under review

கலாநிலையம்

From Tamil Wiki
Revision as of 17:10, 12 April 2023 by Madhusaml (talk | contribs) (Stage updated)
கலாநிலையம்

கலாநிலையம் (1928 - 1935 ) டி.என் சேஷாசலம் நடத்திய பல்சுவை இதழ். தமிழில் பழந்தமிழ் இலக்கிய ரசனைக்கும் நாடகவியலுக்கும் பங்களிப்பாற்றியது

தொடக்கம்

வழக்கறிஞரும் தமிழறிஞருமான டி.என். சேஷாசலம் 'கலா நிலயம்’ என்ற பெயரில் 5, ஜனவரி 1928-ல் முதல் வாரஇதழ் ஒன்றை தொடங்கினார் . 'வியாழன் தோறும் வெளிவரும் வாரப் பத்திரிகை’ என்ற அறிவிப்புடன் வெளியான இவ்விதழின் நோக்கங்களாகச் சேஷாசலம், தமிழைப் பிழையறக் கற்றுக் கொள்ளுதல், ஆங்காங்கு உள்ள தமிழ்ப் புலவர்களை ஒருங்கிணைத்து இதழுக்கு எழுத வைத்து இலக்கிய வளம் சேர்த்தல், ஆங்கில மொழியின் பெருமையை, சிறப்பை அனைவரும் அறியும் பொருட்டு சிறந்த படைப்புகளை மொழிபெயர்த்து அளித்தல் போன்றவற்றைக் குறிப்பிட்டிருந்தார்.

ஆசிரியர்குழு

கே. ராஜகோபாலன் இந்த இதழின் உதவி ஆசிரியராக இருந்தார். பிற்காலத்தில் இவர் 'கலாநிலயம்’ ராஜகோபால் என்று அழைக்கப்பட்டார். எஸ். அனவரத நாயகம் பிள்ளை போன்றோரும் இதழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.

உள்ளடக்கம்

இலக்கண, இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான 'கலாநிலயம்’ இதழில் அக்காலத் தமிழ்ச் சான்றோர் பலர் பங்களித்து வந்தனர். சேஷாசலம், இவ்விதழில், பல ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். மதுகரம், சபரி போன்ற புனைபெயர்களிலும் சில கட்டுரைகளை எழுதினார். ’கலாநிலயம்’ இதழில் சிறுகதைகளும் இடம் பெற்றன. வண்மையின் வரம்பு (விடி சுந்தரலிங்கம்), விதியில்லா மதிபாலன் (திம்மப்பா ஐயர்), மாரிமுத்துவின் மனைவி, உருபு மயக்கம் (முத்துராமலிங்கம்) போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவையாகும்.

'சேக்கிழாரும் திருக்கண்ணப்பரும்', 'கம்பராமாயணம்', 'தேவாரமும் ஐந்திணையும்', 'அப்பர்', 'வில்லிபாரதம்', 'குலசேகரர் தத்துவ விளக்கம்', 'அகப்பொருள் விளக்கம்', 'நம்மாழ்வார் வைபவம்', 'குறுந்தொகை', 'அப்பரும் 64 கலைகளும்' எனப் பல இலக்கியக் கட்டுரைகள் 'கலாநிலயம்’ இதழில் தொடர்ந்து வெளியாகியுள்ளன. ’காந்திமதி என்னும் காந்தார நாட்டுக் கட்டழகி’ என்னும் தொடர்கதையையும் டி.என்.சேஷாசலம் எழுதியுள்ளார்.

நிறுத்தம்

பொருளாதாரச் சூழல்களால் 1935-ல் கலாநிலயம் நின்று போனது.

ஆய்வு

தமிழியல் ஆய்வு வரலாறு. முனைவர் இரா.சிவக்குமார் (கலாநிலையம் இதழ் ஆய்வு)

இலக்கிய இடம்

கலாநிலையம் தமிழில் பழந்தமிழிலக்கிய ஆய்வுக்கும் புதியவகை பொழுதுபோக்கு எழுத்துக்கும் நாடகவியலுக்கும் இடமளித்த இதழ்

உசாத்துணை


✅Finalised Page