standardised

ஏ.பி.வள்ளிநாயகம்

From Tamil Wiki
Revision as of 18:16, 12 April 2022 by Tamaraikannan (talk | contribs)
ஏ.பி.வள்ளிநாயகம்

ஏ.பி.வள்ளிநாயகம் (ஆகஸ்ட் 19, 1953 - மே 19, 2007) தலித் வரலாற்றாய்வாளர். திராவிட இயக்க எழுத்தாளர். இதழாளர். அரசியல் செயல்பாட்டாளர்

பிறப்பு கல்வி

ஏ.பி.வள்ளிநாயகம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரியில் ஆறுமுகம் – புஷ்பம்மாள் இணையருக்கு ஆகஸ்ட் 19, 1953-ல்பிறந்தார். வள்ளிநாயகத்தின் தந்தை ஆறுமுகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வித் துறையில் பணியாற்றியமையால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தொடக்க, இடைநிலை கல்வியையும் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் கல்லூரிக் கல்வியையும் பெற்றார்.

தனிவாழ்க்கை

வள்ளிநாயகம் திராவிடர் கழகத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்தபொழுது அவ்வியக்கத்தைச் சார்ந்தவரான ஓவியாவை மணந்தார். அவர்கள் ஜீவசகாப்தன்

அரசியல் வாழ்க்கை

வள்ளிநாயகம் பள்ளி மாணவராக 1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் .1970-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தலைமையை ஏற்று திராவிடர் கழகத்தில் இணைந்தார். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பயின்றபொழுது அக்கல்லூரியின் திராவிடர் மாணவர் கழகத் தலைவராகவும் தஞ்சை மாவட்ட திராவிடர் மாணவர் – இளைஞர் அணிச் செயலாளராகவும் தஞ்சை மண்டல திராவிடர் மாணவர் – இளைஞர் அணிச் செயலாளராகவும் பணியாற்றினார். .

1980-ஆம் ஆண்டுகளில் ஈழப்போராட்ட ஆதரவுப் பணியில் ஈடுபட்டார்.தமிழீழப் போராட்ட அமைப்புகளில் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (Elem People Revolutionary Liberation Front - EPRLF) ஆதரித்தார். அதன் தலைவரான பத்மநாபாவின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். கருத்துவேறுபாட்டால் திராவிடர் கழகத்திலிருந்து விலகி கோவை இராமகிருட்டிணனைப் பொதுச் செயலாளராகக் கொண்டு இயங்கிய திராவிடர் கழகம் (இரா) என்னும் அமைப்பில் இணைந்தார். அவ்வமைப்பின் துணை அமைப்பான திராவிடர் கழகத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளராகச் சிலகாலம் பணியாற்றினார். மார்க்சிய லெனினிய மாவோயிசக் கோட்பாட்டின் அடைப்படையில் தமிழக மக்கள் முன்னணி என்னும் வெகுமக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. அவ்வமைப்பை உருவாக்குவதற்கான களப்பணியை சிலகாலம் மேற்கொண்டிருந்தார்.

வள்ளிநாயகம் 1990-ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரான திருச்செந்தூருக்குத் திரும்பினார். அங்கே சமூக நீதிமன்றம் என்னும் அமைப்பை உருவாக்கி இளைஞர்களுக்கு அரசியல் வகுப்புகள் நடத்தினார். 1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய தத்துவ அணிக்கு மாநிலத் தலைவராக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். அப்பொழுது தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை நடத்திய பொறுப்பாளர்களில் ஒருவராகப் பணியாற்றினார். 1992-ஆம் ஆண்டில் அயோத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுது கொடிக்கால் ஷேக் அப்துல்லா, எஸ். நடராஜன் ஆகியோருடன் இணைந்து சகோதரத்துவ இயக்கம் (Brotherhood Movement) என்னும் அமைப்பை உருவாக்கினார்.

வள்ளிநாயகம் 2000-ஆம் ஆண்டில் எஸ். நடராசனுடன் இணைந்து தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பேரவை என்னும் அமைப்பை உருவாக்கி, அதன் பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். ‘நாங்கள் இந்துகள்’ அல்ல என்னும் ஊர்திப் பயணத்தைச் சென்னை முதல் குமரி வரை ஒருங்கிணைத்து நடத்தினார்.

ஆய்வுப்பணிகள்

வள்ளிநாயகம் மதுரை தலித் ஆதார மையம் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ஏற்போடு நடத்தும் அம்பேத்கர் கல்வி மையத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். 2006-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை என்னும் அமைப்பை உருவாக்குவதற்கான அடிப்படைப் பணிகளை முன்னின்று செய்தார்.

இதழியல்

1980-ஆம் ஆண்டுகளில் சங்கமி என்னும் இதழிற்கும் 1990-ஆம் ஆண்டுகளில் அலைகள் என்னும் திங்கள் இதழிற்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். .

மறைவு

வள்ளிநாயகம் மே 19, 2007-ல் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

நினைவுகள்

டாக்டர் அம்பேத்கர் மய்யம் சார்பில் நடைபெறும் தலித் முரசு நூலகத்திற்கு மநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் நினைவு நூலகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விருதுகள்

  • 2005 மதுரை தலித் ஆதார மையம்-விடுதலை வேர் விருது
  • 2007 தலித் முரசு – பாலம் கலை இலக்கிய விருது (மரணத்துக்குப்பின்)

நூல்கள்

வள்ளிநாயகம் 1993-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை பின்வரும் நூல்களை எழுதினார்:

வ. எண் ஆண்டு நூலின் பெயர் குறிப்பு
01 1993 தலைவர் அம்பேத்கர் சிந்தனைகள்
02 1994 போராளி அம்பேத்கர் குரல்
03 1994 பாட்டாளி மக்களும் தோழர் பெரியாரும்
04 1995 விளிம்பில் வசப்பட்ட மானுடம்
05 1996 புரட்சியாளர் அம்பேத்கர்
06 1996 பெரியார் பிறப்பித்த பெண்ணுரிமைப் பிரகடனங்கள்
07 1997 மானுடம் நிமிரும்போது
08 1999 பெரியார் பெண் மானுடம்
09 1999 பெரியார் பிறப்பித்த பெண்ணுரிமைப் பிரகடனங்கள்
10 1999 மானுடத்தில் அழகானவர்கள் தீண்டத்தகாதவர்கள்
11 2000 அடிமைகளின் தலைவர் அய்யங்காளி
12 2001 நாம் இந்துக்கள் அல்லர் – பவுத்தர்கள்
13 2001 குடிசையில்தான் மானுடம் வசிக்கிறது
14 உரிமைப் போராளி ரெட்டமலை சீனிவாசன்
15 அம்பேத்கர் அறைகூவல்
16 பவுத்த மார்க்கம் பற்றி விவேகானந்தர்
17 பவுத்தம் ஓர் அறிமுகம்
18 மானுடத்தில் கோலோச்சியவர்கள் பவுத்தர்கள்
19 நமது தலைவர்கள் – எல். சி. குருசாமி, எச். எம். ஜெகநாதன்
20 சமநீதிப் போராளி இம்மானுவேல் சேகரன்
21 அடிமைகளின் தலைவர் அய்யங்காளி விரிவாக்கப்பட்ட 2ஆம் பதிப்பு
22 பூலான் தேவிக்கு முன் ராம்காளி : முன்னி
23 தென்னாட்டு அம்பேத்கர் தளபதி எம். கிருஷ்ணசாமி
24 இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும் முதற்குடிகளும்
25 2005 மகாத்மா புலேவுக்கு முன் மகராசன் வேதமாணிக்கம்
26 தாத்ரி குட்டி

வள்ளிநாயகம் எழுதி, ஆனால் இதுவரை நூலாக வெளிவராத படைப்புகள்

வ. எண் படைப்பின் பெயர் குறிப்பு
01 விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும் 2001 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை

தலித் முரசு இதழில் எழுதப்பட்ட கட்டுரைத் தொடர். இதில் எல். சி. குருசாமி, உ. ஆ. பெருமாள் பீட்டர், ஆர். வீரையன், எச். எம். ஜெகந்நாதன், பாலசுந்தர்ராஜ், டி. ஜான் ரெத்தினம், பி. எம். மதுரைப் பிள்ளை, ம. பழனிச்சாமி, பி. வி. சுப்பிரமணியம் பிள்ளை, மகராசன் வேதமாணிக்கம், மீனாம்பாள், சத்தியவாணி முத்து, பள்ளிகொண்டா எம். கிருஷ்ணசாமி, வி. ஜி. வாசுதேவபிள்ளை, ஜோதி அம்மாள், எம். சி. ராஜா, அன்னபூரணி அம்மாள், ஜி. அப்பாதுரையார், இ. நா. அய்யாக்கண்ணு, புலவர் க. பூசாமி, எம். சி. மதுரைப் பிள்ளை, எம். ஒய். முருகேசம், குமாரன் ஆசான், பெரியார் ஆகியோரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள்.

02 மேலாடைப் புரட்சி
03 புத்த மார்க்கமும் மானுடத்தின் பொருத்தப்பாடும்
04 தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
05 மாவீரர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு
06 இட்லரிசமும் இந்துயிசமும்
07 செல்லப்பா முதல் சேக் அப்துல்லா வரை
08 அம்பேத்கரின் ஆசான் புத்தர்

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.