ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
To read the article in English: Oru Manithan Oru Veedu Oru Ulagam (novel).
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (1973) ஜெயகாந்தன் எழுதிய நாவல். ஹிப்பி இயக்கம் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பின்னணியில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், எந்த இலக்குகளும் இல்லாமல் தன் மனதின் குரலின்படி வாழும் இலட்சிய இளைஞன் ஒருவனை சித்தரிக்கிறது. இந்தியமரபின் துறவுப் பண்பும் ஹிப்பி இயக்கத்தினரின் சுதந்திரமும் கொண்ட ஹென்றி என்னும் கதாபாத்திரம் புகழ்பெற்ற ஒன்று.
எழுத்து, பிரசுரம்
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 1972-ல் ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளிவந்த நாவல். மீனாட்சி புத்தக நிலையத்தாரால் 1973-ல் நூலாக வெளியிடப்பட்டது. இந்நாவல் ஜெயகாந்தன் எழுத எண்ணிய ஒரு பெரிய நாவலின் முதல் பகுதி. இக்கதையை ஏதோ காரணத்தால் ஜெயகாந்தன் நடுவே நிறுத்திக்கொண்டு பின்னாளில் இரண்டாம் பகுதியையும் விகடனிலேயே எழுதுவதாக அறிவித்தார். நடுவே நிறுத்த அனுமதித்த விகடனுக்கு நன்றியும் கூறினார். ஆனால் அவர் தொடர்ந்து எழுதவில்லை. முதல்பகுதியையே முழுமையான நாவலாகக் கொள்ளும்படி சொன்னார்.
கதைச்சுருக்கம்
ஹென்றி என்னும் இளைஞனின் கதை இது. அவன் தன் தந்தையின் ஊரான கிருஷ்ணராஜபுரத்துக்கு வந்து அவருடைய பழைய வீட்டை புதுப்பித்துக் கட்டி குடியேறுவது வரையிலான நிகழ்வுகள்தான் கதை. பெங்களூரில் இருந்து வரும் ஹென்றி என்னும் ஆங்கில இந்திய இளைஞன் துரைக்கண்ணுவின் லாரியில் வந்து கிருஷ்ணராஜபுரத்தில் இறங்கிக் கொள்கிறான். உடன்வரும் தேவராஜன் ஹென்றியை தன் வீட்டில் தங்க வைத்துக்கொள்கிறான். எதிர்வீடு பூட்டியிருக்கிறது. இடிந்துகொண்டிருக்கும் அந்த வீடுதான் ஹென்றியின் அப்பாவுடையது. தன் மனைவிக்கு நாவிதனுடன் தொடர்பு இருந்ததை அறிந்து அவர் ஊரைவிட்டுச் சென்றார். அந்த நாவிதன் அவ்வீட்டின்முன் தூக்கிட்டு இறந்தான்.
ஹென்றி தன் தந்தை யார் என்று சொல்கிறான். அவன் சொத்தை கேட்டு வரவில்லை, தந்தையின் ஊருக்காகவே வந்திருக்கிறான். ஆனால் அவன் சித்தப்பாவான துரைக்கண்ணு ஹென்றிக்கே அந்தச் சொத்து என்பதில் உறுதியாக இருக்கிறான். ஹென்றி அதை ஏற்கிறான். ஹென்றி தன் வீட்டை புதுப்பிக்கிறான். ஹென்றியின் வீட்டு வேலை முடிந்ததும் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க ஆலோசிக்கிறார்கள் தேவராஜனும் துரைக்கண்ணுவும். பேபி என்னும் நிர்வாணப் பைத்தியப் பெண் அங்கே வந்து அந்த வீட்டு வேலைகளில் உதவி செய்கிறாள். அவன் அளித்த ஆடையை அவள் அணிகிறாள். ஆனால் அவளை அங்கேயே இருக்கச் செய்ய ஹென்றி நினைக்கிறான். அவள் மறைந்து விடுகிறாள். அந்த வீடு அவளுக்காக காத்திருக்கிறது.
கதைமாந்தர்
- ஹென்றி - ஆங்கில இந்திய இளைஞன்
- பேபி - பைத்தியக்காரப்பெண்
- டிரைவர் துரைக்கண்ணு - ஹென்றியின் சித்தப்பா
- தேவராஜன் – கிருஷ்ணராஜபுரத்து ஆசிரியர்
- கனகவல்லி – தேவராஜனின் மனைவி
- மணியக்கார ராமசாமி கவுண்டர் – முன்சீப்
- நாகம்மாள் – முன்சீப்பின் மனைவி
- பழனி – பைத்தியம் பிடித்த நாவிதன்
- கனகசபை முதலியார் – ஊர் தர்மகர்த்தா
- நடராஜன் – போஸ்ட் ஆபிஸ் அய்யர்
- தேசிகர் – டீக்கடை வைத்திருப்பவர்
- பக்கிரி – சைக்கிள் கடை வைத்திருப்பவர்
- சபாபதி – ஹென்றியின் அப்பா
- நவநீதம் – துரைக்கண்ணுவின் மனைவி
- பஞ்சவர்ணத்தம்மாள் – துரைக்கண்ணுவின் மாமியார்
- கன்னியப்ப நாயக்கர் – வீடு கட்டுகிற மேஸ்திரி
இலக்கிய இடம்
அரைநூற்றாண்டுக்கும் மேலாக தமிழிலக்கியம் உருவாக்கிய மிகச்சிறந்த இலட்சியக் கதாபாத்திரம் என்று ஹென்றி கருதப்படுகிறான். ஹென்றி என்றே அத்தகைய நாடோடிக் கதாபாத்திரங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஹென்றி ஓர் ஊரில் தங்கினாலும் எந்த இடத்துக்கும் சொந்தமானவன் அல்ல. நல்ல உணர்ச்சிகள் மட்டுமே கொண்டவன். முறையான கல்வி கல்லாதவன். மானுடர்மேல் பிரியம் கொண்டவன். கிருஷ்ணராஜபுரத்தின் அத்தனை மனிதர்களுமே நல்லவர்களாகவும், ஒருவருக்கொருவர் ஒத்துப் போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஒர் இலட்சியக் கிராமம் அது. அங்கே வந்து தங்கும் ஹென்றி பேபி என்னும் பைத்தியக்காரப் பெண்ணிடம் ஈர்ப்படைகிறான். அவள் அவனை விட்டுச்செல்வது என்பது அவன் இருக்கும் நிலையைவிட மேம்பட்ட ஒரு நிலையில், அவன் ஏற்றுக்கொண்ட சிறிய கட்டுப்பாட்டைக்கூட ஏற்காத நிலையில், இயற்கையான உயிர்களைப்போல, அவள் இருப்பதை காட்டுகிறது. ஊரின் உலகியல் இலட்சியவாதம், அதைவிட மேலான ஹென்றியின் நாடோடி இலட்சியவாதம், அதைவிடவும் மேலான பேபியின் அவதூத நிலை என உயர் இலட்சியங்களை மோதவிட்டே எழுதப்பட்ட இந்நாவல் தமிழிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று.
மொழியாக்கம்
- A Man, A Home and A World (2003) Tr -.K.S.Subramanyan.
உசாத்துணை
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
- ஜெயகாந்தனின் " ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் " நாவல் ஒரு பார்வை!
- ரெங்கசுப்ரமணி: ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
- அய்யனார் விஸ்வநாத்: ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
- ஒரு நாவல் நாற்பதாண்டுகள் - ஜெயமோகன்
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- மதிப்புரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:03 IST