கல்கி சதாசிவம்

From Tamil Wiki
சதாசிவம்- எம்.எஸ்.சுப்புலட்சுமி

கல்கி சதாசிவம் (டி.சதாசிவம்) (தியாகராஜ சதாசிவம்) தமிழ் இதழியலாளர்களின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். கல்கி வாரஇதழின் நிறுவனர் மற்றும் நிர்வாகி. சுதந்திரப்போராட்ட வீரர். பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர்.

பிறப்பு, கல்வி

கல்கி சதாசிவம்

திருச்சி மாவட்டத்தில் ஆங்கரையில் செப்டம்பர் 4, 1902ல் பிறந்தார். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடும்பொருட்டு பள்ளிக் கல்வியை கைவிட்டார். தந்தை பெயர் தியாகராஜன். தாய் மங்களம். அவர்களுக்கு 16 குழந்தைகள்.சதாசிவம் மூன்றாம் குழந்தை.

தனிவாழ்க்கை

சதாசிவம் சுப்புலட்சுமி திருமணம்

சதாசிவம் அபிதகுசலாம்பாளை ஐ மணந்தார். அவருக்கு இரு மகள்கள், ராதா மற்றும் விஜயா.ராதா பாடகி. 1940 ஜூலையில் அபிதகுசலாம்பாள் மறைந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியை 1936 ஜூலைமாதம் மதுரையில் சந்தித்தார். ராஜாஜியின் அறிவுரையின்படி அவரை 1940ல் மணம்புரிந்துகொண்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு குழந்தைகள் இல்லை.

அரசியல் வாழ்க்கை

1921ல் கும்பகோணத்தில் நிகழ்ந்த மகாமகம் இலக்கியம், அரசியல் இரண்டிலும் முக்கியமான நிகழ்வு. பொதுவாழ்க்கையில் பலர் ஒருவரை ஒருவர் சந்திக்க அது காரணமாக அமைந்தது. சதாசிவம் அந்த மகாமகத்தில் இருந்த காங்கிரசின் கதர் ஸ்டாலில் தேசிய இயக்கத்து தலைவர்களை சந்தித்தார். கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் அறிமுகம் ஏற்பட்டது. அங்கே சுப்ரமணிய சிவாவின் சொற்பொழிவைக் கேட்டு அவருடைய பாரத் சமாஜ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1920 முதல் ராஜாஜியின் அறிமுகம் கிடைத்தது. ராஜாஜி வழிநடத்திய கதர் இயக்கத்தில் பணியாற்றினார். அப்போது ஊர் ஊராகச் சென்று தேசபக்திப் பாடல்களைப் பாடி கதர் விற்பனை செய்தார். 1922இல் தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1923இல் கள்ளுக்கடை மறியல், அன்னிய துணி எதிர்ப்பு ஆகியவற்றுக்காகப் போராடி 15 மாத சிறை தண்டனை பெற்று சிறை சென்றார்.1930ல் ராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கியபோது திருச்சியில் நடந்த மறியலில் கலந்து கொண்டு 6 மாத சிறை தண்டனை பெற்றார்.

இதழியல்

1941ல் கல்கியுடன் இணைந்து கல்கி வார இதழை தொடங்கினார். 1954ல் கல்கி கிருஷ்ணமூர்த்தி மறைந்தபின் முழுப்பொறுப்பையும் ஏற்று இதழை நடத்தினார்.

திரைத்துறை

சதாசிவம் 1945ல் தன் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிக்க எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மீரா என்னும் திரைப்படத்தை தயாரித்தார்.

வாழ்க்கை வரலாறு

சதாசிவத்தின் வரலாறு டி.ஜெ.எஸ்.ஜார்ஜ் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி எழுதிய M.S..A Life in Music என்னும் நூலில் உள்ளது

மறைவு

கல்கி சதாசிவம் சென்னையில் நவம்பர் 22, 1997ல் தனது 95வது வயதில் காலமானார்.