being created

கம்பர்

From Tamil Wiki
Revision as of 11:25, 30 July 2023 by Ramya (talk | contribs) (Created page with "கம்பர் (பொ.யு. 1180-1250) தமிழ்க்கவிஞர். இராமகாவியம் என்ற நூலின் ஆசிரியர். பிற்காலத்தில் அதன் சிறப்பு கருதி கம்பராமாயணம் என அழைக்கப்பட்டது. == வாழ்க்கைக் குறிப்பு == கம்பர் மயிலாடுதுறை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கம்பர் (பொ.யு. 1180-1250) தமிழ்க்கவிஞர். இராமகாவியம் என்ற நூலின் ஆசிரியர். பிற்காலத்தில் அதன் சிறப்பு கருதி கம்பராமாயணம் என அழைக்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

கம்பர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூரில்(தேரழுந்தூர்) ஆதித்தன் என்பவருக்கு மகனாக பொ.யு. 1180-ல் பிறந்தார். கம்பரை இளமைக் காலத்தில் திரிகார்த்த சிற்றரசரான சடையப்ப வள்ளல் ஆதரித்தார். பின்னர் சோழமன்னர் ஆதரித்து கம்ப நாடு என்ற பகுதியை அவருக்கு அளித்தார். கம்பரின் மகன் அம்பிகாபதியும் கவிஞன். அம்பிகாவதி சோழ மன்னனின் மகளான அமராவதியை காதலித்ததால் கொலை செய்யப்பட்டார். சோழ மன்னனுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் கம்பர், சோழநாட்டிலிருந்து ஆந்திர நாட்டிற்குச் சென்று தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கம்பர் வள்ளி என்ற தாசியைக் காதலித்து வந்ததாகவும், கம்பரை வேறு பெண்ணொருத்தி காதலித்து வந்தாலும், அவளை கம்பர் ஏற்கவில்லை எனவும் தமிழ் நாவலர் சரிதியில் சில செய்யுள்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.கம்பரை பாண்டிய மன்னனும், காகதிய ருத்திரன் என்ற மன்னனும் பாராட்டியுள்ளதாகவும், சோழ அரசன் கம்பரைக் கொல்ல திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

பெயர்க்காரணம்

  • கம்பர் குழந்தையாகக் காளி கோயில் கம்பத்தின் அருகே கிடந்ததால் இப்பெயர் பெற்றார் என்றும் கூறுவர்.
  • கம்பர் குலம் என்று அழைக்கப்படும் உவச்சர்கள் குலத்தில் பிறந்ததால் இப்பெயர் பெற்றார். காளி கோயிலில் பூசை செய்யும் மரபினர் உவச்சர்கள் என அழைக்கப்பட்டனர்.
  • கம்பங் கொல்லையைக் காத்து வந்தமையால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர்.
  • தேவாரப் பதிகங்களில் 'கம்பர்' என்று சுட்டப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள இறைவனாகிய ஏகம்பனின் பெயர் இவருக்கு இடப்பட்டது.

கம்பன் காலம்

  • கம்பரின் காலம் பொ.யு. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதி என நம்பப்படுகிறது.
  • கம்பராமாயணத்தில் சீவக சிந்தாமணியின் தாக்கம் இருப்பதால் கம்பர் திருத்தக்க தேவரின் காலத்திற்குப் பிந்தையவர் என்றும், அக்காலகட்டத்தில் ஓரங்கல் நாட்டில் அவர் தங்கியிருந்த காலத்தில் அங்கு பிரதாபருத்திரன் என்ற மன்னன் ஆண்டு வந்ததாகவும் நம்பப்படுகிறது.
  • கம்பர் மூன்றாம் குலோத்துங்கச் சோழன், பிரதாபருத்திரன் ஆகியோரின் காலத்தைச் சேர்ந்தவர் என்பதால் பொ.யு 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கம்பர் வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
  • கம்பரின் தனிப்பாடல்கள் தொகுதியிலிருந்து "எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழின் மேல்" என்ற பாடலைக் கொண்டு கம்பராமாயணம் பொ.யு. 885-ல் இயற்றப்பட்டதாக கூறுகின்றனர். இக்கருத்தினை எஸ். வையாபுரிப் பிள்ளை மறுத்து அதை இடைச்செருகல் என மதிப்பிட்டார்.
  • "ஆவின் கொடைச் சகரர்" என்ற பாடலினைக் கொண்டு பொ.யு. 978 என்றும் முதலாம் இராசராச சோழனுக்கு முன்பு இருந்த உத்தம சோழன் காலம் என்றும் சிலர் கூறினர். ஆனால் இந்த கணிப்பும் தவறானது என்று ஆய்வாளர்கள் மறுத்துள்ளர். தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் பொ.யு 1325க்கு முன்பே கம்பர் காவியத்தினை இயற்றியிருக்க வேண்டும் என்று கூறினார்.

இலக்கிய வாழ்க்கை

கம்பர் வால்மீகி ராமாயணத்தை மூல நூலாகக் கொண்டு ”இராமகாவியம்” என்ற காவியத்தை எழுதினார். பிற்காலத்தில் கம்பராமாயணம் என்று அழைக்கப்பட்டது.

இலக்கிய இடம்

  • பழமொழி: கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்; கல்வியிற் பெரியன் கம்பன்
  • பாரதியார்: “கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு”
  • கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை: “அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி”
  • வெ. இராமலிங்கம் பிள்ளை: “தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே”
  • பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்: ”விருத்தமென்னும் ஒண்பாவிற் குயர்கம்பன்”

மறைவு

கம்பர் பொ.யு பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காலமானதாக நம்பப்படுகிறது.

கம்பன் கழகம்

  • சா. கணேசன் காரைக்குடியில் 1939 ஏப்ரல் 2-ல் இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியாருடன் இணைந்து கம்பன் கழகத்தைத் தொடங்கினார். கம்பராமாயணத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.
  • எஸ்.வையாபுரிப்பிள்ளை டி.கே.சிதம்பரநாத முதலியாருடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கினார். மீ.ப.சோமு, நீதிபதி மு.மு.இஸ்மாயில், பேரா.அ.சீனிவாசராகவன், பக்ஷிராஜ ஐயங்கார் போன்றவர்கள் அதில் ஈடுபட்டனர். மர்ரே ராஜம் நிறுவனம் பதிப்பித்த கம்பராமாயண நூலை இவ்வமைப்பு பிழைதிருத்தி, பாடபேதம் நோக்கி வெளியிட்டது.
  • சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய ஊர்களிலும் கம்பன் கழகம் தொடங்கப்பட்டது.

நூல்கள்

  • கம்பராமாயணம் (இராமகாவியம்)
  • சிலையெழுபது
  • சடகோபர் அந்தாதி
  • சரசுவதி அந்தாதி
  • திருக்கை வழக்கம்
  • ஏரெழுபது
  • மும்மணிக்கோவை
  • கம்பர் தனிப்பாடல்கள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.