல்வெட்டு கிடைப்பதால் இவ்வாலயங்களின் கட்டுமானத்தில் ரங்கபதாகையின் பங்களிப்பு தெரிகிறது. ஒவ்வொரு ஆலயத்திலும் சிவலிங்க பிரதிஷ்டையும் லிங்கத்தின் பின்புறம் சுவரில் சோமஸ்கந்தரின் உருவமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில ஆலயங்களில் மட்டும் இன்று லிங்கங்களை காணலாம். இக்கோவில்களின் கிழக்கு வாயில் தவிர மற்ற சுவர்களில் கஜசம்ஹார மூர்த்தி, காலாரி மூர்த்தி, சோமாஸ்கந்தர் போன்ற சிவனின் வெவ்வேறு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

அங்க-ஆலயங்கள்: கருவறையை சுற்றி சந்தியா தாண்டவ மூர்த்தி, பிச்சாடனர், கங்காதரர் போன்ற சிற்பங்கள் உள்ள ஒன்பது அங்க-ஆலயங்கள் உள்ளன. சுமார் எட்டு அடி உயர சிற்பம் நடுவில் நிற்க அதன் இருபுற சுவர்களில் அச்சிற்பம் சம்பந்தமான வேறு சிற்ப உருவங்கள் சூழ்ந்திருக்கும் அமைப்பில் உள்ளன இவ்வாலயங்கள். அங்க-ஆலயங்களின் இடைவெளிகளிலும் சிற்பங்கள் உள்ளன.

சிற்றாலயங்கள்: ஆலயத்தை சுற்றி பிரகாரத்தில் வரிசையாக 58 சிற்றாலயங்கள் உள்ளன. தெற்கு புற வரிசையில் மகிஷாசுரமர்த்தினி, சில விஷ்ணு திருக்கோலங்களின் கோவில்களுடன் 20க்கும் மேற்பட்ட சிவனின் அருள் பாலிக்கும் சிற்ப கோலக் கோவில்கள் உள்ளன. வடக்கு புறத்தில் சிவன் சம்ஹார மூர்த்தியாக இருக்கும் கோவில்கள். கிழக்கிலும் மேற்கிலும்  சோமஸ்கந்த மூர்த்தி சிற்றாலயங்கள். சிற்றாலயங்களின் இடைவெளிகளில் சிற்பங்கள் உள்ளன. பார்வதியை முப்பதுக்கும் மேற்பட்ட கோலங்களில் இங்கே காணலாம். ஒவ்வொரு சிற்றாலயத்தின் பின்புறமுள்ள சிறு அறைகளில் அழிந்த நிலையில் ஓவியங்கள் காணப்படுகின்றன.

சிற்பங்கள்

காஞ்சி கைலாசநாதர் கோவிலில் உள்ள கட்டுமானங்கள் மற்றும் சிற்பங்கள் பலவற்றில் சுதை பூசப்பட்டு அழகை இழந்துள்ளது. ஆனாலும் பல அழகிய சிற்பங்கள் எஞ்சியுள்ளன. முக்கிய சிற்பங்களில் சில:

மகிஷாசுரமர்த்தினி: சுற்றுப்பாதை தொடங்கும் போது இடதுபுறம் உள்ள சிற்றாலயத்தில் மகிஷாசுரமர்த்தினி சிற்பம் உள்ளது. மகிஷனை அழித்து முடித்து வெற்றி தரும் ஆணவப் புன்னகையுடன் சிம்மத்தின் மேல் ஒரு காலை தூக்கி வைத்து ஊர்த்துவ ஜானு கோலத்தில் நிற்கும் தோற்றம். இடது கையில் வில் வலது கை ஊருஹஸ்தம். மற்ற கைகளில் ஆயுதங்கள். சிம்மத்தின் மீது அமர்ந்த நிலையில் இருக்கும் மகிஷாசுரமர்த்தினி சிற்பமும் இக்கோயிலில் உள்ளது.

தட்சிணாமூர்த்தி: ஆலயக் கருவறையின் இடதுபுறம் உப ஆலயங்களின் இடைவெளியில் இச்சிற்பம் அமைந்துள்ளது. கல்லால மரத்தடியில் குருவாக தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்க தரையில் இருக்கும் இரு மான்களில் ஒன்றும் ஒரு பாம்பும் தட்சிணாமூர்த்தியை நோக்கி தலை உயர்த்திய நிலையில் உள்ளது. மேலே கின்னரர்கள் இருக்கிறார்கள். இவைகளின் கீழே யானை அமர்ந்திருக்கிறது. குழந்தை சேட்டைகள் முகத்தில் தெரியும் அமைதியான சிங்கங்கள், குருவிடம் பாடம் கேட்கும் மாணவன் சிற்பங்கள், தாமரை இலை மொட்டுகள் இருபுறமும் அமைந்துள்ளன. தட்சிணாமூர்த்தியின் தலைக்கு மேலே விநாயகர் மற்றும் மகர தோரணங்கள் உள்ளன. ஆபத்தான மற்றும் அமைதியான விலங்குகள் மாணவர்களாக குருவை சுற்றி அமர்ந்திருக்கும் சிற்ப அமைதி. இச்சிற்ப தொகுதியின் இருபுறமும் யாளிகள்.

கிராதம்: கருவறையின் பின்புறம் சுற்றுப்பாதையில் அமைந்திருக்கும் சிற்றாலயத்தில் அர்ஜுனன் காட்டாளனாக வரும் சிவனுடன் பன்றிக்காக சண்டையிடும் அழகிய சிற்பம் உள்ளது. அல்லது இருவரும் பன்றியை அம்பு எய்தி வீழ்த்துவதற்கு முந்தைய நிலை. அர்ஜுனன் தலையில் கிரீட மகுடத்துடன் இடது காலை தூக்கி வைத்து ஆலீடாசன கோலத்தில் நின்று அம்பு தொடுக்க கிராதனாக வரும் சிவன் பிரத்யாலீட கோலத்தில் தோளிலிருந்து அம்பை எடுக்கப் போகும்  நிலையில் இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அருகில் பன்றி நிற்கிறது.

ஓவியங்கள்

காஞ்சி கைலாசநாதர் ஆலய சுற்றுப்பாதையில் உள்ள சிற்றாலய அறைச்சுவர்களில் அழிந்த நிலையில் ஓவியங்கள் உள்ளதை பிரெஞ்ச் தொல்லியலாளர் ஜூவே தூப்ரேல் முதன்முதலில் கண்டறிந்தார். தொல்லியல் துறையின் வேதியலாளர் எஸ். பரமசிவன் கோவில் நிர்வாகிகளால் வெள்ளை அடித்து மறைக்கப்பட்ட எஞ்சிய ஓவியங்களை 1936-40 வருடங்களில் பெருமுயற்சி எடுத்து வெளிக்கொணர்ந்தார். இவ்வோவியங்கள் யாவும் இக்கோவிலை கட்டிய ராஜசிம்மன் காலத்தை சேர்ந்ததாக தெரிகிறது. பின்னர் வந்த ஆட்சியாளர்களும் அதற்கு மேல் வரைந்திருக்கலாம். 9, 11 மற்றும் 23-ஆவது அறைகளில் சிவ உருவங்களின் தடையங்கள் உள்ளன. 41-ஆவது அறையில் இருக்கும்  சோமாஸ்கந்தர் ஓவியம் முக்கியமானதாக கருதப்படுகிறது. கந்தரின் பெற்றோரான அமர்ந்த நிலையில் உள்ள சிவ-பார்வதி மற்றும் பார்வதியின் அணுக்கச்சேவகி ஓவியங்களில் நிறங்கள் இல்லை. ஆனால் அழகிய வரைகோடுகள் மட்டும் இப்போதும் எஞ்சுகிறது. இங்குள்ள கின்னர தம்பதிகளின் ஓவியங்களும் சிறப்பு வாய்ந்தது. ஆண் உருவம் பெண்ணை நோக்கி திரும்பி இருக்க பெண் உருவம் தன் பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொள்ளும் நிலையில் வரையப்பட்டு உள்ளது.

வரைவதற்கு கறுப்பு, சிகப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

இங்குள்ள சிற்பங்களின் மேல் ஓவியங்கள் வரையப்பட்டதற்கான தடையங்கள் உள்ளன. இதன் மூலம் கைலாசநாதர் கோவிலின் அடித்தளம் முதல் உச்சிவரை ஓவியங்கள் வரையப்பட்டு இருந்ததற்கான சாத்தியங்களை ஊகிக்கலாம்.

கலை வரலாற்றாசிரியர் பினோய் கே பெல் கூறுவது: காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இன்று அழிந்த நிலையில் எஞ்சியுள்ள ஓவியங்கள் மென்மையையும் அழகையும் கொண்ட அஜந்தா கலை பாணியையும் அரசர்களின் பெருமையையும் வெளிப்படுத்துகின்றன. ஒரு விதத்தில் இங்குள்ள சிவ குடும்ப சித்தரிப்பு அரச குடும்பத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. இங்கு வரையப்பட்டுள்ள கிரீடங்கள் மற்றும் உருவங்களின் தரம் அஜந்தாவில் கூட காண முடியாதது. இங்கு ஆரம்பித்த தனித்தன்மை வாய்ந்த ஓவிய மரபு சோழர்களின் கீழ் பிரம்மாண்ட வளர்ச்சியை அடைந்தது.

கல்வெட்டுகள்

பிரம்மனிலிருந்து துவங்கும் பல்லவர்களின் வம்ச வரிசை விவரணை, கோவிலின் சிறப்பு, ராஜசிம்மன் மெய்கீர்த்தி, பட்டங்கள் போன்றவை கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவர்கால கல்வெட்டுகளுடன் சாளுக்கியர், பராந்தகச் சோழன், ராஜ ராஜ சோழன், குமார கம்பண்ணன் கல்வெட்டுகளும் உள்ளன.

நாகரி, பல்லவ கிரந்த, அலங்கார பல்லவ கிரந்த, அலங்கார ஓவிய, கன்னட எழுத்துகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.

தொல்லியல் ஆய்வுகள்

  • 1883-ஆம் ஆண்டில் டாக்டர் பெர்ஜியஸ் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை பற்றி தன் குறிப்புகளில் எழுதியுள்ளார்.
  • காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தின் கல்வெட்டுகளை 1891-ஆம் ஆண்டில் எர்ண்ஸ்ட் ஹுல்ஷ் மொழிபெயர்த்துள்ளார். இவ்வாலயம் ஆறாம் நூற்றாண்டில் சிம்மவிஷ்ணுவால் கட்டப்பட்டது என்று ஹுல்ஷ் கருதினார்.
  • அலெக்சாண்டர் ரே கைலாசநாதர் கோவிலின் சிற்பங்களை பெருமளவில் வரைந்து தொகுத்தார்.
  • 1915- ஜூவே தூப்ரேல் பல்லவர்களின் வம்ச வரிசையை தெளிவாக தொகுக்க முயன்றார்.
  • 1940-ல் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் பற்றிய விரிவான ஆய்வு நூலை முனைவர் சி மீனாட்சி எழுதினார்.
  • 1975-ல் மைக்கேல் லாக்வுடின் குழு ராஜசிம்மனின் பட்டங்கள், பல்லவர்களின் சோமாஸ்கந்த மூர்த்தி, ரங்கபதாகையின் கல்வெட்டுகள் பற்றி ஆய்வுகளை நடத்தி தகவல்களை சேகரித்தது.

உசாத்துணை

  • The Kailasanatha Temple(A Guide) by R Nagaswamy
  • Opening Kailasanatha: The Temple in Kanchipuram revealed in Time and Space by Padma Kaimal



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.