கனம் கிருஷ்ண ஐயர்

From Tamil Wiki
Revision as of 21:55, 19 February 2022 by Subhasrees (talk | contribs) (கனம் கிருஷ்ண ஐயர் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கனம் கிருஷ்ண ஐயர் (கிருஷ்ண ஐயர்/கனம் கிருஷ்ணையர்) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் கர்நாடக இசைக் கலைஞர். கனராகங்களைப் பாடுவதில் நல்ல திறமை பெற்றிருந்ததால் கனம் கிருஷ்ண ஐயர் என்ற பட்டப்பெயர் பெற்றார்.

இளமை, கல்வி

இன்றைய அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுகாவில் உள்ள பெரிய திருக்குன்றமென்னும் கிராமத்தில், பரம்பரையாக சங்கீதப்புலமை கொண்டிருந்த அந்தண குடும்பத்தில் இராமசாமி ஐயருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். அவர் அந்தணர்களுள் அஷ்டஸஹஸ்ரமென்னும் வகுப்பைச் சார்ந்தவர்.

இராமசாமி ஐயருக்கு ஐந்து மகன்களும் ஒரு பெண்ணும் உண்டு. பரம்பரையாக இருந்துவந்த இசைத்திறமைக்கு பல சிற்றரசர்கள் வழங்கிய பொருளும் பூமியும் இருந்தன. அதனால் சுப்பராமையருடைய தந்தையாருக்கு வறுமை இல்லை. நில வருமானங்களை வைத்துக்கொண்டு சங்கீதக் கலையையும் வளர்த்து வாழ்ந்த குடும்பம். அக்காலத்தில் கபிஸ்தலத்தில் இருந்த முத்தைய மூப்பனாருக்கும் இராமசாமி ஐயருக்கும் நெருங்கிய நட்பு இருந்து வந்தது. இராமசாமி ஐயருக்கு அவ்வப்போது மூப்பனாருடைய உதவியும் கிடைத்து வந்தது.

பெரிய திருக்குன்றம் சுப்பராமையர் இவருடைய மூத்த சகோதரர். இளமையில் இவர் உடன்பிறந்தாரோடு சேர்ந்து தந்தையிடமே இசை பயின்றார். பின்னர் அரியலூர் சண்பகமன்னாரிடம் கற்றார். சுப்பையரை போன்றே தஞ்சாவூர் பச்சை மிரியன் ஆதிப்பையரிடமும் இசை கற்றார்.

தஞ்சையிலிருந்த ராமதாஸ் என்னும் ஹிந்துஸ்தானி இசைப் பாடகரிடம் மாணவராக அமைந்து ஹிந்துஸ்தானி இசையிலும் பயிற்சி பெற்றார்.

இசைப்பணி

இசையில் கனமார்க்கம் என்பது மூலதாரத்தில் இருந்து கம்பீரமான் குரல் எழுப்பிப் பாடுவது. தமிழ் இலக்கியங்களில் இவ்வகைப்பாட்டு உள்ளாளப் பாட்டு எனப்படுகிறது. தஞ்சைக்கு வந்த பொப்பில் கேசவைய்யா என்னும் கலைஞர் இவ்விதம் பாடக் கேட்டு, தானும் அதுபோல் பாட வேண்டுமென விரும்பி, கபிஸ்தலத்தில் தங்கி அசுர சாதகம் செய்து பின் அரசவையில் அதுபோலப் பாடினார்.

திருக்குன்றத்தில் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் மீது கீர்த்தனங்களும் பல பதங்களும் பாடியிருக்கிறார். தஞ்சை அரசர் அமரசிம்மர் மீதும் சில கீர்த்தனைகள் பாடியுள்ளார். இவர் பல நாட்டிய பதங்களை இயற்றியிருக்கிறார். இவருடைய 57 கீர்த்தனைகளை உ.வே. சாமிநாதையர் பதிப்பித்துள்ளார். அவற்றுள் “சும்மா சும்மா வருமோ சுகம்” (ராகம் அடானா), “ஜகஜ் ஜனனீ சுகவாணி கல்யாணி” போன்றவை புகழ் பெற்றவை.

இவர் “வேலர்” என்னும் முத்திரையைத்[1] தன் பாடல்களில் பயன்படுத்தினார். அரிதாக சில பாடல்களில் தன் பெயரையே முத்திரையாக பயன்படுத்தியிருக்கிறார்.

மாணவர்கள்

கனம் கிருஷ்ண ஐயர் கோபாலகிருஷ்ண பாரதிக்கு முதல் இசை குருவாக இருந்தார். திருவழுந்தூர் சுப்பிரமணிய பிள்ளை இவரிடம் கனமார்க்கத்தையும் சக்கரதானத்தையும் கற்றார். உ.வே.சாமிநாதையரின் தந்தை இவரிடம் 12 வருடங்கள் இசை கற்றார். தஞ்சை ஆதிமூர்த்தி ஐயர், தேப்பெருமா நல்லூர் கிருஷ்ண பாகவதர், சுப்பராய ஐயர் முதலியோர் இவரிடம் கற்ற பிற மாணவர்கள்.

பாடல்கள் சில

முருகன் மீது இவர் பாடிய பைரவி ராகத்தில் அமைந்த பதம், புகழ்பெற்றது:

பல்லவி

வேலவரே உம்மைத் தேடி ஒரு மடந்தை

விடியுமளவும் காத்திருக்கிற வகை என்ன (வேலவரே)

அனுபல்லவி

வாலிபமும் சேல் விழியும் வில்புருவம்

வடிவில் னூலிடையும் மதிவதனமும்

மேலுமவள் மேனி பசும் பொன் நிறமே

மின்னற்கொடி போல் அன்ன நடையாள் ஒயிலாகவே (வேலவரே)

இப்பாடல் பாலசரஸ்வதி அபிநயத்தாலும் அவர் தாயார் ஜெயம்மாள் பாட்டாலும் மிகவும் புகழ்பெற்றிருந்தன.

இவருடைய பாடல்களில் அனேகமானவை மனிதர்கள் மீதானவை, தன் இறுதிக்காலத்தில் இதை உணர்ந்து இறை மீதான பாடல்களை அதிகம் இயற்றத் தொடங்கினார்.

இவர் மதுரை மீனாட்சியம்மை மீது பாடிய ”ஜகத் ஜனனி” எனத்தொடங்கும் பாடல் 1950-களில் மிகவும் புகழ்பெற்றிருந்தது.

ராகம்: ரதிபதிப்ரியா தாளம்: ஆதி

பல்லவி

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி

அனுபல்லவி

சுகஸ்வரூபினி மதுரவாணி

சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி (ஜகத் ஜனனி)

சரணம்

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ

பஞ்சமி பரமேஸ்வரி

வேண்டும் வரம் தர இன்னும் மனம் இல்லையோ

வேதவேதாந்த நாத ஸ்வரூபினி (ஜகத் ஜனனி)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் ஒவ்வொரு பாடலிலும் இடம்பெறும் வகையில் எழுதுவார்கள். அச்சொல் முத்திரை எனப்படும்.