கரிச்சான் குஞ்சு

From Tamil Wiki
Revision as of 20:13, 29 January 2022 by Muthukumar M (talk | contribs)
Karichan kunju.jpg


கரிச்சான் குஞ்சு இந்தியத் தத்துவங்களில் பயிற்சியும், புலமையும் கொண்ட எழுத்தாளர். நிறைய சிறுகதைகளையும், பசித்தமானுடம் என்ற ஒரு நாவலையும் எழுதியுள்ளார்.

புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

வாழ்க்கை குறிப்பு

பிறப்பு, இளமை

கரிச்சான் குஞ்சு (1919 -1992) என்று அறியப்பட்ட ஆர்.நாராயணசாமி ஜூலை 10, 1919ல் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் பிறந்தவர். பெங்களுரில் 8 வயது முதல் 15 வயதுவரை வடமொழியும் வேதமும் பயின்றார். பின்னர் மதுரை-ராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் 17 வயது முதல் 22 வயதுவரை தமிழும் வடமொழியும் கற்றார்.

தனி வாழ்க்கை

சென்னை, மன்னார் குடி, கும்பகோணம் முதலான ஊர்களில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாளர்கள் கு.பா. ராஜகோபாலன் (கு.பா.ரா) மற்றும் தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டவர். இளவயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்ட இவர், தன்னுடைய ஆதர்சமான கு.பா.ரா வை, தந்தையாகவும் கருதியவர். இதன் காரணமாகவே கரிச்சான் என்ற அவருடைய புனைப்பெயரை தனக்குமானதாக ஆக்கிக் கொண்டு 'கரிச்சான் குஞ்சு' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.

குடும்பம்

கரிச்சான் குஞ்சு - சாரதா அம்மாள் சம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகள்.இளமையில் வறுமை, பால்யகால உறவுகளின் அனுசரணையற்ற தன்மை, அனாதை போலப் பாட சாலைகளில் கழிந்த பால்யம், அவர் படித்த வேதாந்தத் தத்துவங்கள், எல்லாமுமாகச் சேர்ந்து லௌகீக வாழ்விலும் அவரை ஒட்ட விடாமலேயேதான் வைத்திருந்தன. ஆனால் தன் பெண் குழந்தைகளை படிக்க வைப்பதில் மிக உறுதியாக இருந்தார்.

இலக்கிய பங்களிப்பு

சிறுகதைகள்

1940ல் ஏகாந்தி என்ற புனைபெயரில் இவரது முதல் சிறுகதையான 'மலர்ச்சி' கலைமகள் இதழில் வெளிவந்தது.

நாவல்கள்

நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியைக் கையாண்ட முதல் நாவல் இவருடைய பசித்த மானிடம் எனலாம். தமிழ் இலக்கியத்தின் பிறழ்வெழுத்து வகை நாவல்களில் இதுவும் ஒன்றென கருதப்படுகிறது.

"அறிவார்த்தம் மறுத்த அகங்காரம் மிகுந்த நாஸ்திகத்தையும் போலியான உள்ளீடற்ற ஆஸ்திகத்தையும் கடந்த ஒரு தத்துவார்த்த நிலை நாவலின் அடிநாதமாக இந்நாவலில் படர்ந்திருக்கிறது" என்கிறார் விமர்சகர் வெங்கட் சாமினாதன்.

மொழிபெயர்ப்புகள்

காஷ்மீரத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தவர்த்தனரின் த்வன்ய லோகவைத் 'தொனி விளக்கு' என்ற பெயரில் அவர் மொழிபெயர்த்த புத்தகமும் தமிழுக்கான பிற மொழி வரவுகளில் முக்கியமானது.

மார்க்சிய தத்துவங்களின் மேல் இவருக்கு இருந்த ஆர்வம், மார்க்சிய மேதையான தேவிபிரசாத் சட்டோபாத்யா அவர்களின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்க வைத்தது.

கட்டுரைகள்

வேதாந்த நோக்கில் அவர் பாரதியின் ஆத்ம பக்குவத்தைப் பற்றி எழுதிய 'பாரதி தேடியதும் கண்டதும்' நூலும் கு.ப.ரா. பற்றி விரிவாக அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பும் அவரது தமிழ் இலக்கியப் பங்களிப்பில் பிரதானமானவை.

படைப்புகள்

சிறுகதைகள்

நாவல்கள்

  1. பசித்த மானுடம்

மொழிபெயர்ப்புகள்

  1. இந்தியத் தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்
  2. தொனி விளக்கு

இலக்கிய முக்கியத்துவம்

இலக்கியம் இருவகைகளில் மனிதனின் சாராம்சமென்ன என்று ஆராய்கிறது. ஒன்று, நிகர்நிலையில் இயல்பான தளத்தில். இன்னொன்று, மீறலில் அல்லது உச்சநிலையில். இயல்பான நிலையில் மனிதனின் பெறுமதியை ஆராய்வதே யதார்த்தவாதத்தின் வழிமுறை. உச்சங்களில் வைத்து ஆராய்வது இரண்டு அழகியல்களின் வழிமுறை.

  1. கற்பனாவாதம் [ரொமாண்டிசிஸம்] மனிதப்பெறுமதியை ஓர் உச்சத்துக்கு கொண்டுசெல்கிறது.
  2. அதன் நேர் மறு எல்லைக்கு கொண்டுசென்று பிறழ்வெழுத்து மனிதப்பெறுமதியை ஆராய்கிறது.

கரிச்சான் குஞ்சுவின் பசித்தமானுடம் ஓரளவிற்கு இரண்டாம் வகையை சார்ந்தது.

விருதுகள்

உசாத்துணை

Template:Stub page

http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=4833

https://azhiyasudargal.wordpress.com/2010/05/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE/

https://azhiyasudargal.wordpress.com/2013/02/07/%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3/