கணேஷ்,வசந்த்

From Tamil Wiki
Revision as of 13:21, 22 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|கணேஷ் வசந்த் கணேஷ்,வசந்த் : எழுத்தாளர் சுஜாதா உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரங்கள். கணேஷ் வழக்கறிஞர், வசந்த் அவருடைய துணைவழக்கறிஞர். அவர்கள் தனிப்பட்டமுறையில்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கணேஷ் வசந்த்

கணேஷ்,வசந்த் : எழுத்தாளர் சுஜாதா உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரங்கள். கணேஷ் வழக்கறிஞர், வசந்த் அவருடைய துணைவழக்கறிஞர். அவர்கள் தனிப்பட்டமுறையில் குற்றங்களை புலனாய்வு செய்கிறார்கள்.

வரலாறு

கணேஷ் சுஜாதா எழுதிய நைலான் கயிறு நாவலில் ஒரு சிறு கதாபாத்திரமாக அறிமுகமானார்.

கணேஷின் முதல் தோற்றம் நைலான் கயிறு நாவலில். அறுபதுகளின் பின் பாதியில் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. கணேஷ் ஒரு துணை கதாபாத்திரம். அப்போதெல்லாம் அவருக்கு டெல்லி வாசம். வசந்த் கிடையாது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட யாருக்கோ ஆஜராகி அவருக்கு விடுதலை வாங்கித் தருவார். பாதி கதையில் காணாமல் போய்விடுவார்.

வசந்துக்கு முன்னால் கணேஷுக்கு நீரஜா என்று ஒரு அசிஸ்டன்ட் உண்டு. பாதி ராஜ்யம் என்ற கொஞ்சம் நீளமான கதையில் முதன் முதலாக க்ளையன்டாக வருவார். பிறகு ஒரு விபத்தின் அனாடமி என்ற கதையில் அசிஸ்டன்டாக ப்ரமோஷன்.

கணேஷ் எப்போது டெல்லியிலிருந்து சென்னை வந்தார் என்று சரியாகத் தெரியவில்லை. சென்னை வந்தபிறகுதான் வசந்த் வந்து ஒட்டிக்கொள்வார். வசந்தின் முதல் தோற்றம் காயத்ரியில் என்று நினைக்கிறேன். சாவி ஆசிரியராக இருந்த பத்திரிகை, எது என்று சரியாக நினவு இல்லை. தினமணி கதிரோ? ஜெயராஜின் ஒரு படம் பார்த்து மனம் கிளர்ந்தது ஞாபகம் இருக்கிறது. அன்றைய சூழ்நிலையில் அது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி கதைதான். பிறகு பிரியாவில் வசந்துக்கு ஒரு கௌரவத் தோற்றம்.

நிர்வாண நகரம் வந்த நாட்களில் அவர்கள் காரக்டர்கள் கச்சிதமாக உருவாக்கப்பட்டுவிட்டன.  மேற்கே ஒரு குற்றம் போன்ற மாத நாவல்களில் அவர்கள் இருவருக்குமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மனதில் முடிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன. வசந்த்! வசந்த்! நாவல் கல்கியில் வந்தபோது வசந்துக்குத்தான் அதிக ரசிகர்கள் என்று தோன்றியது.

எண்பதுகளின் ஆரம்பத்தில் குமுதம் இல்லாவிட்டால் விகடன் இல்லாவிட்டால் கல்கி இல்லாவிட்டால் குங்குமம் என்று எங்கேயாவது ஒரு கணேஷ் வசந்த் தொடர்கதை வந்துகொண்டே இருக்கும். ஒன்றும் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு மாத நாவலிலாவது வந்துவிடுவார்கள்.

எண்பதுகளின் முடிவில் பாலகுமாரன் புதிய நட்சத்திரமாக தோன்றிவிட்டார். இருந்தாலும் இவர்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. சில்வியா, மெரீனா போன்ற நீள் கதைகளில் வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால் படிக்கும் எனக்கு வயதாகிவிட்டதாலோ என்னவோ கதையின் முடிச்சுகள் சுலபமாக பிடிபட ஆரம்பித்துவிட்டன. கணேஷ் வசந்த் கதைகள் ஒரு ஆம்னிபஸ் வடிவில் வெளியிடப்பட்டால் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். வந்திருக்கிறதா?

ஜெய்ஷங்கர் காயத்ரி, இது எப்படி இருக்கு (அனிதா இளம் மனைவியின் படமாக்கல்) ஆகியவற்றிலும் ரஜினிகாந்த் ப்ரியாவிலும் கணேஷாக நடித்திருக்கிறார்கள். காயத்ரியில் வெண்ணிற ஆடை மூர்த்திதான் வசந்த்!

டிவி சீரியல் எதுவும் இன்னும் வரவில்லையா? டிவி சீரியலாகவும் வந்திருக்கிறதாம். எண்பதுகளின் டம்மி ஹீரோக்களில் ஒருவரான சுரேஷ் கணேஷாகவும், விஜய் ஆதி ராஜ் வசந்தாகவும் நடித்திருக்கிறார்களாம். விவரம் சொன்ன வெங்கட்டுக்கு நன்றி. சுரேஷுக்கு வேஷப்பொருத்தம் நன்றாக இருக்கும். ஆனால் விஜய் ஆதி ராஜுக்கு கொஞ்சம் முற்றிய முகம். அவருக்கும் கணேஷ் வேஷம்தான் நன்றாக பொருத்தும் என்று தோன்றுகிறது.

எண்பதுகளின் ஆரம்பத்தில் எங்கள் கனவுகளில் கண்ணாடியுடன் ரஜினி கணேஷாகவும், கமல் வசந்தாகவும் இருந்தார். இன்றைக்கு பிரகாஷ் ராஜ் நல்ல கணேஷாக இருப்பார் என்று நினைக்கிறேன். வசந்த்தாக சிம்பு?