கல்கி (வார இதழ்)

From Tamil Wiki
Revision as of 12:33, 22 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|கல்கி முதல் இதழ் கல்கி வாரஇதழ் (1941) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் வார இதழ். எழுத்தாளர் கல்கியால் தொடங்கப்பட்டது. தமிழின் பல்சுவை வார இதழ்களில் முக்கியமானது. கல்கியி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கல்கி முதல் இதழ்

கல்கி வாரஇதழ் (1941) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் வார இதழ். எழுத்தாளர் கல்கியால் தொடங்கப்பட்டது. தமிழின் பல்சுவை வார இதழ்களில் முக்கியமானது. கல்கியின் புகழ்பெற்ற நாவல்களான சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை இவ்விதழில் வெளிவந்தன

இதழ்வரலாறு

கல்கி வார இதழ் 1941ல் கல்கியால் தொடங்கப்பட்டது. கல்கி 1931 முதல் ஆனந்தவிகடன் வார இதழின் துணையாசிரியராகவும் பொறுப்பாசிரியராகவும் இருந்தார். 1941 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு சிறைசென்று திரும்பி வந்த அவரை ஆனந்தவிகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் ஏற்றுக்கொள்ளவில்லை.அவர் அரசின் எதிர்ப்பை அஞ்சினார். ஆகவே கல்கி தன் அரசியல் வழிகாட்டியான ராஜாஜியின் உதவியுடன் கல்கி என்னும் வார இதழை தொடங்கினார். 1930ல் உப்புசத்யாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறைசென்றபோது அவருக்கு நண்பராக ஆன டி.சதாசிவம் (கல்கி சதாசிவம்) அவருடன் நிர்வாகியாக இணைந்துகொண்டார்.சதாசிவத்தின் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமி சாவித்ரி என்னும் திரைப்படத்தில் நடித்து அந்த நிதியை பத்திரிகை தொடங்குவதற்கு அளித்தார். ராஜாஜி கல்கி ஆகியோரின் நண்பரான டி.கெ.சிதம்பரநாத முதலியாரும் கல்கி இதழுக்கு ஒத்துழைப்பு அளித்தார்.

எழும்பூர் ரயில்வே நிலையம் எதிரே, காந்தி - இர்வின் சாலையில், கல்கி அலுவலகம் அமைக்கப்பட்டது.கல்கியின் முதல் இதழிலேயே இதழின் கொள்கைகள் பற்றி குறிப்பிட்டிருந்தார் கல்கி. விநாயகர் பகவானுக்கும், கல்கிக்கும் உரையாடல் நடப்பது போன்றும், அதில், விநாயகர், கல்கி இதழின் கொள்கைகள் குறித்து கேட்பது போன்றும், அதற்கு கல்கி, 'முதல் கொள்கை, தேச நலன்; இரண்டாவது கொள்கை, தேச நலன்; மூன்றாவது கொள்கை, தேச நலன். இதுமட்டுமே எங்கள் கொள்கை...' என்று தங்கள் கொள்கையை தெளிவுபடுத்தியிருந்தார்

கல்கி இதழ்

கல்கி 9 செப்டெம்பர்1954ல் மறைந்தார். கல்கியின் மாணவரும் நண்பருமான எழுத்தாளர் மீ.ப.சோமு ஓர் ஆண்டு கல்கியின் ஆசிரியராக இருந்தார். பின்பு டி.சதாசிவம் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். 1965 புத்தாண்டு இதழில், ஆசிரியர் சதாசிவம், “மக்களுக்குப் பிடித்த விஷயங்கள் எவை என்று பாராமல், மக்கள் நலனுக்கு உகந்த விஷயங்கள் எவை என்பதை சீர்தூக்கிப் பார்த்து அந்த விஷயங்களை தீரமாக எடுத்துச் சொல்லி, அவற்றில் மக்களுக்கு பிடித்தம் ஏற்படுத்துவதே பத்திரிகை தர்மம்” என்று குறிப்பிட்டார்.கல்கியின் மகன் கி.ராஜேந்திரன், 1970ல் கல்கி இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். கி.ராஜேந்திரன் ஓர் எழுத்தாளர்.

1977 ஆம் ஆண்டு கல்கி நிர்வாகச்சிக்கல்கள் மற்றும் ஊழியர் போராட்டம் காரணமாக நிறுத்தப்பட்டது. 1978ல் கிண்டியில் புதிய அலுவலகத்தில் இருந்து மீண்டும் வெளிவந்தது. 1993ல் கல்கி இதழின் ஆசிரியர் பொறுப்பை, கி.ராஜேந்திரனின் மூத்த மகள் சீதா ரவி ஏற்றார். செப்டெம்பர் 2021 முதல் பத்திரிகைகளின் களஞ்சிய உரிமங்கள் அனைத்தையும் கல்கி குழுமம் பெற்றுக்கொண்டது. லக்ஷ்மி நடராஜன் மற்றும் அவரது குழுவினரால் www.kalkionline.com இணையதளத்தில் இன்று இந்த பத்திரிகைகள் மின்னிதழ்களாக வெளிவருகின்றன. வி.ரமணன் கல்கி மின்னிதழின் பொறுப்பாசிரியராக இருக்கிறார்

துணை இதழ்கள்

கல்கி வார இதழ் பரதன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. அந்நிறுவனத்தில் இருந்து 1972ல், 'கோகுலம்' இதழை துவக்கினார். இதில், வாண்டுமாமா, ரேவதி மற்றும் அழ.வள்ளியப்பன் போன்றோர் எழுதிய அறிவியல் வரலாறு, கதை, கட்டுரை, கவிதைகள் இடம் பெற்றன. 1981ல் பெண்களுக்காக, 'மங்கையர் மலர்' இதழும், 1988ல் ஆங்கிலத்தில், 'கோகுலம்' இதழும் துவக்கப்பட்டது.

இலக்கிய இடம்

கல்கி

கல்கியின் புகழ்பெற்ற நாவல்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அலை ஓசை மற்றும் தியாக பூமி ஆகியவை கல்கி இதழில் வெளிவந்தன. கல்கி மறைந்தபோது அவர் எழுதிக் கொண்டிருந்த, 'அமரதாரா' தொடரை, அவரது மகள் ஆனந்தி ராமச்சந்திரன் எழுதி முடித்தார். ராஜாஜியின், 'சக்கரவர்த்தி திருமகன்' (1958), அகிலனின், 'வேங்கையின் மைந்தன்' (1960) போன்றவை கல்கியில் வெளிவந்த முக்கியமான தொடர்கள். மாயாவி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) போன்ற பல எழுத்தாளர்கள் கல்கி இதழ் வழியாக உருவாகி வந்தனர்.

உசாத்துணை

https://kalkionline.com/