being created

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்

From Tamil Wiki

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் மலைமீது அமைந்துள்ள சிவன் கோவில். கிழக்கு நோக்கிய கோவில் மூலவர் லிங்க வடிவ சந்திரசூடேஸ்வரர், அம்மன் பெயர் மரகதாம்பிகை.

இடம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இரயில் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை-7 அருகில் மலை மீது மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல வாகனங்கள் செல்லும் சாலை, 200 படிகள் கொண்ட நடைபாதை உள்ளன.

பெயர்

கல்வெட்டுகளில் ஊர் பெயர் ஓசூர் என இல்லை. முடிக்கொண்ட சோழமண்டலம், இராசேந்திர சோழ வளாநாடு, முரசு நாடு, சேவிடைப்பாடி என்னும் பெயர்களில் அறியப்படுகிறது. கோவில் அமைந்திருக்கும் மலை விருமாச்சலம், சம்பகாத்ரி, கௌதியா பருவதம் என்னும் புராணப் பெயர்களால் அறியப்படுகிறது.

எட்டு கல்வெட்டுகளில் கோவில் இறைவன் செவிடநாயனார், சேவுடைநாயனார், உடையார் சேவுடைநாயனார் என்னும் பெயர்களில் அறியப்படுகிறார். சிறு வேறுபாடுகளுடன் அறியப்படும் இப்பெயர்களிலிருந்து காளையை உடைய சிவன் என்னும் பொருள் கொள்ள முடிகிறது. விஜயநகர மற்றும் ஹொய்சாள கல்வெட்டுகளில் சூடநாதர் என்னும் பெயர் உள்ளது. செவிடநாயனார் என்னும் பெயர் சூடநாதர் என்று மருவி இபோது சந்திரனை சூடியவர் என்னும் பொருளில் சந்திரசூடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

மேலும் சோக்குட நாயனார், சேவிடநாயனார் நம்பிராட்டியார் என்னும் பெயர்களும் கல்வெட்டுகளில் உள்ளன.

மூலவர்

மூலவர் லிங்க வடிவ சிவன். சந்திரசூடேஸ்வரர், சூடனதேசீவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். கல்வெட்டுகளில் சேவுடை நாயனார் என்னும் பெயர் காணப்படுகிறது. மூலவரின் துணையான அம்மன் மரகதாம்பிகை, பச்சையம்மன், பர்வதாம்மாள் என்ற பெயர்களில் அழைக்கபடுகிறார்.

தொன்மம்

கோவிலைப் பற்றிய சில புராணக்கதைகள் வாய்மொழியாக உள்ளன.

உடும்புக் கதை

தருமதேவன், சிவனை நோக்கி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடுந்தவம் புரிய சிவன் காட்சியளித்தார். தன்னை சிவனின் வாகனமாக மாற்றும்படி சிவனைக் கேட்டார். சிவன் வரமளிக்க தருமதேவன் தனது வடிவில் மலை ஒன்றை இவ்விடத்தில் உருவாக்கி அதில் தம்பதியாக காட்சியளிக்க கேட்டுக்கொண்டார். சிவன் நந்தி வடிவிலில் மலைய உருவாக்கி பாரவதியை அங்கு வரவழைக்க திருவிளையாடல் ஒன்று புரிந்தார்.

சிவன் மரகத வண்ண வாக் கொண்ட பலவண்ண உடும்பு வேடம் கொண்டு விளையாட்டு காட்டி ஓடினார். பார்வதி அதனைத் துரத்திச் சென்று ஒருக் கட்டத்தில் அதன் வாலைப்பிடிக்க உடல் மரகத வண்ணம் ஆனது(மரகதாம்பிகை, பச்சையம்மன் - பெயர் காரணம்). பார்வதி உடலின் நிறமாற்றம் கண்டு சுதாரிப்பதற்குள் உடும்பு தப்பி ஓடியது. பார்வதியால் பல மலைகள் துரத்தப்பட்டு ஓசூர் மலைக்கு வந்தது. அங்கு தவம் செய்து கொண்டிருந்த இரு முனிவர்களில் ஒருவர் பலவண்ண உடும்பை கண்டு அதனை இன்னொருவருக்கு காட்ட அழைத்தார். சத்தம் கேட்டு உடும்பு தப்பி மறைந்தது. கோபும் கொண்ட பார்வை முனிவர்களை அழைத்தவரை ஊமையாகவும் கேட்டவரை செவிடாகவும் மாற்றினார்.

முனிவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி மனம் வருந்தி பிராத்திக்க சிவன் காட்சிக் கொடுத்து இரு முனிவர்களும் வேடர் குலத்தில் பிறந்து வளர்ந்து வேட்டைக்கு செல்கையில் தான் உடும்பு வடிவில் காட்சிக் கொடுத்து சாப விமோசனம் அழிப்பதாக வாக்களித்தார். பார்வதி ஓடி வந்ததால் ஏற்பட்ட தாகத்தை உணர்ந்து சிவனிடம் நீர் கோர சிவன் மலையில் ஊற்றுக் குளம் ஒன்றை உருவாக்கினார். குளத்து நீரில் பார்வதி கைப்பட்டதும் குளத்து நீர் பச்சை வண்ணம் பெற்றது(பார்வதி நீர் அருந்தியதாக நம்பப்படும் பச்சைக் குளம் ஆலய வளாகத்தில் உள்ளது).

முனிவர்கள் வேடர் பிறந்து வளர்ந்தனர், ஒரு நாள் வேட்டையாட இம்மலைக்கு வருகையில் உடும்பு வடிவில் சிவனைக் கண்டு சாபத்திலிருந்து விடுபட்டனர்.

கோவில் விவரங்கள்

  • நடை திறப்பு: காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை
  • மூலவர்: சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை
  • தல விருட்சம்: வில்வம்
  • தீர்த்தம்: பச்சைக் குளம்
  • முகவரி: அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில், ஓசூர் - 635 109, கிருஷ்ணகிரி மாவட்டம்.
  • தொலைபேசி எண்: 04344 292 870

கோவில் அமைப்பு

சந்திரசூடேஸ்வரர் கோவில் மலை உச்சியில் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் செல்ல மலை அடிவாரத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி சாலையும் சற்று உள்ளே 200 படிகளைக் கொணட நடைபாதையும் உள்ளன. சாலை வழி ராஜ கோபுரத்தின் வலது பக்கத்திலும் நடை பாதை படிகள் ராஜ கோபுரத்தின் முன்னிலும் இணைகின்றன. கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்னும் அமைப்பைக் கொண்டது.

விநாயகர் கோவில்

படிக்கட்டு பாதையின் தெற்கில் வடக்கு நோக்கி விநாயகர் கோவில் உள்ளது, சதுர வடிவ கருவறை, சதுரவடிவ பீடத்தின் மீது விநாயகர் சிற்பம் உள்ளது. எளிமையான கோவில், செங்கற்களாலான சுதைக் கட்டுமானம். அதிட்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் பகுதிகளைக் கொண்டது.

சண்டிகேஸ்வரர் கோவில்

விநாயகர் கோவிலுக்கு மேலே படிக்கட்டு வழியில் சண்டிகேஸ்வரர் கோவில் தெற்கு நோக்கி உள்ளது. கருவறை முன்பு எட்டு தூண்கள் உள்ளன, உயரம் 180 செ.மீ. அகலம் 100 செ. மீ. கொண்டவை. கருவறை அதிட்டானம், சுவர், பிரஸ்தரம், விமானம் என்னும் அமைப்புக் கொண்டது. விமானத்தில் கர்ணக்கூடுகள், நந்திகள் உள்ளன. சண்டிகேஸ்வரர் நின்ற கோலத்தில் உள்ளார். கறுவறை முன் பாதம் மற்றும் பலிபீடம் உள்ளன.

நுழைவாயில் மண்டபம்

படிக்கட்டு பாதை நுழைவாயிலில் மண்டபம் உள்ளது, நான்கு வட்ட வடிவ தூண்களும் இரண்டு சதுர வடிவ தூண்களும் கொண்டது. இருபுறமும் சிறிய அறைகள் உள்ளன. கோயில் வரை 200 கருங்கல் படிகள், சில படிகளில் கல்வெட்டுகள் உள்ளன.

பச்சைக் குளம்

சந்திரசூடேஸ்வரர் மலையின் கீழே மேற்குப் பக்கம் சுற்றிலும் கருங்கல் கட்டுமானத்துடன் கூடிய குளம் உள்ளது. குளத்தின் நீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. குளத்தின் கிழக்கிலும் தெற்கிலும் இரண்டு மண்டபங்கள் உள்ளன. குளத்தின் தெற்கு கரையில் புற்று மற்றும் ஆஞ்சநேயர் , நாகதேவதை சிற்பங்கள் உள்ளன. குளத்தின் மேற்கில் காசி விஸ்வநாதர், கிழக்கில் நடராஜர் கோவில்கள் உள்ளன. குளத்தின் வடக்கில் உடை மாற்றும் அறை உள்ளது. குளத்தின் நடுவில் தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது.

தெற்கு மண்டபம்: நான்கு தூண்கள் கொண்டது. 4 பட்டை, 8 பட்டை, 16 பட்டை கொண்ட தூண்கள்.

கிழக்கு மண்டபம்: ஆறு தூண்கள் கொண்டது, 4 பட்டை, 8 பட்டை, 16 பட்டை கொண்ட தூண்கள்.

நடுமண்டபம்: அதிட்டானம் நான்கு தூண்கள் கொண்டது, சுவர்ப் பகுதி எட்டு தூண்கள் கொண்டது, தூண்கள் வட்ட வடிவம். விமானம் சுதையால் ஆனது, வேசரப் பகுதி கொண்டது, நாரி முகம், நந்திம் கர்ணக்கூடுகள் உள்ளன, மகாபத்மத்தில் ஸ்தூபி உள்ளது, ஸ்தூபியில் வெண்கல கலசம் உள்ளது.

நடராஜர் கோவில்: கருங்கல் கட்டுமானம்; தூணில் முத்துமாலை சிற்பம் உள்ளது; மடப்பள்ளி, நவகிரகம், முருகன், மடப்பள்ளி உள்ளன.

ராஜ கோபுரம்

விஜயநகர மேரரசு காலத்தில் கட்டத் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்ட ராஜகோபுரம் இடிக்கப்பட்டு, 112 அடி உயரத்தில் ஏழு நிலைகளுடன் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டது. 2023-ஆம் ஆண்டு ஜூன் 28-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது,மேற்கு நோக்கி அமைந்தது, உச்சியில் கலசங்கள் உள்ளன.

தெற்கு கோபுரம்

ராஜ கோபுரம் வழி உள்ளே சென்று கோவில் வெளிப்பிரகார மதில்ச் சுவரின் தெற்கு வாயில் வழி செல்கையில் தெற்கு கோபுரம் உள்ளது. தெற்கு கோபுரம் சாலை, பஞ்சரம், கூடு என்னும் உறுப்புகளால் ஆனது. இரண்டு வாயில்கள், ஐந்து நிலைகள் கொண்டது, அதிட்டானம் முதல் பிரஸ்த்தானம் வரை கருங்கல் கட்டுமானம். ஐந்து நிலைகளிலும் விநாயகர், முருகர், ஆலமர்செல்வர், சண்டிகேஸ்வரர், துவாரபாலிகை, அடியவர், யாளி ஆகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. அதிட்டானம் உபபீடம், பத்மம், ஜகதி, விருத்தம், குமுதம், கண்டம், கபோதம், பட்டிகை என்னும் உறுப்புகள் கொண்டது. சுவர்ப்பகுதி வேலைபாடுகளுடைய எட்டு அரைத்தூண்கள் கொண்டது, சிற்பங்கள் இல்லை. பிரஸ்தாரம் வேதிகை, பட்டி, மகரதோரணம், கபோதம், உத்திரம் என்னும் உறுப்புகள் கொண்டது. சாலை என்னும் சிகரத்தின் மீது பத்மம், கண்ணாடிச் சட்டம், அலங்குகள், கட்டுமாலை உள்ளன. கோபுரத்தில் கலசங்கள் இல்லை.

வெளிப்பிரகாரம்

வெளிப்பிராகாரம் பிற்காலத்தில் கட்டப்பட்ட இரண்டு மீட்டர் உயர மதில் சுவரால் சூழப்பட்டுள்ளது. தெற்கு, மேற்கு வாயில்கள் உள்ளன. தெற்கு வாயிலை ராஜ கோபுர வழி தெற்கு வாயிலை வந்தடையும். கிழக்கு வெளிப்பிரகாரத்தில் கருவறை வாசல் எதிரே கொடிமரம் உள்ளது. நான்கு மூலைகளிலும் நாகபந்த அமைப்பு உள்ளன. தென்கிழக்கில் ஊஞ்சல் மண்டபம், வில்வமரம், தென்னைகள் உள்ளன. வடமேற்கில் தண்ணீர் தொட்டி உள்ளது.

திருச்சுற்று

சந்திரசூடேஸ்வர் கோவில் கருவறையைச் சுற்றி நீண்ட திருச்சுற்று பாதை உள்ளது. திருச்சுற்றில் ராஜகணபதி, சண்முகர், சண்டிகேஸ்வரர், பிரம்மா, விஷ்ணு ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன.

கிழக்கு திருச்சுற்று: கருவறைக்கு நேராக பலிபீடம், வடகிழக்கில் நவகிரகங்கள் உள்ளன. கஜலட்சுமி, அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் சிற்பங்கள் உள்ளன. கிழக்குத் திருச்சுற்று 19 தூண்கள் கொண்டது.

தெற்கு திருச்சுற்று: மகமண்டபத்தின் தெற்கு வாயிலின் இருபுறமும் துவாரபாகர் சிற்பங்கள் உள்ளன. நாகலிங்கேஸ்வரர், நாகர் சிற்பங்கள் உள்ளன. கருவறை அருகே எளிமையான ராஜகணபதி சன்னதி உள்ளது. ஜலகண்டேஸ்வரர் பீடம் உள்ளது. தெற்குத் திருச்சுற்று 40 தூண்கள் கொண்டது. .

மேற்கு திருச்சுற்று: மேற்கு திருச்சுற்று 23 தூண்கள் கொண்டது.

வடக்கு திருச்சுற்று: மரகதாம்பிகை கோவில் கருவறை உள்ளது. அம்மன் கருவறை அதிட்டானம், உபபீடம், ஜகதி, குமுதம், கபோதம், பட்டி, கண்டம் என்ற அமைப்பு கொண்டது. சண்டிகேஸ்வரர் சன்னதி, நந்தி, பஞ்சமூர்த்தி லிங்கம் உள்ளது. மூன்று தூண்கள் கொண்டது.

திருச்சுற்று மாளிகை

திருச்சுற்று பாதையை ஒட்டி திருச்சுற்று மாளிகை நடந்து சென்று பரிவார தெய்வங்களை வணங்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு திருச்சுற்று மாளிகையில் குருபரர், பிச்சாண்டவர், காலபைரவர் உள்பட சில தெய்வச் சிற்பங்கள் உள்ளன. கிழக்கு திருச்சுற்று மாளிகையில் நந்தி, ஈசன் மற்றும் தென்கிழக்கில் அக்னி சிற்பங்கள் உள்ளன. தெற்கு திருச்சுற்று மாளிகையில் 16 தூண்கள் மற்றும் தூண்களுக்கு இடையே எமதர்மர், வீரபத்திரர் மற்றும் கஜலட்சுமி சிற்பங்கள் உள்ளன. மேற்கு திருச்சுற்று மாளிகையில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் உள்ளன.

மகாமண்டபம்

சந்திரசூடேஸ்வரர் கோவில் மகாமண்டபம் கிழக்கு மேற்காக ஆறு தூண்களுடன் நீள்சதுர வடிவில் அமைந்துள்ளது. மண்டபத்தின் நடுவில் நந்தி உள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் சிற்பங்கள் நின்ற கோலத்தில் கருவறையை நோக்கியபடி உள்ளன, இடப்பக்கம் சூரியனின் சிற்பம் உள்ளது. மண்டபத்தின் வடக்கு பகுதியில் செவ்வக வடிவ மேடையுடன் உதிராயண மண்டபம் உள்ளது, சிற்பங்கள் இல்லை. மண்டபத்தின் தெற்கே வாயில் உள்ளது.

அர்த்தமண்டபம்

கருவறை முன் சதுர வடிவ அர்த்த மண்டபம் உள்ளது, நான்கு தூண்கள் கொண்டது. தூண்கள் கீழ்பகுதி 4 பட்டையும் அடுத்தடுத்த பகுதிகள் 8, 16 பட்டைகள் கொண்டுள்ளன. தூண்கள் இடை, கலசம், குடம், இதழ், பத்மம், பலகை, போதிகை என்னும் உறுப்புகள் கொண்டது. மண்டப வாயில் 180 செ.மீ. உயரமும் 160 செ.மீ. அகலமும் கொண்டது. வாயிலில் நாகபந்தம், தாமரை இலை ஆகிய சிற்பங்கள் உள்ளன.

மூலவர் கருவறை

கிழக்கு நோக்கியது, சதுர வடிவம் , 5 அடி நீள அகலம் கொண்டது. மூலவர் லிங்க வடிவ சந்திரசூடேஸ்வரர் என்னும் சிவன். லிங்கத்தின் ஆவுடையார் வெளியில் தெரியவில்லை, மேற்பரப்பில் பிரபை ஆவுடையார் வெள்ளித் தகடு கொண்டுள்ளது. கருவறையின் எதிரே நீள்சதுர வடிவ சிறிய நந்தி மண்டபம் உள்ளது. மண்டபத்தின் வாயில் பூவேலைபாடுகள் கொண்ட பித்தளை தகட்டால் பொதியப்பட்டுள்ளது.

சிற்பங்கள்

உலோகச் சிற்பங்கள்
சோமாஸ்கந்தர்

கிரீட மகுடத்துடன் இடது காலை மடக்கியும் வலது காலை நீட்டியும் பத்ம பீடத்தில் அமர்ந்தபடி உள்ளார். வலது காதில் மகர குண்டலமும் இடது காதில் விருத்த குண்டலமும் அணிந்துள்ளார். தோள்மாலை, கழுத்தில் சர்ப்பளி, மார்புவரை படரும் ஆரம், வயிற்றுப் பகுதியில் உதர பந்தம், கை வளை, கால் தண்டை ஆகிய அணிகலன்கள் அணிந்துள்ளார். நான்கு கரங்களில் முன் வலது கரத்தில் அபய முத்திரையும், முன் இடது கரத்தில் வரத முத்திரையும், பின் வலது கரத்தில் மழுவும், பின் இடது கரத்தின் மானும் உள்ளன. இடுப்பில் இடுப்பிக்கச்சை உள்ளது. இடுப்பில் இருந்து தொடை வரை ஆடை அணியப்பட்டுள்ளது.

சோமாஸ்கந்தர் அம்மன்

கிரீட மகுடத்துடன் வலது காலை மடக்கியும் இடது காலை தொங்க விட்டும் பத்ம பீடத்தில் அமர்ந்தபடி உள்ளார். காதில் குழை, கழுத்தில் கடிகை, சரப்பளி ஆகிய அஇகலன்கள் அணிந்துள்ளார். தோள் மாலை கைமுட்டி வரை உள்ளது. இடுப்பில் இருந்து பாதம் வரை ஆடை அணிந்துள்ளார். காலில் தண்டை உள்ளது. இரண்டு கரங்களில் வலது கரத்தில் கடக முத்திரையும், இடது கரத்தில் பூஸ்பரிச வரத முத்திரையும் கொண்டுள்ளார்.

கந்தர்

தலையில் கரண்அ மகுடம் இடுப்பில் ஆதிவாசிகளின் ஆடை அணிந்துள்ளார். பாதத்தில் சதுர தாண்டவம் காட்டப்பட்டுள்ளது. கைகளில் சக்தியும் சூலமும் உள்ளன.

வள்ளி

வள்ளி தலையில் மகுடம் அணிந்துள்ளார். மார்புக்கச்சை காட்டப்படவில்லை. இரண்டு கைகளில் வலது கரத்தில் மலரும் இடது கரத்தில் டோல ஹஸ்தமும் கொண்டுள்ளார். கைகளில் வாகுவளைகள் மற்றும் காதிலும் கழுத்திலும் ஆபரணங்கள் அணிந்துள்ளார்.

தெய்வானை

தெய்வானை தலையில் மகுடம் அணிந்துள்ளார். வலது கையை தொங்கவிட்டபடியும் இடதுகையில் மலர் ஏந்தியபடியும் உள்ளார். மார்புக்கச்சை அணிந்துள்ளார். காலில் தண்டையும் கழுத்திலும் கைகளிலும் ஆபரணங்கள் அணிந்துள்ளார். இடுப்பில் இருந்து கணுக்கால் வரை ஆடை அணிந்துள்ளார்.

நந்தி

நந்தி சிறிய அளவிலானது. கழுத்தில் மணியும் முதுகில் மேல் கட்சமும் உள்ளன.

அம்மன்

தலையில் கரண்ட மகுடத்துடன் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். கண்டிகை, அரும்புச்சரம், சரப்பளி, தோள்மாலை, தோள் வளை, கைவளை ஆகிய அணிகலன்கள் அணிந்துள்ளார். இடுப்பு முதல் பாதம் வரை ஆடை அணிந்துள்ளார். வலது கை கடக முத்திரை மற்றும் இடது கை டோல ஹஸ்தம் கொண்டும் உள்ளன.

நடராஜர்

நடராஜர் வலது காலை முயலகன் என்னும் பூதத்தின் மீது வைத்தபடியும் இடது காலை தூக்கியபடியும் விரித்த சடைமுடியுடன் ஆடிய நிலையில் உள்ளார். தலையில் கங்கை, பிறை சூடியுள்ளார். இடுப்பில் ஆடை பறந்தபடி உள்ளது. நான்கு கைகளில் மேல் இரண்டு கரங்களில் துடியும், அக்னியும் கீழ் இரண்டு கரங்களில் வலது கை அபய முத்திரையும் இடது கை கஜ அஸ்தமும் தாங்கி உள்ளன. நடராஜருக்குப் பின் அக்னி சுடர்களுடன் கூடிய திருவாச்சி உள்ளது.

சிவகாமி அம்மன்

சிவகாமி அம்மன் தலையில் கரண்ட மகுடத்துடன் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். காதில் குண்டலங்கள், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம் ஆகிய அணிகலன்களுடன் உள்ளார். தோளில் மாலை அணிந்துள்ளார். இடுப்பு முதல் பாதம் வரை ஆடை அணிந்துள்ளார். இரண்டு கரங்களில் வலது கரத்தில் சக்தியும், இடது கரத்தில் டோல ஹஸ்தம் கொண்டுள்ளார்.

துர்கை அம்மன்

பத்து கரங்களுடன் ஆக்ரோஷ பாவத்துடன் துர்க்கை அம்மன் காணப்படுகிறார். எட்டு கரங்களிலும் அஸ்த முத்திரை கொண்டுள்ளார். வலது கையில் சூலத்துடன் காலடியில் இருக்கும் அசுரன் மகிஷனை வதைக்கும் காட்சியில் உள்ளார். காதில் விருத்த குண்டலங்கள், கண்டிகை, சரப்பளி, சடடி ஆகிய அணிகலன்கள் அணிந்துள்ளார். இடுப்பு முதல் பாதம் வரை மடிப்புகள் நிறைந்த ஆடை அணிந்துள்ளார். தலையின் மேல் சுடர்முடி வடிவம் உள்ளது.

மாணிக்கவாசகர்

வலது கையில் ருத்ராட்சையும் இடது கையில் சுவடியும் தாங்கி பத்ம பீடத்தில் நின்ற நிலையில் மாணிக்கவாசகர் உள்ளார். காதில் குண்டலம், கழுத்திலிருந்து தொப்புள் வரை தொங்கும் ருத்திராட்ச மாலை, இடுப்புக் கச்சம் அணிந்துள்ளார்.

சந்திரசேகரர்

பத்ம பீடத்தில் கிரீட மகுடம் தரித்து நின்ற நிலையில் சந்திரசேகர் உள்ளார். தீள்மாலை, கண்டிகை, இடுப்பில் அணிகலன்களுடன் ஆடை அணிந்துள்ளார். நான்கு கைகளில் மான், மழு, அபய முத்திரை, வரத முத்திரை தாங்கியுள்ளார்.

சந்திரசேகர அம்மன்

பத்ம பீடத்தில் கரண்ட மகுடம் தரித்து நின்ற நிலையில் சந்திரசேகர் உள்ளார். கழுத்தில் அணிகலன்கள், காலில் தண்டை, கைகளில் வாகு வளையல்கள் அணிந்துள்ளார். இரண்டு கைகளில் வலது கரத்தில் மலரும், இடது கரத்தில் டோல ஹஸ்தம் கொண்டுள்ளார்.

விநாயகர்

கரண்ட மகுடம் தரித்து நின்ற நிலையில் விநாயகர் உள்ளார். துதிக்கை இடது பக்கம் உள்ளது. நான்கு கரங்களில் முன் இரு கரங்களில் மழுவும், பாசமும் பின் இரு கரங்களில் வலது கையில் சுசி முத்திரையும் இடதுகையில் பழமும் கொண்டுள்ளார். இடுப்பில் இருந்து பாதம் வரை ஆடை அணிகலன்கள் அணிந்துள்ளார்.

பிரதோஷ நாயகர்

மகுடம் தரித்து நின்ற நிலையில் உள்ளார். அபய வரத முத்திரைகளுடன் நான்கு கரங்கள் கொண்டுள்ளார். காதுகளிலும் கழுத்திலும் அணிகலன்கள் அணிந்துள்ளார். இடுப்பில் இருந்து கணுக்கால் வரை ஆடை அணிந்துள்ளார்.

பிரதோஷ நாயகர் அம்மன்

பிரதோஷ நாயகர் அம்மன் மகுடம் தரித்து நின்ற நிலையில் உள்ளார். இரண்டு கரங்களில் வலது கரத்தில் மலரும், இடது கரத்தில் டோல ஹஸ்தமும் கொண்டுள்ளார். காதில் குண்டலங்கள், கழுத்தில் கண்டிகை, அரும்புச்சரம், சரப்பள்ளி, கைகளில் வளையல்கள், தோள்பட்டையில் வாகு வளையல்கள் ஆகிய அணிகலன்கள் அணிந்துள்ளார்.

சண்டிகேஸ்வரர்

கண்டிகேஸ்வரர் நின்ற கோலத்தில் பத்ர குண்டலங்களுடன் ஜடா மகுடம் தரித்து வணங்கியபடி உள்ளார். இடது கரத்தில் மழு தாங்கியுள்ளார். கழுத்து மற்றும் கால்களில் வளையங்கள் அணிந்துள்ளார். இடுப்பில் இருந்து முழங்கால் வரை ஆடை அணிந்துள்ளார்.

கண்ணப்ப நாயனார்

மனித உருவில் குதிரை மீது கண்ணப்ப நாயனார் உள்ளார். கழுத்திலும் காதிலும் ஆபரணங்கள் அணிந்துள்ளார். வலது கையை வணாக்கம் செலுத்துவதுபோல் தூக்கியப்படி வைத்துள்ளார். இடது கை கொண்டு குதிரையின் கடிவாளத்தை இழுத்து பிடித்துள்ளார். இடுப்பில் இருந்து பாதம் வரை ஆடை அணிந்துள்ளார். குதிரையின் கழுத்தில் அணிகலன்கள் உள்ளன.

கல் சிற்பங்கள்
விநாயகர்

விநாயகர் பத்ம பீடத்தில் நின்ற நிலையில் உள்ளார். சிற்பம் சுமார் ஒன்றரை அடி உயர கீர்த்திமுக திருவாசியின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு கைகளில் பின் இருகைகளில் பர்சு மற்றும் பசமும் முன் கரங்களில் ஒடிந்த கொம்பும் மோதகமும் உள்ளன.

தேவியருடன் முருகன்

சுமார் இரண்டடி உயர முருகன் மயில் மேல் அமர்ந்தபடி உள்ளார். இடது பக்கம் தெய்வானை வலது பக்கம் வள்ளி ஆகியோர் நின்றபடி உள்ளனர். பன்னிரு கரங்களில் வலது கரங்களில் சக்தி, அம்பு, கத்தி, சக்கரம், அபய முத்திரை ஆகியவையும் இடது கரங்களில் வஜ்ரம், வில், கேடயம், சேவல், வரத முத்திரை ஆகியவையும் கொண்டுள்ளார். தேவியர் இருவரும் தொங்கும் கரம் மற்றும் தாமரை தாங்கிய கரம் கொண்டுள்ளனர்.

மரச்சிற்பங்கள்
தேர்கள்

சந்திரசூடேஸ்வரர் கோவிலில் இரண்டு சிறியதும் பெரியதுமாக இரண்உ தேர்கள் உள்ளன. பெரிய தேர் சந்திர சூடேஸ்வரரும் சிறிய தேரில் மரகதாம்பாளும் தேர் திருவிழா நாளில் வலம் வருவர். தேரிகளில் பல மரச்சிற்பங்கள் உள்ளன. பத்ம வரிகளும், பூதவரிகளும், கடவுள் உருவங்களும் கொண்டுள்ளன.

வழிபாடு

தினசரி வழிபாடுகள்

சந்திரசூடேஸ்வரர் கோவில் வழிபாடுகள் காலை 6 மணிக்கு தொடங்குகிறது.

தினசரி வழிபாடுகள்
பொழுது நேரம் பூஜை
காலை 8 கால சந்தியாகம்
மதியம் 11 உச்சிகால பூஜை
மாலை 6 சாயரட்சை
தீப உபச்சாரங்கள்

சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மன் இருவருக்கும் 16 வகை தீபாராதனைகள் நடைபெறுகின்றன.

தீப உபச்சாரங்கள்
எண் உபச்சார வகை
1 - 5 பஞ்ச தீபங்கள்
6 ரத ஆரத்தி
7 நட்சத்திர ஆரத்தி
8 மயூர தீபம்
9 நாக தீபம்
10 சிம்மவாகன தீபம்
11 நந்தி தீபம்
12 புருஷ தீபம்
13 சாமர தீபம்
14 சத்கர தீபம்(கொடை)
15 அருந்த தீபம்
16 வஸ்தீர ஆரத்தி
நவசண்டி யாகம்

மரகதாம்பிகை அம்மனுக்கு வருடம் தோறும் ஆடி மாதம் அனைத்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் நவசண்டி யாகம் நடைபெறுகிறது. அம்மனுக்கு ஸ்ரீ சக்கர பிரதிஷ்ட்டை உண்டு.

நம்பிக்கைகள்

சந்த்திரசூடேஸ்வரர் கோவிலில் ஒரு மண்டலம்(48 நாட்கள்) ருத்திராபிஷேகம் தொடர்ந்து செய்தால் நினைத்த காரியங்கள் நடைபெறும் என்னும் நம்பிக்கை உள்ளது.

நேர்த்திகடன்கள்

சந்திரசூடேஸ்வரர் கோவிலில் நேர்த்திகடனாக நல்லண்ணெய், திரவியப் பொடி, பால், தயில், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் பக்தர்கள் மொட்டை அடித்தல், அங்கபிரதட்சணம் ஆகிய நேர்த்தி கடன்களும் செய்கிறார்கள். மகன்யாச ருத்ராபிஷேகம், ருத்திர ஹோமம் ஆகியவை விசேஷமாக இங்கு செய்யப்படுகின்றன.

சிறப்புகள்

அஷ்டதிக் பாலகர்கள்

சந்திரசூடேஸ்வரர் கோவிலில் அஷ்டதிக் பாலகர்களுக்கு தனித்தனி உருவங்களும், வாகனங்களும் உள்ளன.

வாகனங்கள்
பாலகர் உருவம் வாகனம்
இந்திரன் யானை
ஈசாணன் எருது
வாயு மான்
வருணன் முதலை
குபேரன் குதிரை
நிருதி மனிதன்
அக்னி ஆடு
எமன் எருமை

ஜலகண்டேஸ்வரர்

சந்திரசூடேஸ்வரர் கோவில் ஜலகண்டேஸ்வரருக்கு வரட்சிக் காலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஜலகண்டேஸ்வரர் சிற்பம் 2 அடி நீள அகலம் கொண்ட தொட்டியில் உள்ளது. சாதாரணமாக 10 குடம் நீரில் நிரம்பும் தொட்டி வரட்சி காலத்தில் 150 குடங்கள் நீர் கொண்டு நிறைத்தால் மட்டுமே நிரம்பும் என சொல்லப்படுகிறது. நிறைத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் வற்றிவிடும். வரட்சிக் காலத்தில் தொட்டி நிறைந்திருக்கும் படி 16 நாட்கள் வைத்திருந்தால் மழை வரும் என்னும் நம்பிக்கை உள்ளது.

திருவிழாக்கள்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் 13 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை தீப நாள், மகா சங்கராந்தி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

நிகழ்வுகள்
திருவிழா நிகழ்வுகள்
நாள் பொழுது நேரம் நிகழ்ச்சி நடத்துபவர்
1 காலை 11 கொடியேற்றம் பொது
இரவு 9 சிம்ம வாகன உற்சவம் வேளாள கவுண்டர் குலத்தினர்
2 காலை 7 ஏகாதச ருத்ராபிஷேகம் வீரசைவ குலத்தினர்
இரவு 9 மயில் வாகன உற்சவம் பொது
3 இரவு 9 அகங்கார நந்தி உற்சவம் வீரசைவ குலத்தினர்
4 இரவு 9 நாக வாகன உற்சவம் வைஷ்ய குலம் - கொத்த செட்டி மரபினர்
5 இரவு 9 ரிஷப வாகன உற்சவம் பொது
6 காலை 11 ருத்ராபிஷேகம், புஷ்ப அலங்காரம் பொது
இரவு 7 புஷ்ப சாற்றுப்படி உற்சவம் வன்னுகிரி செட்டி குலத்தினர்
இரவு 8 திருக்கல்யாண உற்சவம் அயோத்தியா நகரம் குலத்தினர்
இரவு 9 யானை வாகன உற்சவம் பொது
7 காலை 10 தேரோட்டம் பொது
பகல் 12 பிராமண சந்தர்ப்பணை, ஆர்ய-வைஷ்ய சந்தர்பணை பொது
இரவு 7 பிராமண சந்தர்ப்பணை, ஆர்ய-வைஷ்ய சந்தர்பணை பொது
9 மாலை 5 வசந்தோற்பவம் பொது
இரவு 7 தெப்ப உற்சவம் பொது
இரவு 10 குதிரை வாகன உற்சவம் பொது
இரவு 10.30 கொடியிறக்கம் பொது
10 மாலை 6 ஊர் உற்சவம் தமிழ்நாடு மின்சார வாரியம்
11 மாலை 6 புஷ்பசாற்றுப்படி பொது
12 இரவு 7 பிரகார உற்சவம் பொது
13 இரவு 7 திருவிழா கடைநாள், சயனோற்சவம் பொது
வீதிஉலா வாகனங்கள்
திருவீதி உலா வாகனங்கள்
உற்சவ மூர்த்தி வாகனம்
சோமாஸ்கந்தர் இராவண வாகனம்
அம்பாள் முத்துப் பல்லக்கு
விநாயகர் முத்துப் பல்லக்கு
சுப்பிரமணியர் முத்துப் பல்லக்கு
சந்திரசேகர் புஷ்பப் பல்லக்கு

வரலாறு

சந்திரசூடேவரர் கோவில் கல்வெட்டுகளில் முடிகொண்ட சோழமண்டலத்து இராசேந்திர சோழவளநாடு, முரசுநாடு, சேவிடைப்பாடி என்னும் பெயர்கள் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டுகள் 13-ஆம் நூற்றாண்டை சார்ந்தது. முரசு நாடு என்னும் பெயர் வீரவிஸ்வநாதன், வீரவல்லாள, மேலை கங்கன் மாரசிம்மன் ஆகியோரின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

முடிகொண்ட சோழமண்டலம், வளநாடு என்னும் பெயர்கள் ராஜராஜனுக்கு பிறகு ஏற்பட்ட பெயர்கள். கல்வெட்டு குறிப்புகள் கொண்டு தடூர் நாட்டுப்பகுதி முடிக்கொண்ட சோழமண்டலமாகவும் அதனுள் அமைந்த இராசேந்திர சோழவளநாட்டில் முரசு நாடு(இன்றைய ஓசூர் பகுதி) இருந்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். கோவில் இருக்கும் பகுதி சேவிடப்பாடி என்று அழைக்கப்பட்டுள்ளது. பாடி என்பது ’படைகள் தங்கும் இடம்’ என்றும் ’காளை’ என்றும் பொருள் கொள்ளப்படுகின்றன. காளைகள் அல்லது ஆநிரைகள் தங்குமிடம் என கணிக்கப்படுகிறது.

இறைவன் பெயர் 8 கல்வெட்டுகளில் செவிடநாயனார், சேவுடைநாயனார், உடையார் சேவுடைநாயனார் என்னும் பெயர்களில் அறியப்படுகிறது.

கல்வெட்டுகள்

சந்திரசூடேஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் அர்த்தமண்டபம், மகா மண்டபம், சுவர்கள், உத்திரம், மரகதாம்பாள் கோவில் அதிட்டானம், சுவர், தூண், சுப்பிரமணியர் கோவில் சுவர், தெய்வம் இல்லாத கருவறைச்சுவர், தட்சிணாமூர்த்தி மண்டபச்சுவர், சாமான்கள் அறை உட்சுவர், நந்தி மண்டப தூண்கள், கொடிக்கம்பம், கோபுரச்சுவர்கள், இடைக்காலகள், பிரகாரச்சுவர், பசவ மண்டபத்தின் அருகில் உள்ள பாறை, பாதைப் படிகள், படிக்கட்டுகள் அருகில் உள்ள பாறை, செம்ப்பாறை, காளியம்மன் கோவில் அர்த்த மண்டபம், கருவறை ஆகிய இடங்களில் உள்ளன.

கல்வெட்டு மொழி
கல்வெட்டுகளின் மொழிகள்
மொழி எண்ணம்
கன்னடம் 6
தெலுங்கு 1
கிரந்தம் 1
சமஸ்கிருதம் 1
கல்வெட்டுகள் காலம்
கல்வெட்டுகளின் காலம்
காலம் எண்ணிக்கை மன்னர்கள்
ஹொய்சாளர் 13 வீரவிஸ்வநாதன், வீரராமநாதன், வீரவல்லாளர்
சோழர் 4 ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன்
விஜயநகரர் 3 அச்சுதேவராயர், இரண்டாம் ஹரிகரர், கிருஷ்ணதேவராயர்
மேற்கு கங்கர் 1 இரண்டாம் மாரசிம்மா
ஊர் பெயர்கள்
கல்வெட்டுகளில் ஊர்கள்
எண் ஊர்பெயர்(கல்வெட்டு) ஊர்(இன்று) குறிப்புகள்
1 முடிகொண்ட சோழமண்டலம் தகடூர் முடிகொண்ட சோழமண்டலம் ராஜராஜனுக்கு பின் ஏற்பட்டது
2 ராஜேந்திர சோழ வளநாடு ஓசூர் பகுதி வளநாட்டுப் பிரிவுகள் ராஜராஜ சோழனுக்கு பின் உருவானவை
3 முரசு நாடு ஓசூர் பகுதி முரசு நாடு: வீரவிஸ்வநாதன், வீரவல்லாளன், மேலை கங்கன் மாரசிம்மன் ஆகியோரின் கல்வட்டுகளில் உள்ளது
4 முரசை நாடு ஓசூர் பகுதி வீரவிஸ்வநாதன் கல்வெட்டுகளில் உள்ள பெயர்
5 சேவிடைப்பாடி ஓசூர் இறைவன் சேவுடை நாயனார் என்று அழைக்கப்படுகிறார்

பெயர்காரணம்: ஆநிரைகள் தங்கும் இடம்

5 குப்பதேவனப்பள்ளி - இரண்டு கல்வெட்டுகளில் உள்ளது
6 திருமயிலாப்பூர், தொண்டை மண்டலம் மயிலாப்பூர், சென்னை வீரவிஸ்வநாதன் காலத்தய இரண்டு கல்வெட்டுகளில் உள்ளது
7 நிகரிலி சோழமண்டலத்து மாசந்தி நாடு - வீரவிஸ்வநாதனின் கல்வெட்டில் உள்ளது
8 புலமண்டல நாடு கர்நாடகப் பகுதி இராஜேந்திர சோழனின் கன்னட கல்வெட்டில் உள்ளது
9 சாளேவூர் கர்நாடகப் பகுதி புலமண்டல நாடு குறிப்பிடப்பட்டுள்ள அதே கல்வெட்டில் உள்ளது

புலமண்டல நாட்டின் ஒரு பகுதி என கணிக்கப்படுகிறது

10 எருமறை - வீரவல்லாளனின் ஒரு கல்வெட்டில் மாசந்தி நாடு, முரசு நாடு, எருமறை நாடு என்னும் மூன்றும் பெயர்களும் வருகின்றன
11 சிவநந்த மங்கலம் - நிபந்த கல்வெட்டு
12 உமாபாகை - திருமஞ்சனம் செய்வதற்காக 120 பொன் கொடுத்த நிபந்த கல்வெட்டில் உள்ளது
13 கொத்தகாமிண்டபள்ளி - நாயனார், பிராட்டியார் பூஜைக்காக கொத்தகாமிண்டபள்ளி என்னும் கிராமம் ஊர்கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது
14 கழனியூர் - இரண்டு நிபந்த கல்வெட்டுகளில் உள்ளது
15 குந்தாணி - தேவதானக் கல்வெட்டு ஒன்றில் உள்ளது
16 எருமைபற்று - எருமைபற்று என்னும் கிராமம் தானமாக வழங்கப்பட்டுள்ளது
17 சோக்குடப்பாடி - இரண்டு கல்வெட்டுகளில் உள்ளது
18 பாகலூர் பாகலூர், ஓசூர் தெலுங்கு நிபந்தக் கல்வெட்டு ஒன்றில் உள்ளது
19 ஆஞ்சாலம் சிங்கனேரி - மூன்றாம் வீரவல்லாளன் கால கல்வெட்டில் உள்ளது
20 நிகரிலி சோழமண்டலம் - வீர ராமநாதன் காலக் கல்வெட்டில் உள்ளது
21 மாசந்தி - நிகரிலி சோழமண்டலத்தின் ஒரு பகுதி

நிலக்கொடை கல்வெட்டு

இறைவன் பெயர்கள்

சந்திரசூடர் கோவில் கல்வெட்டுகளில் மூலவர் பெயர்கள் பலவாறாக உள்ளன.

  1. செவிடநாயனார்
  2. சேவுடைநாயனார்
  3. உடையார் சேவ்வுடை நாயனார்
  4. சூடநாதர்
  5. சோக்குட நாயனார்
  6. சேவிடநாயனார் நம்பிராட்டியார்
பிற கடவுள்கள்
  1. குன்றம் எரிந்த பிள்ளையார்
  2. அக்காளீஸ்வரம் உடையார்
  3. காமதீஸ்வரர் சாமி
  4. மகா கணபதி
  5. பிள்ளையார்
மனித பெயர்கள்
  1. திருவேகம்பமுடையான்
  2. சிவபாத சேகர பெருமாள்
  3. முடையன்
  4. ஆரியப்ப சீயர்
  5. செம்ம சீயர்
  6. காமிண்டர் மகன் மகாதேவா
  7. கூனிபட்டன்
  8. வாரங்க மலையப்பன்
  9. குற்றாந்தை
  10. சித்தயப்பன்
  11. திருவேற்பிள்ளை
  12. காமுண்டன்
  13. தியாக வினோத பட்டன்
  14. காளிகுடையான்
  15. குப்பய்யா
  16. தாமையா
  17. தாளநாயக அழகப்ப
  18. வேனர பெருமாள்
  19. அரக்குடையான்
  20. திருவேகம்பமுடையான்
  21. ராஜசேகரய்யா
  22. சீவல பிள்ளை
சமுதாயப் பெயர்கள்
  1. பெரிய நாட்டவர்
  2. நாட்டுநாயகம் செய்பவர்
  3. மகாஜனங்கள்(பிராமணர்கள்)
  4. முதலியார்
  5. கொடங்க கெளடா
  6. சீதாநாட்டார்
  7. ஜியர்
  8. வீரசோழவனுக்கர்
  9. பூர்வாதிராயன்
  10. சிவபிராமணர்
  11. பிராமணர்
  12. கழனியூர் செட்டி தேவர்
  13. கோவில் முதலிகள்
  14. 400 ஆவுடையார்(பிராமணர்கள்)
  15. மகேஸ்வரர்
  16. முதலியார் ஏட்டி
  17. தேவ பண்டாரம்
  18. வெள்ளாளர்
  19. கவுண்டர்
  20. கோடங்கி(கவுண்டர்களின் பிரிவு)
  21. சலவேறு(கவுண்டர்களின் பிரிவு)
சிற்றரசர் பெயர்கள்
  1. தர்மத்தாழ்வார்
  2. பூர்வாதிராஜர்
  3. அத்தியாழ்வார்
  4. தர்மத்தாண்டை பூர்வாதி ராஜர்
  5. தர்மத்தாழ்வார்
  6. விக்கிரமசோழ கெளடா
  7. குற்றாந்தை மகன் தர்மத்தாண்டை
  8. பிரதாணி
  9. பூர்வாதிராயன்
  10. தபோதிராஜா
  11. பராந்தக சிவன்
  12. கற்கட மகாராஜன்
  13. வேட்டையிர் சொக்கர்
  14. புக்கண்ண உடையார்
  15. அழகிய பெருமாள்
  16. அத்திமல்லன்
  17. கருவண்ட ராசன்
  18. திருபுவனமல்ல பூர்வாதிராசன்
கொடைகள்
கல்வெட்டுகளில் கொடைகள்
கொடை கொடையாளர் குறிப்பு காலம்
120 பொன் விவசாய மக்கள், நாட்டு நாயகம் செய்பவர்கள், மகாஜனங்கள் திருமஞ்சன நீர் கொண்டு வருபவர்களுக்கு 10 பேருக்கு மாதம் ஒன்று வீதம் வழங்கப்பட்டுள்ளது வீரவிஸ்வநாதன்
நிலம் திருவேகம்பமுடையான் அமுதுபடிக்காக வழங்கப்பட்டுள்ளது வீரவிஸ்வநாதன்
வரிவசூல் தர்மத்தாழ்வார், பூர்வாதிராஜர், அத்தியாழ்வார் துவாரபாலகர்களுக்கு அளிக்கப்பட்ட கொடை வீரவிஸ்வநாதன்
120 பொன் சீவல பிள்ளை சீவல பிள்ளை மயிலாப்பூரை சேர்ந்த வணிகர் வீரவிஸ்வநாதன்
ஊர் - கொடையளிக்கப்பட்ட கிராமம்: கொத்தகாமிண்டபள்ளி வீரவிஸ்வநாதன்
விளக்கு தர்மத்தாழ்வார் 50 பகல் விளக்கு, 14 இரவு விளக்கு -
நந்தவனம் சோமநாத தேவர் நந்தவனத்திற்காக அளிக்கப்பட்ட நிலதானம் வீரவிஸ்வநாதன்
நிலம் திருவேகம்பம் உடையான் மாச்சந்தி என்னும் ஊரிலுள்ள நிலம் தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது வீரராமநாதன்
ஊர் தர்மத்தாழ்வார் இறைவனது நம்பிராட்டியார் சிற்பம் நிறுவி வழிபாடு செய்ய கொத்த காமிண்டன்பள்ளி என்னும் கிராமம் கொடையளிக்கப்பட்டுள்ளது வீரவிஸ்வநாதன்
தூண் மகாதேவர் காமிண்டர் என்பவரின் மகன் மகாதேவர் நிறுவியது வீரராமநாதன்
படிகள் பூசணிப்பட்டன் கல்வெட்டு செய்தி வீரராமநாதன்
நிலம் தர்மத்தண்டையின் மகன் பிள்ளையார் பூஜைக்கு கொடுக்கப்பட்ட நிலம் வீரராமநாதன்
குளம் விக்கிரம சோழர் கவுண்டர் மனைவி பெயரால் வெட்டப்பட்ட குளம் முதலாம் ராஜேந்திரன்
ஊர்கள் வீரசோழவணுக்கர் சில கிராமங்களை தேவதானமாக கொடுத்துள்ளார் வீரவிஸ்வநாதன்
நிலம் திருவேற்பிள்ளை திருவேற்பிள்ளை திருமயிலாப்பூரைச் சேர்ந்த வணிகர் வீரவிஸ்வநாதன்
நிலம் தியாக வினோத பட்டன் நஞ்சை நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது வீரவிஸ்வநாதன்
ஊர் கர்நாடக மகாராசன், வேட்டையூர் சொற்கர் எருமைபற்று என்னும் கிராமம் தானமாக வழங்கப்பட்டுள்ளது வீரராமநாதன்
தூண் செட்டிதேவன் மகன் நந்தியின் வலது பக்கத்தூண் வீரராமநாதன்
தூண் காளிகுடையுடையான் பிள்ளைமாடன் தூண் அமைத்து கொடுத்துள்ளார் வீரராமநாதன்
வருமானம் தனநாயக அச்சளப்பா தனது பாதி வருமானத்தை தானமாக அளித்துள்ளார்,

கன்னட கல்வெட்டு

மூன்றாம் வீரவல்லாளன்
கோவில் வருமானம்

விஜயநகர அரசன் இரண்டாம் ஹரிகரன் காலத்தைய 12-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கோவில் வருமானத்திற்காக பெறப்பட்ட வரிகள் பற்று பேசுகிறது. சாரிகை, சுங்கம் என்னும் இரண்டு வரிகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய கிராமத்திற்கு ஒரு பொன் சிறிய கிராமத்திற்கு 5 பணம் என வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

சோழர் கால முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டு படிகளில் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டில் கருவூலத்தில் பணத்தை செலுத்தி அதில் கிடைக்கும் வருமானத்தில் வருடம் 90 நாழி எண்ணை இறைவனுக்கு வழங்க ஏற்பாடு செய்தி உள்ளது.

ஹொய்சாள அரசன் மூன்றாம் வீரவல்லாளனின் கல்வெட்டில் வேளாளர்களிடமிருந்து மனைப்பணம், புதுக்காணிக்கை ஆகிய வரிகளை வசூலிக்க வேண்டி எடுக்கப்பட்ட தீர்மானம் உள்ளது.

உசாத்துணை

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.