காசிவாசி செந்திநாதையர்: Difference between revisions

From Tamil Wiki
Line 20: Line 20:
* தேவாரம் வேதசாரம்
* தேவாரம் வேதசாரம்
* தத்துவ விளக்கம் மூலமும் உரையும்(1918)
* தத்துவ விளக்கம் மூலமும் உரையும்(1918)
* சிவஞானபோத வசனலங் காரதீபம்
* சிவஞானபோத வசனாலங்காரதீபம்
* வஜ்ரடங்கம்
* வஜ்ரடங்கம்
* வச்சிரதண்டம்
* வச்சிரதண்டம்

Revision as of 17:16, 19 November 2022

காசிவாசி செந்திநாதையர் (சி. செந்திநாதையர்)(அக்டோபர் 2, 1848 - மே 15, 1924) ஈழத்துத் தமிழறிஞர். கட்டுரைகளும், கண்டனங்களும் எழுதினார். சமயத் தொண்டாற்றி பல நூல்களைப் பதிப்பித்தவர். நல்லூர் ஆறுமுக நாவலரின் மாணவர்.

வாழ்க்கைக் குறிப்பு

காசிவாசி செந்திநாதையர் இலங்கை யாழ்ப்பாணம் ஏழாலையில் சிந்நய ஐயர், கெளரி அம்மாள் இணையருக்கு மகனாக அக்டோபர் 2, 1848இல் பிறந்தார். இயற்பெயர் அகோரசிவம். ஏடு தொடங்கப்பட்ட பின், புன்னலைக் கட்டுவன் என்னும் ஊரில் வாழ்ந்துகொண்டிருந்த தனது மாமனாராகிய கதிர்காமையரிடத்தில் தமிழும் சமஸ்கிருதமும் கற்றார். யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலம் கற்றார். இருபது வயதில் ஆங்கிலக் கல்வி பெறுவதை நிறுத்தி விட்டு, நல்லூர்ச் சம்பந்தப் புலவரிடத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகக் கற்றார். 1871இல் இவர் தமது தந்தையுடன் இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள திருக்கோயில்களைத் தரிசித்தார்.

ஆசிரியப்பணி

1872இல் ஆறுமுக நாவலரால் வண்ணார் பண்ணையில் நிறுவப்பட்ட சைவ வித்தியாசாலையில் ஆறு ஆண்டுகளும், அவரால் நிறுவப்பட்ட ஆங்கில வித்தியாசாலையிலே ஓர் ஆண்டும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1878இல் ஆசிரியத் தொழிலிலிருந்து விலகி இந்தியாவுக்குச் சென்றார். இந்தியாவில் திருவனந்தபுரத்துக்கு சென்று திருவனந்தபுரப் பிரதம நீதிபதியாய் விளங்கிய தா. செல்லப்பா பிள்ளையவர்கள் துணையாலும் ஆறுமுக நாவலரவர்கள் அளித்த குணநலச் சான்றிதழின் துணையாலும், சுப்பா சாஸ்திரியார், அனந்தகிருஷ்ண சாஸ்திரியாரிடம் சமஸ்கிருத காவியம், வியாகரணம், தருக்கம் முதலியவற்றைக் கற்றார்.

திருச்செந்தூர் பழனி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு தமது தந்தையார் அழைப்பின்படி யாழ்ப்பாணம் திரும்பினர். 1880இல் கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த தம்பையா முதலியாரின் வேண்டுகோளின்படி கொழும்புக்குச் சென்று அவருடைய தருமசத்திரத்தில் ஏறக்குறைய ஆறுமாத காலம்வரை சைவ சித்தாந்த விரிவுரைகள் ஆற்றினார். அங்கிருந்து கதிர்காமத்துக்குச் சென்று அக்கோயிலிலிருந்து கந்த புராணத்தினைப் பன்னிரண்டு நாட்களுக்குள்ளே படித்து முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்தை அடைந்தார். 1882இல் இவர் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று திருநெல்வேலியிலுள்ள சைவப் பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1902இல் திருப்பரங்குன்றத்துச் சந்நிதி வீதியில் ”வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்த வித்தியா சாலை” என்னும் பெயருடன் ஒரு வித்தியாசாலையினை நிறுவி, அதிலே தமிழ், சமக்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் கற்பித்தார்.

இதழியல்

1883இல் திருநெல்வேலி முன்சீப் சுப்பிரமணியபிள்ளை நடாத்திவந்த 'சுஜனமநோரஞ்சனி” பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். 1888இல் 'அமிர்த போதினி” என்னும் வார வெளியீடு ஒன்றினைத் திருப்பற்றூரிலிருந்து சில காலம் வெளியிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

தமக்கு ஒய்வு கிடைக்கும் போது கோயில்களிலும், சமயச் சபைகளிலும், மடங்களிலும் விரிவுரைகள் ஆற்றினார். 1888முதல் 1898வரை இவர் காசியிலே வசித்து வந்ததால் ”சகா சிவாசி செந்திநாதையர்” என்று அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டில் 1904 ஆம் ஆண்டு அருட்பா மருட்பா என்ற வழக்கில் நா. கதிரைவேற்பிள்ளைக்கு ஆதரவாக நின்றவர். கருங்குழி இராமலிங்க பிள்ளையின் பாடல் காரணமாகப் புலோலியூர் நா. கதிரைவேற்பிள்ளைக்கும் சென்னையிலிருந்தோர் சிலருக்குமிடையில் சென்னைத் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சாட்சியளித்தவர்களுள் இவரும் ஒருவர். இலங்கை நேசன் பத்திரிகையில் இவருடைய கட்டுரைகளை பொதுமக்கள் வெகுவாக விரும்பிப் படித்தனர்.

பதிப்பாளர்

தேவகோட்டை, அரு.சோம. சோமசுந்தரச் செட்டியார், அரு.நா. இராமநாதச் செட்டியார் அளித்த பொருளுதவியைக் கொண்டு 1906இல் "செந்திநாதைய சுவாமி யந்திரசாலை" என்னும் அச்சகத்தை நிறுவினர். அவ்வச்சகத்தில் இவர் இயற்றிய நூல்களுள் பெரும்பாலானவை வெளியிடப்பட்டன.

மறைவு

காசிவாசி செந்திநாதையர் மே 15, 1924இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • கந்தபுராண நவநீதம்
  • ஞானரத்தினவளி(1888)
  • சைவ வேதாந்திம்
  • தேவாரம் வேதசாரம்
  • தத்துவ விளக்கம் மூலமும் உரையும்(1918)
  • சிவஞானபோத வசனாலங்காரதீபம்
  • வஜ்ரடங்கம்
  • வச்சிரதண்டம்
  • சாண் ரத்திரியப் பிரசண்டமாருதம்
  • ஞானபோதவிளக்கச் குருவளி
  • சிவனுந்தேவன என்னுந் தீய நாவுக்கு ஆப்பு
  • வீரபத்திராஸ்திரம்
  • விவிலிய குற்சித கண்டன திக்காரம்
  • விவிலிய குற்சிதக் குறிப்பு
  • தாந்திரிக துண்ட கண்டன கண்டனம்
  • மகா வுக்கிர வீரபத்திராஸ்திரம்(1915)
  • வைதிக கீத்தாத்துவித சைவசித்தாந்தப் படம்
  • வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த தத்துவப்படம் வினவிடை
  • ஸ்ரீசீகாழிப் பெருவாழ்வின் ஜீவகாருண்ய மாட்சி(1907)
மொழி பெயர்ப்பு
  • நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழி பெயர்ப்பு
  • பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்
இவரைப்பற்றிய நூல்கள்
  • காசிவாசி செந்திநாதையர் - க. கணேசலிங்கம்
  • காசிவாசி செந்திநாதையர் - கணேசையர், சி, குலரத்தினம், க.சி

உசாத்துணை

இணைப்புகள்