under review

கலிங்கத்துப் பரணி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 72: Line 72:
* [https://www.hindutamil.in/news/opinion/columns/136488--12.html செயங்கொண்டான்: களங்கண்ட கவிஞன் | செயங்கொண்டான்: களங்கண்ட கவிஞன் - hindutamil.in]
* [https://www.hindutamil.in/news/opinion/columns/136488--12.html செயங்கொண்டான்: களங்கண்ட கவிஞன் | செயங்கொண்டான்: களங்கண்ட கவிஞன் - hindutamil.in]
* [https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/nov/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-3036442.html காவலர் ஈகை பெரிதா? பாவலர் ஈகை பெரிதா?]
* [https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/nov/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-3036442.html காவலர் ஈகை பெரிதா? பாவலர் ஈகை பெரிதா?]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:44, 13 February 2023

கலிங்கத்துப்பரணி வசனம் (ந.சி. கந்தையா பிள்ளை)

கலிங்கத்துப் பரணி, பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கிய நூல். இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் கிடைக்கப்பட்ட பரணி நூல்களில் காலத்தால் முந்தைய நூல்.

கலிங்கத்துப் பரணி உருவான கதை

வட கலிங்க மன்னனான அனந்தவர்மன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரத் தொண்டைமான் பொ.யு. 1112-ஆம் ஆண்டில் போரில் அவனை வென்றதைக் குறித்து பாடப்பட்டது.

நூலாசிரியர்

கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் ஜெயங்கொண்டார். இவர் முதலாம் குலோத்துங்கனின் அவைக்களப் புலவர். முதன்முதலில் பரணி பாடியவர். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னாலான தேங்காயை உருட்டிக் கவிஞரையும் நூலையும் குலோத்துங்கன் சிறப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.

பாட்டுடைத் தலைவன்

கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் முதல் குலோத்துங்க சோழன். இவர் இராஜேந்திர சோழன் மகள் சோழ இளவரசி அம்மங்கைக்கும் சாளுக்கியர் குல இராஜராஜ நரேந்திரனுக்கும் பிறந்தவர்.

கலிங்கம் வென்ற கருணாகரன்

குலோத்துங்கனின் படைத்தலைவர்களுள் சிறந்தவர் கலிங்கத்துப் பரணியின் இன்னொரு நாயகன் கருணாகரன். குலோத்துங்கனின் ஆணைப்படி கலிங்க நாட்டின் மீது படை எடுத்துச் சென்று அந்நாட்டை அழித்தவர். திருவரங்கன் எனும் இயற்பெயரை உடையவர். 'வேள்' 'தொண்டைமான்' எனும் பட்டங்கள் குலோத்துங்கனால் இவருக்கு வழங்கப்பட்டன. பல்லவர் குலத்தைச் சேர்ந்தவர்.

நூலின் அமைப்பு முறை

கடவுள் வாழ்த்து

போர்த்தலைவனாகிய குலோத்துங்கன் நெடிது நின்று ஆட்சி செய்ய வேண்டுமென கடவுளைத் துதித்துப் பாடப்படுகிறது.

கடை திறப்பு

கலிங்கத்தின் மேல் படையெடுத்துச் சென்ற வீரர்கள் வருவதற்குக் கால தாமதம் ஆனதால் அதனைக் கண்டு மகளிர் ஊடல் கொண்டு கதவை அடைத்ததாகவும், அப்பெண்கள் மகிழுமாறும் ஊடல் நீங்கிக் கதவைத் திறக்குமாறும் செய்ய, தாம் வெற்றி பெற்ற கலிங்கப்போர் பற்றிக் கூறுவது போலவும் அமைந்தது.

காடு பாடியது

கலிங்கப் போர்க்களத்தில் நிணக்கூழ் சமைத்த பேய்களின் தலைவியாகிய காளி உறையும் இடமாகிய பாலையைச் சார்ந்த காட்டைப் பற்றிக் கூறுவது. இதில் பாலை நில வெம்மையின் கொடுமை சுவையுடன் கூறப்பட்டுள்ளது.

கோயில் பாடியது

காளி உறையும் இடமாகிய காட்டில் நடுவண் அமைந்துள்ள காளிக் கோயிலைப் பற்றிக் கூறுவது. இதில் காளி கோயிலின் அடிப்படை(அடிவாரம், அஸ்திவாரம்) அமைத்தது, சுவர் அடுக்கியது, தூண் நிறுத்தியது முதலான செய்திகளைக் கூறுகிறது. குலோத்துங்கன் பல போர்க் களங்களில் பெற்ற வெற்றிச் சிறப்புகள் காட்டில் காணப்படும் பல வகைக் காட்சிகளோடு தொடர்புப் படுத்திக் கூறப்படுகிறது.

தேவியைப் பாடியது

காளி கோயிலைப் பற்றிக் கூறியபின் காளியைப் பற்றிக் கூறுவது. காளியின் உறுப்புகள் பற்றியும், குலோத்துங்க சோழனின் புகழும் இடைஇடையே கூறப்படுகிறது.

பேய்ப்பாடியது

காளியைச் சூழ்ந்திருக்கும் பேய்களின் இயல்புகள் கூறப்படுகிறது. பேய்களின் உறுப்பு நலங்கள் பற்றி நகைச் சுவையோடு விளக்கப்படுகிறது. சில பேய்களின் உறுப்பு நலங்கள் குறைந்து காணப்படுவதாகவும், குலோத்துங்கனின் பல போர்க்கள வெற்றிகள் குறித்தும் கூறப்படுகிறது.

இந்திரசாலம்

பேய்கள் சூழ காளி அரசு வீற்றிருந்த அமயத்தே ( அவையில்) இமயத்திலிருந்து வந்த முது பேய் ஒன்று தான் கற்று வந்த இந்திர சாலங்களை(மாய வித்தைகள்)க் காட்டுவதாக நகைச்சுவையுடன் கூறப்படுகிறது.

இராச பாரம்பரியம்

குலோத்துங்கனின் குடியின் வரலாறு கூறப்படுகிறது. கரிகால் சோழன் தொடங்கிச் சோழ வரலாறு கூறப்படுகிறது

பேய் முறைப்பாடு

பரணிப்போர் நிகழ்வதற்கான முற்குறிகளைப் பேய்கள் கண்டதாகக் கூறுவது இப்பகுதி. பேய்களின் பசிக்கொடுமை, அப்பேய்களுக்கு ஏற்படும் சில நல்ல குறிகள், இமயத்தில் இருந்து பேய் தான் வந்த வழியில் கலிங்கத்தில் கண்ட தீக்குறிகள், இவைகளைக் கேட்டு கணிதப்பேய் கனவும் நனவும் கண்டு, குலோத்துங்கனால் பரணிப்போர் உண்டு எனக் கூறுவதும், பின்னர் நிகழப்போவதை முன்னறிவிப்பாகக் கூறும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அவதாரம்

கலிங்கப்போர்த் தலைவனான குலோத்துங்கன் சிறப்பைக் காளி பேய்களுக்குக் கூறுவது போல் அமைக்கப்பட்ட இப்பகுதியில் குலோத்துங்க சோழனின் பிறப்பு, வளர்ப்பு, இளவரசுப்பட்டம், முடி சூடியது முதலிய செய்திகள் விளக்கப்படுகிறது. சாளுக்கிய குலத்தில் பிறந்து தாய்க் குலமாம் சோழ குலத்து அரசுரிமை பெற்றது , இளவரசராய் இருந்த போது வட திசை நோக்கிப் போருக்கு எழுந்தது, சோழன் இறந்த சமயத்தில் சோழ நாட்டை நிலைபெறுத்தி முடிசூடியது , பெரு மன்னனாய்ச் சிறப்புற ஆட்சி செய்தது, பாலாற்றங்கரைக்கு நால்வகைப் படையுடனும், தேவியருடனும், சிற்றரசர்கள் சூழவும் புறப்பட்ட சிறப்பு, தில்லையிலும், அதிகையிலும் தங்கிச் சென்று காஞ்சியை அடைந்தது ஆகிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.

காளிக்குக் கூளி கூறியது

காஞ்சியை அடைந்த குலோத்துங்கன் ஒரு சித்திரப் பந்தலின் கீழ் அமைச்சர் முதலியோருடன் வீற்றிருந்த சிறப்பும் சிற்றாரசர்கள் பலரும் வந்து திறை செலுத்தியதும், திறை செலுத்தாத கலிங்க மன்னன் மேல் குலோத்துங்கனின் ஆணைப்படி கருணாகரத் தொண்டமான் நால்வகைப் படையுடன் போருக்கெழுந்த இயல்பும் கூறப்படுகிறது. பல ஆறுகளைக் கடந்து கலிங்கம் அடைந்ததும், கலிங்கத்தை எரிகொளுவி அழித்ததும், அது கண்ட கலிங்கமக்கள் அரசனிடம் முறையிட்டதும் , அவன் வெகுண்டெழுந்ததும், அமைச்சர் முதலானோர் அவனுக்கு அறவுரைப் பகர்ந்ததும், அதனை மதியாமல் கலிங்க மன்னன் போருக்குச் சென்றதுமான செய்திகள் விளக்கப்படுகிறது.

போர் பாடியது

கலிங்கப்பேய் காளிக்குப் போரின் இயல்பைக் கூறுவதாக அமைந்தது. நால்வகைப் படையின் செயல்கள், தீவிரமான போர்முறை , கருணாகரன் தன் களிற்றை உந்தியதும் இரு பக்கப் படைகளும் ஒருவரை ஒருவர் பொருத செய்திகளும், இரு திறத்திலும் நால்வகைப் படைகளும் பல அழிந்ததும், போரின் கடுமைத் தாங்காமல் கலிங்க மன்னன் ஓடி ஒளிந்ததும், அவனைப் பற்றிக் கொணர தன் படைகளோடு ஒற்றர்களையும் கருணாகரத்தொண்டைமான் அனுப்பிய செய்தியும், கலிங்க வீரர்கள் ஒரு மலை உச்சியில் மறைந்து நிற்பதைப் பற்றி அறிந்ததும் அது மாலை வேளை ஆனதால் போரிடாமல், விடியும் வரை காத்துநின்று விடிந்த பின் கலிங்கரை அழித்ததும், கலிங்க வீரர்கள் உருக்குலைந்து நாற்புறமும் ஓடியதும், அங்கு தான் கவர்ந்த செல்வங்களுடன் குலோத்துங்கன்பால் சென்று கருணாகரத் தொண்டமான்பணிந்து நின்றதுமான செய்திகள் அழகுபடக் கூறப்பட்டுள்ளன.

களம் பாடியது

போரைப் பற்றிச் சொல்லி முடித்த பேய் காளியைப் போர்க்களம் காணுமாறு அழைக்க காளி வந்து களத்தைக் கண்டு, அக்காட்சிகளைப் பேய்களுக்குக் காட்டுமாறு அமைந்துள்ளது. காட்சிகளைக் காட்டிய பின், நீராடி கூழட்டு உண்ணுமாறு பேய்களைப் பணிக்கிறாள் காளி. அங்கணமே பேய்கள் பல் துலக்கி, நீராடி கூழ் சமைத்து உண்ணும் இயல்பு கூறப்படுகிறது. பேய்கள் பாடும் வள்ளைப் பாட்டில் குலோத்துங்கனின் புகழ் பாடப்படுகிறது. முடிவில் பேய்கள் தங்களுக்குப் பரணிக் கூழ் அளித்த குலோத்துங்கனை வாழ்த்துவதாகக் கலிங்கத்துப் பரணி முடிகிறது.

நூலின் வழி அறியவரும் வரலாற்றுச் செய்திகள்

அக்கால அரசர் இயல்புகளும், போர் முறைகளும், சமுதாய நிலைகளும் நூலில் கூறப்பட்டுள்ளன.

படைக்கலப் பயிற்சி
  • அக்கால அரசர்கள் தினந்தோறும் படைக்கலப் பயிற்சி பெற்றனர். பயிற்சி முடிந்த பின் தம் அரையிலே (இடையில்) உள்ள உறையில் உடைவாளை பூணும் வழக்கம் இருந்தது.
அரசவை
  • அரசு வீற்றிருக்கும் போது அரசனின் தேவியரும் உடன் இருத்தல்.
  • நாடகம், நிருத்தம் முதலியவற்றாலும், பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி எனும் நால்வகைப் பண்ணிலும் வல்லவர்களாய் ஆடல் பாடல்களில் சிறந்திருந்தவர்கள், அரசனுக்குச் சேவையாற்ற உடனிருந்த 'அணுக்கிமார்'; யாழ், குழல், மத்தளம் முதலிய இசைக்கருவி வல்லார்கள்; அரசன் புகழ் பாடுவோராகிய சூதர், மகதர், மங்கலப் பாடகர், வந்தியர், வைதளிகர்; அரசனுக்குப் பிறர் விருப்பத்தை அறிவித்தும், அரசன் கட்டளையைப் பிறர்க்கு அறிவித்தும் ஒழுகும் 'திருமந்திர ஓலையான்' ஆகியோர் அரசவையில் இருந்த செய்தியை அறியமுடிகிறது.
பயணம்
  • அரசன் நால்வகைச் சேனைகளோடும் பயணப்படும்போது மறையோருக்குத் கொடை முதலிய தருமங்கள் வழங்குவது; கவிவாணர்களுக்குப் பரிசுகள் அளிப்பது; பேரரசர் புறப்படும்போது அரசர் வாழ்கவென ஜெயஒலி முழக்கமிடுவது; மறையவர் மறைமொழி ஓதுதல்; பயணம் செய்வோர் யானையூர்ந்தும், தேரூர்ந்தும், சிவிகையூர்ந்தும் செல்வது போன்ற பயணச் செய்திகளை அறியமுடிகிறது.
  • சங்கொலி மங்கல ஒலியாகக் கருதப்பட்டது. அரசர் புறப்படும்பொழுது சங்கொலியோடு பல்லியங்களும் முழங்கிச் செல்லும். யானை மீது முரசதிர்ந்து செல்லும்.
அரசர்க்கு வழங்கப்படும் திறைப் பொருட்கள்

பேரரசருக்குப் பிற மன்னர்கள் திறைப் பொருட்கள் கொணர்வர் . மணி மாலை, பொன்னணி, முடி, பொற்பெட்டி, முத்துமாலை, மணிகள் இழைத்த ஒற்றைச் சரடு, பதக்கம்,மணிக்குவியல், பொற்குவியல், மகரக் குழை, யானை,குதிரை,ஒட்டகம்போன்றவை திறைப்பொருட்களாக வழங்கப்பட்டன. இத்திறைப்பொருட்களை எருதுகளின் மீது ஏற்றிக் கொண்டு வந்தனர்.

பிறந்த நாள்

அரசனுடைய பிறந்த நாளை மக்கள் சிறப்புடன் கொண்டாடினார்கள். அரசனின் பிறந்த நாள் 'வெள்ளணி நாள்' என்றும் 'நாண்மங்கலம்' என்றும் சொல்லப்படுகிறது.

சிற்றரசர் இயல்புகள்

பேரரசர்கள், சிற்றரசர்களுக்கு கொடை அளித்து தம் அடியினை அவர் முடி மீது வைத்து அருள் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. பேரரசர் யானை மீது ஏறும் போதும் தம் அடிகளைச் சிற்றரசர் முடிமீது வைத்து ஏறும் வழக்கம் இருந்ததுள்ளது.

அமைச்சர்கள்

பேரரசர்களின் அமைச்சர்கள் சிற்றரசர்களால் மதிக்கப்பட்டனர் என்பது அறிய முடிகிறது.

உசாத்துணை


✅Finalised Page