எஸ். வைதீஸ்வரன்

From Tamil Wiki
Revision as of 12:12, 2 July 2022 by Muth r (talk | contribs)
எஸ் வைதீஸ்வரன்
எஸ் வைதீஸ்வரன்

எஸ் வைதீஸ்வரன் (செப்டம்பர் 22, 1935) கவிஞர், திரை மற்றும் நாடக நடிகர், இசை கலைஞர், ஓவியர்.

பிறப்பு, கல்வி

எஸ் வைதீஸ்வரன் கோயம்புத்தூரில் செப்டம்பர் 22, 1935 இல் பிறந்தவர். சேலத்தில் கல்வி கற்றார். 1948 முதல் சென்னையில் வசித்துவருகிறார்.

தனிவாழ்க்கை

எஸ் வைதீஸ்வரன் அவர்கள் சென்னை ஏயர் இந்தியா நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி ஓய்வுபெற்றிருப்பவர். இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

தமிழ்த்திரையுலகிலும் நாடகத்துறையிலும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர்,  மூத்த கலைஞர் சகஸ்ரநாமம் அவர்களின் மருமகன்.

இலக்கியவாழ்க்கை

இலக்கியம்

எஸ் வைதீஸ்வரன் அவர்களின் முதல் கவிதை 'எழுத்து - அக்டோபர் - நவம்பர் 1961' இதழில் வெளிவந்திருக்கிறது. அதற்கு முன்னரே முத்தாரம் என்னும் சிறுகதை 1957 இல் வெளிவந்துள்ளது. இவரது கவிதைகளின் முன்னோடியாக ந. பிச்சமூர்த்தியை குறிப்பிடுகிறார்.

நடிப்பு

வைதீஸ்வரன் அவர்கள் சகஸ்ரநாமம் நடத்திய சேவாஸ்டேஜ் நாடகக்குழுவில் இணைந்திருந்தவர், பி. எஸ். ராமையாவின் தேரோட்டி மகன், தி. ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் , கோமல் சுவாமிநாதனின் புதிய பாதை முதலானவற்றிலும் நடித்திருக்கிறார்.

ஜானகிராமன் எழுதிய நாலுவேலி நிலம் கதை திரைப்படமானபோது அதிலும்  வேறும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஓவியம்

வைதீஸ்வரன் ஒரு ஒவியர். முறையாக ஒவியர் கற்றவர். இவரது நூல்களின் முகப்போவியங்களும் இவருடையதுதான். குஜராத் லலித் கலா அகாடமி மற்றும் மெட்ராஸ் ஆர்ட் கிளப்பில் அவர் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இசை

வைதீஸ்வரன் அவர்களது பாடல் வரிகளை அடிப்படையாகக் கொண்டு பிரஹத்வானி என்ற இசை ஆராய்ச்சி அறக்கட்டளை ஒரு கேசட்டைத் தயாரித்துள்ளது.

இலக்கிய இடம்

“படிமங்களில் இருந்து விலகி படிமத்தன்மை கொண்ட நிகழ்வுகளை நோக்கியும் அதன்பின் படிமமில்லாத கவிதைகளை நோக்கியும் உங்கள் பயணம் இருப்பதை அவதானித்திருக்கிறேன்” என்று எஸ் வைதீஸ்வரன் அவர்களின் கவிதைகளை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

வைதீஸ்வரனின் மொத்த கவிதைகளின் தொகுப்பான மனக்குருவி நூலை பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் “நகரவாழ்வின் நெருக்கடியை, தடித்தனத்தை, அவலத்தை, ஆறாத் துயரங்களை, அரிதான சந்தோஷங்களை சிறப்பாக  அவர் உருவாக்கும் படிமங்கள், உருவகங்கள் மூலம் கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று குறிப்பிடுகிறார்.

வைதீஸ்வரனின் நகரச்சுவர்கள் கவிதைத்தொகுப்பு நூல் அறிமுகத்தில் ஆர். ராஜகோபாலன் “இவருடைய கவிதை மொழி பெரும்பாலும் பேச்சு சந்தத்தையும் மெல்லிய ஓசை நயத்தையும் கொண்டது. இவர் கூர்மையான பார்வையும் ஒலியின் இழைவும் தெரிந்த ஒரு காட்சிக் கவிஞராக வெளிப்படுகிறார். இவரின் கவிதை மாந்தர்கள் நேரடியான இயல்பான வாழ்வுச்செயல்பாடுகளைக்கொண்டு பறவை போன்று மென்மையும் விலங்குகள் போன்று கடுமையும் உடையவர்கள்” என்று சொல்கிறார்.

நூல்பட்டியல்

கவிதைத்தொகுப்புகள்
  • உதயநிழல்
  • நகரச்சுவர்கள்
  • விரல் மீட்டிய மழை
  • வைதீஸ்வரன் கவிதைகள்
  • கால – மனிதன் அதற்கு மட்டும் ஒரு ஆகாயம்
  • மனக்குருவி
  • கால் மனிதன்
கதைத்தொகுப்புகள்
  • கால் முளைத்த மனம்
  • திசைகாட்டி
  • வைதீஸ்வரன் கதைகள்
ஆய்வு நூல்
  • தேவனின் எழுத்துலகம்

விருதுகள்

  • திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தேவமகள் விருது
  • சிற்பி அறக்கட்டளை விருது
  • அமெரிக்கத்தமிழர்கள் வழங்கும் ‘ புதுமைப்பித்தன் விளக்கு’ விருது

உசாத்துணை

கவிஞர் வைதீஸ்வரனின் ஆளுமைப்பண்புகள் - நோயல் நடேசன்

கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித்தூக்க முயன்றவரின் படைப்பாக்கத்தின் ஆச்சரியங்கள் - முருகபூபதி

VAIDHEESWARAN'S VOICES... vydheeswaran blogspot

வைதீஸ்வரனின் கவிதைகள் - எஸ். ராமகிருஷ்ணன்.காம்