under review

கட்டளைக் கலித்துறை

From Tamil Wiki

கலித்துறையின் வகைகளுள் ஒன்று கட்டளைக் கலித்துறை. கட்டளை = எழுத்தின் அளவு. இக்கலித்துறையில் நான்கடிகளிலும் எழுத்தெண்ணிக்கை ஒரே மாதிரியாக வருவதால் இப்பெயர் பெற்றது. காப்பியங்கள், பக்தி இலக்கியம், பட்டினத்தார் பாடல் போன்றவற்றில் பெருவழக்காக உள்ள யாப்பு கட்டளைக் கலித்துறை. தஞ்சைவாணன் கோவை, அபிராமி அந்தாதி முதலிய நூல்களும் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவையே. கட்டளைக் கலித்துறை கலி மண்டிலத் துறை, கலி நிலைத் துறை என இருவகைப்படும்.

கட்டளைக் கலித்துறை இலக்கணம்

  • கலித்துறையின் ஒரு வகை, கட்டளைக்கலித்துறை.
  • கட்டளை = எழுத்தின் அளவு. இக்கலித்துறையில் நான்கடிகளிலும் எழுத்தெண்ணிக்கை ஒரே மாதிரியாக வருவதால் இப்பெயர் பெற்றது.
  • நெடிலடிகள் நான்கு கொண்டிருக்கும்.
  • ஒவ்வொரு அடிக்குள்ளும் வெண்டளை பயின்று வரும்.
  • அடிக்குள் ஐந்தாம் சீர் விளங்காய்ச்சீராக இருத்தல் வேண்டும். அருகி விளங்காய்ச் சீருக்குப் பதிலாக மாங்கனி அல்லது மாந்தண்பூவும் வரலாம்.
  • அடிக்குள் ஐந்தாம் சீர் தவிர்த்த பிறசீர்களில் விளங்காய் வருதல் கூடாது
  • அடி நேரசையில் தொடங்கினால், மெய்யொழித்து 16 எழுத்துக்களும், நிரையசையானால் 17 எழுத்துக்களும் கொண்டிருத்தல் வேண்டும். (எண்ணுகையில் ஒற்றெழுத்து தவிர்க்கப்பட வேண்டும்)
  • கடைசி அசை ஏகாரத்தில் முடிதல் வேண்டும்
  • அனைத்து அடிகளிலும் ஒரே அடி எதுகை அமைதல் வேண்டும்.

உதாரணப் பாடல்

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்தலை மேல்அயன் கையெழுத்தே

- மேற்கண்ட பாடல், நேரசையில் தொடங்கியுள்ளது. ஒவ்வோரடியிலும் ஒற்று நீங்கப் பதினாறு எழுத்துகள் வந்துள்ளன. முதல் நான்கு சீர்களில் வெண்டளை அமைப்பு. ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீர். ஏகார முடிவு ஆகிய இலக்கணங்களும் பொருந்தியிருப்பதால் இது கட்டளைக் கலித்துறை ஆகும்.

கட்டளைக் கலித்துறை வகைகள்

கட்டளைக் கலித்துறை இரண்டு வகைப்படும்.

அவை,

  • கலி மண்டிலத் துறை
  • கலி நிலைத் துறை
கலி மண்டிலத் துறை
கலி மண்டிலத் துறை இலக்கணம்
  • கலி மண்டிலத் துறை நெடிலடிகள் கொண்டதாய் அமையும்.
  • அடிதோறும் கூற வந்த பொருள் முடிந்து காணப்படும்.
  • அடியை மாற்றி அமைத்தாலும் பொருள் மாறாது.
  • அடிதோறும் ஒரே எதுகை கொண்டிருக்கும்.
உதாரணப் பாடல்

மிக்க மாதவம் வீட்டுல கடைதலை விளைக்கும்
தக்க தானங்கள் தணப்பரும் போகத்தைப் பிணிக்கும்
தொக்க சீலங்கள் ஏக்கமில் துறக்கத்தைப் பயக்கும்
சிக்கென் பூசனை திகழொளிப் பிழம்பினைத் திருத்தும்

- மேற்கண்ட பாடல், நான்கு அடிகளில் அடிதோறும் ஐந்து சீர்களைக் கொண்டுள்ளது. அடி தோறும் கூற வந்த பொருள் முடிந்துள்ளது. அடி மாறினாலும் பொருள் மாறுவதில்லை. ஆகவே இது கலிமண்டிலத் துறை.


கலி நிலைத் துறை
கலி நிலைத்துறை இலக்கணம்
  • காவியங்களிற் பயின்று வருவதனால் காப்பியக் கலித்துறை என்றும் அழைக்கப்படும்.
  • நெடிலடிகள் நான்கு கொண்டிருத்தல் வேண்டும்.
  • அனைத்து அடிகளிலும் ஒரே அடி எதுகை அமைதல் வேண்டும் என்பது கலி நிலைத் துறையின் இலக்கணம்.
உதாரணப் பாடல்

கொண்டு விண்படர் கருடன் வாய்க் கொடுவரி நாகம்
விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்ட வன்தேரை
மண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு
வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்

- மேற்கண்ட பாடல் நான்கு சீர்களுக்கு அதிகமான நெடிலடிகள் நான்கினைக் கொண்டுள்ளது. கொண், விண், மண், வண் என்று ஒரே எதுகை அமையப் பெற்றுள்ளதால் இது கலி நிலைத் துறை.

உசாத்துணை


✅Finalised Page