கரடிப்பட்டி பெருமாள்மலை

From Tamil Wiki
Revision as of 18:40, 9 March 2022 by Navingssv (talk | contribs) (Created page with "thumb|''பெருமாள் மலை சமணத்தளம் பற்றிய குறிப்பு'' கரடிப்பட்டி பெருமாள்மலை மதுரையில் அமைந்த திருவுருவகம் என்னும் சமணமலைத் தொடரின் இரண்டாவது குன்று. இக்குன்று 220 மீட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பெருமாள் மலை சமணத்தளம் பற்றிய குறிப்பு

கரடிப்பட்டி பெருமாள்மலை மதுரையில் அமைந்த திருவுருவகம் என்னும் சமணமலைத் தொடரின் இரண்டாவது குன்று. இக்குன்று 220 மீட்டர் உயரம் உடையது. இம்மலையின் தெற்கே உள்ள இயற்கையானக் குகைத்தளத்தைத் “பஞ்சவர்படுக்கை” என்று அழைக்கின்றனர். இம்மலை நாகமலைப்புதுக்கோட்டையில் இருந்து மதுரை பல்கலைக்கழகம் செல்லும் நெடுங்சாலையில் உள்ள ஆலம்பட்டி, வடபழஞ்சி ஊரைத் தாண்டி அமைந்துள்ளது.

பெருமாள்மலை

பெருமாள்மலைக்கு நெடுஞ்சாலையிலிருந்து தெற்காக பிரிந்து செல்லும் வண்டி பாதை உள்ளது. சமணர்கள் இம்மலைக்கு வருவதற்கு முன்னர் பழங்குடி மக்களின் இருப்பிடமாய் இவ்விடம் இருந்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பழங்குடி ஓவியங்கள் இம்மலையில் காணப்படுகின்றன.

“பஞ்சவர்படுக்கை” என்றழைக்கப்படும் பெருமாள்மலை இக்குகைத்தளம் கிழக்கும் தெற்கும் நுழைவதற்கு ஏற்புடையதாய் திறப்பு கொண்டு அமைந்துள்ளது. இக்குகைகள் சமணர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் மழைநீர் உள்ள செல்லாமல் இருக்க மேலிருந்து கீழாக புருவம் வெட்டப்பட்டுள்ளது. கரடுமுரடாக இருந்த குகைத்தளத்தின் தரைப்பகுதி வெட்டிச் சமப்படுத்தப்படுத்தப்பட்டு அமர்வதற்கும், படுப்பதற்கும் ஏற்ற வகையில் கற்படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. மழைநீர் படுகைக்குள் புகாமல் இருக்க சிறு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. மழை, வெயில், காற்று எதுவும் குகையின் உள்ளே புகாமல் இருக்க தடுப்புகள் போடப்பட்டதற்கு சான்றாக உருவாக்கப்பட்ட பந்தல்கால்கள் நடுவதற்குரிய குழிகள் குகைத்தளத்தின் வெளிப்புறத்தில் தரை மீது வரிசையாகக் காணப்படுகின்றன.

இக்குகைத்தளத்திற்கு உள்ளும் புறமுமாக மொத்தம் இருபத்தைந்து கற்படுக்கைகள் உள்ளன. ஒரு கற்படுக்கைக்கும் மற்றொன்றிற்கும் இடையே சிறிய பிதுக்கம் காட்டப்பட்டுள்ளது. படுகைகள் நிறைந்த இக்குகைத்தளத்திற்கு வடகிழக்கில் தெற்கு நோக்கியவாறு இன்னொரு குகைத்தளமும் காணப்படுகிறது. ஆனால் இக்குகைத்தளத்தில் மழைநீரைத் தடுக்கும் புருவம் வெட்டப்படவில்லை. இங்கு தரைப்பகுதியில் பீடம் போன்ற உயர்ந்துள்ள பாறையில் ஒரு கற்படுக்கை மட்டும் தமிழ்பிராமிக் கல்வெட்டுடன் காட்சியளிக்கின்றது. பெரிய குகைத்தளத்தினை உருவாக்கியவரின் பெயர்கள் குகைத்தளத்தின் கீழ்ப்புறம் முகப்பில் புருவத்திற்கு கீழேயும், தென்புறம் படுக்கையின் அருகில் தரையிலும் தமிழ் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுகள்

இரண்டாவது உள்ள சிறிய குகைத்தளத்தில் அமைந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

கல்வெட்டு ஒன்று

”நாகப்பேரூரதைய் முசிறிகோடன் எளமகன்”

இக்கல்வெட்டு ”முசிறிக்கோடன் இளமகன்” என்பவன் இப்படுக்கையை உருவாக்கியதைக் கூறுகிறது. மேலும் இப்பள்ளியன் வடகிழக்கே அமைந்த நாகபேரூர் பற்றியும் தெரிவிக்கின்றது. தற்போது இவ்வூர் நாகமலைப்புதுக்கோட்டை என்றழைக்கப்படுகிறது. நாகமலைப் புதுக்கோட்டைக்கு தென்புறத்தில் சமணமலைக்கு வடக்கே அமைந்த இவ்வூர் இப்பகுதியில் தோன்றிய தொன்மையான ஊராகும். சங்ககாலத்தினைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் இங்கு கிடைத்துள்ளன. நாகபேரூரைச் சார்ந்தே சங்ககாலத்தில் சமணக் குன்றுகள் இருந்துள்ளன. அதன்பிறகு குயில்குடி போன்ற ஊர்கள் தோன்றியிருக்க வேண்டும். சேர நாட்டிலிருந்து நாகப்பேரூருக்கு வந்து தங்கியிருந்த சேரநாட்டு முசிறித் துறைமுகத்தினைச் சார்ந்த முசிறிக் கோடன் என்பவன் இப்பள்ளிக்கு கொடையளித்திருக்க வேண்டும். சேர நாடும், பாண்டிய நாடும் கொண்டிருந்த உறவை இக்கல்வெட்டு உணர்த்துகின்றது என இதனை ஆய்வு செய்த முனைவர் வெ. வேதாசலம் குறிப்பிடுகின்றார்.

இங்கே கல்வெட்டு நிறைந்த பெரிய குளத்தின் முகப்பில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டு உள்ளது.

கல்வெட்டு இரண்டு

"சையஅளன் விந்தைஊர் காவிய்”

விந்தையூர் காவிதி சயலன் என்பவன் இப்பள்ளியை உருவாக்கியதை இக்கல்வெட்டு கூறுகின்றது. சிலப்பதிகாரத்தில் எட்டிச்சாயலன் என்ற சமணசமய இல்லறதானின் பெயர் குறிப்பிடப்படப்பட்டிருக்கிறது. எனவே இக்கல்வெட்டில் சையஅளன் என்பது சாயலனையே குறிக்கும் என முனைவர் வெ. வேதாசலம் குறிப்பிடுகிறார். இதில் சையஅளன் என்பதை இலங்கையைச் சார்ந்தவன் என்றும் காவிய் என்பதை குகை என்றும் கருதுகின்றனர்.

கல்வெட்டு மூன்று

குகைத்தளத்தின் வெளிப்புறம் அமைந்துள்ள மூன்றாவது கல்வெட்டு படிக்க முடியாதபடி சிதைவுற்றுள்ளது.

”......திடிக......காதான்.......மைஎய்......”

தீர்த்தங்கரர் திருமேனி

முற்காலப்பாண்டியன் காலத்தில் சமண சமயத்தில் உருவ வழிபாடு இக்குகைத்தளத்தில் நடைந்ததற்கான சான்றாக திருமேனிகள் செய்து வழிபடப்பட்டுள்ளன. குகைத்தளத்துக் கற்படுக்கைப் பகுதியில் பீடத்தின் மீது தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று தனித்தநிலையில் செய்து வைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். மூன்று சிம்மங்கள் சுமந்த இணையரி ஆசனத்தில் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில் தீர்த்தங்கரர் காட்சியளிக்கின்றார். அவரது பின்புறம் திண்டும், மகரவாய்களும் காணப்படுகின்றன.