standardised

கலங்கிய நதி

From Tamil Wiki
கலங்கிய நதி (காலச்சுவடு பதிப்பகம், 2011)

கலங்கிய நதி (முதல் பதிப்பு: 2011) பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய தமிழ் நாவல். அஸ்ஸாம் மாநில போராட்டப் பின்னணியில் அமைந்தது. அதிகார அமைப்பின் ஊழியன் தான் சார்ந்த அமைப்பின் முரண்களை, செயலின்மையை,அபத்தத்தை எதிர்கொண்டு, அதனால் வெளித்தள்ளப்பட்டு, பின்னர் தெளிவடைவதைச் சொல்கிறது.

இந்திய விடுதலைக்குப்பின் பிரிவினையின் போது ஓடிய ரத்தவெள்ளத்தை பற்றி காந்தி சொன்னதாக சொல்லப்படும் “ஒரு நதியில் வெள்ளம் வரும்போது அது மண்ணடர்ந்து எப்போதையும்விடக் கலங்கலாக இருக்கும். ஆனால் வெள்ளம் வடிந்தபின்னர் அது தெளிவாகிவிடும். முன்னைவிடத் தெளிவாக’’ என்ற வரிகளின் உணர்வுகளை அடிப்ப்படையாகக் கொண்டு இதன் தலைப்பு அமைகிறது.

ஆசிரியர்

தமிழ்,ஆங்கிலம் இரு மொழிகளிலும் திறம்பட எழுதும் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் புலிநகக் கொன்றை,  கலங்கிய நதி ஆகிய புனைவுகளையும் திரும்பிச் சென்ற தருணம் மற்றும் அக்கிரகாரத்தில் பெரியார் ஆகிய அபுனைவுகளைடயும் எழுதியவர். கம்பராமாயணம் மற்றும் சங்க இலக்கியங்களில் நல்ல புலமை வாய்த்தவர்.

உருவாக்கம்

கலங்கிய நதி  பி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் எழுதிய   ‘The Muddy River’  என்ற ஆங்கில நாவலின் தமிழ் வடிவம்.  அரசு அதிகாரியாக அவர் அஸ்ஸாமில் பணியாற்றியபோது நடந்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு .

'தங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து போராடும் இலங்கை சகோதர சகோதரியருக்கு' அர்ப்பணிக்கப்பட்டதாக ஆசிரியர் சொல்கிறார்.

பதிப்பு

2002-ல் எழுதப்பட்ட இந்நாவல் 2009-ல் செம்மை செய்யப்பட்டு முதல்பதிப்பை  காலச்சுவடு பதிப்பகம் டிசம்பர் 2011-ல் வெளியிட்டது. இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2012-ல் வெளிவந்தது.

கதைச் சுருக்கம்

பணிநீக்கம் செய்யப்பட்டு ஓர் விபத்தில் சிக்கி மெல்ல குணமடைந்து வரும் அரசு அதிகாரி ரமேஷ் சந்திரன் எழுதும் நாவலுக்குள் கதை விரிகிறது. தன் 10- வயது மகளின் இழப்பில் தவிக்கும் ரமேஷ் சந்திரனுக்கும் சுகன்யாவுக்கும் வாழ்வே கலங்கிய நதியாகிறது. ரமேஷ் தன் மூர்க்கமான நேர்மையாலும், துடுக்குத்தனத்தாலும் அஸ்ஸாமிற்குப் பணி மாற்றம் செய்யப்படுகிறான். அங்கு தன் துறையைச் சேர்ந்த,  அஸ்ஸாம்   போராளிகளால்  கடத்தப்பட்டு பெருந்தொகை கேட்கப்படும் பொறியாளர் கோஷை விடுவிக்கும் முயற்சியில்  பலியாடாக அனுப்பப்படுகிறான்.அரசு, காவல்துறை,  ஊடகம்,  ஒப்பந்தக்காரர்கள் , போராளிகள்,கோஷின் மனைவி இவர்களுக்கிடையே பந்தாடப்பட்டுக்கொண்டே ,தன்னால் இயன்ற எளிய முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்கிறான். அந்த உந்துதலைத் தன் தந்தையிடம் அவன் கற்ற காந்தியின் சூத்திரமே அவனுக்கு அளிக்கிறது. போராளிகளுடன்தொடர்புடைய மற்றொரு அதிகாரியான அனுபமாவும் அவனுடன் இணைந்து செயல்படுகிறாள். அஸ்ஸாம் நிர்வாகத்தின் ஒவ்வொரு படியிலும் உள்ள நம்பமுடியாத அபத்தங்களையும், காவல் துறைக்கும், போராளிகளுக்குமிடையே உள்ள  வெகு நுட்பமான பரிவர்த்தனைகளையும் உணர்ந்து கொள்கிறான். அப்பழுக்கற்ற காந்தீயவாதியும் முன்னாள் முதல்வருமான ராஜவன்ஷியின் துணையும்,உதவியும் கிடைக்கிறது. கோஷ் விடுதலை செய்யப்படுகிறார். அதோடு துறையில் நடந்த மிகப் பெரிய ஊழல் ஒன்றையும் வெளியே கொண்டுவருகிறான். நிறுவனம் ஆதாரம் இல்லாத அபாண்டமான குற்றச் சாட்டை சுமத்தி அவனைப் பணி நீக்கம் செய்கிறது. அனுபமா காணாமல் போகிறாள்.விபத்துக்குள்ளாகும் சந்திரன் தன் அனுபவங்களை நாவலாக எழுதுகிறான்.

நாவலுக்குள் பாத்திரங்களாக வரும் நண்பர்கள் சபீர், ஹெர்பெர்ட் இருவரும் சுகன்யாவுக்கு எழுதும் கடிதங்கள்,  சுகன்யாவின் மறுமொழி இவை மூலம்  சந்திரன் எழுதும் சம்பவங்களுக்குள் உள்ள இடைவெளி இட்டு நிரப்பபட்டு, உண்மையின்  பல சாயல்கள் வெளிவருகின்றன. கோஷின் விடுதலையில் சந்திரனின் பங்கு மிகச் சிறியது என்பதும் அவற்றுள் ஒன்று.

கதாபாத்திரங்கள்

  • ரமேஷ் சந்திரன் - அரசு அதிகாரி
  • சுகன்யா - சந்திரனின் மனைவி
  • பக்‌ஷிராஜன் - சந்திரனின் தந்தை, காந்தியவாதி
  • கோஷ் - போராளிகளால் பிடிக்கப்பட்ட பணயக் கைதி
  • நந்திதா கோஷ் - கோஷின் மனைவி
  • நிர்மல் பூயான் - காவல்துறை அதிகாரி
  • ராஜவன்ஷி - காந்தியவாதி, முன்னாள் முதல்வர்,அப்பழுக்கற்ற நேர்மையாளர். முன்னாள் முதல்வர் சரத் சந்திர சின்ஹாவின் புனைவு  வடிவம்
  • அனுபமா பூகன் - சந்திரனின் நிறுவனத்தில் போராளிகளுடன் தொடர்புடைய அதிகாரி, , பூயான் மற்றும்   காலிதாவின் கல்லூரித்தோழி
  • காலிதா - போராளிகளின் தலைவர்களில் ஒருவன்,அனுபமாவின் நண்பன்
  • பரூவா - மார்க்ஸியர், பேராசிரியர்
  • சுபீர், ஹெர்பெர்ட் - சந்திரன், சுகன்யாவின் நண்பர்கள். கதையின் அடுத்த அடுக்கு இவர்களின் கடிதங்களால் ஆனது.
  • கஷ்னபீஸ் - போராளி தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பேரத்தைக் குறைக்க உதவும் சுபீரின் ஊடக நண்பன்
  • நிறுவனத் தலைவர்

இலக்கிய மதிப்பீடு

அதிகார அமைப்பை நுணுக்கமாக விமர்சிக்கும் பாணியில் கிருத்திகா, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி  என வரும் இலக்கியப்போக்கில் ‘கலங்கிய நதி’  முக்கியமான இடம் பெறுகிறது. அதிகார அமைப்பின் அபத்த நாடகமே நாவலின் சாராம்சம்.

பகதத்தனின் கதை, ஜதிங்காவில் கூட்டமாகத் தற்கொலை செய்துகொள்ளும் பறவைகள், சிம்மாசலத்தில் கிருஷ்ணன் கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கன்றுகள் கசாப்புக்கடைகளுக்கு உடனே விற்கப்படுவது, இவை தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்களுக்கான ஆழமான உவமைகள்.

கலங்கிய நதி மீபுனைவாகக் கதை சொல்லும் உத்தியாலும் வலுவான உவமைகளாலும்  முக்கியமான படைப்பாகிறது. கதை இரண்டு அடுக்குகளாக மடிப்புகள், உள்மடிப்புகள் மூலம்  நேர்த்தியாகப் பின்னப்பட்டிருக்கிறது. நாயகன்  எழுதும் நாவல், அவன் மனைவி அதில் சேர்க்கும் விடுபட்ட குறிப்புகள் அதைப் படிக்கும் இரண்டு நண்பர்களின் எதிர்வினைகள் இவற்றுடன் படிப்பவரின் ஊகம்- கதையின் உண்மை இவை அனைத்திற்கும் ஊடே ஊசலாடுகிறது.  தமிழுக்கு இந்த உத்தி புதியது. சந்திரன் எழுதாமல் விட்டவையும், மாற்றி எழுதியவையும் அவனது ஆழ்மனத்தை அறிய உதவுகிறன.

இன்றைய நவீனச் சூழலில் காந்தியை கண்டடைவது இந்நாவலின் மிகப்பெரிய சாதனையாக சொல்லப்படுகிறது.

மரணம் ஓர் இழப்பாக மட்டுமல்லாமல் ஆன்மீகமான பரிணாமத்துக்கான காரணமாகவும் அமைவதே கலங்கிய நதியை முக்கியமான ஒரு படைப்பாக ஆக்குகிறது. இந்நாவலின் நுட்பமான கலையமைதி கைகூடியிருப்பதும் இங்கேதான்-எழுத்தாளர் ஜெயமோகன்

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.