second review completed

எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு

From Tamil Wiki
Revision as of 16:39, 8 February 2022 by Anandsudha (talk | contribs)
எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு

எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு (எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு) (1886 - 1935) இதழாளர், இலக்கிய வரலாற்றாளர். ஆநந்த குணபோதினி போன்ற இதழ்களை நடத்தியவர். சுப்ரமணிய பாரதியாரைப் பற்றிய முதல் வாழ்க்கைக்குறிப்பை எழுதியவர். பல எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பற்றி இவர் எழுதிய குறிப்புகள் முன்னோடியான பதிவுகளாக கருதப்படுகின்றன. அவை 'சென்றுபோன நாட்கள்' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன

பிறப்பு, கல்வி

எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு 1886-ஆம் ஆண்டு திருவரங்கத்தில் சங்கு கோவிந்தசாமி நாயுடுவுக்கும் கோவிந்தம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். உடன் பிறந்த தங்கை எதிராஜவல்லி. இவரது பாட்டனார் சங்கு இராமசாமி நாயுடு கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் தஞ்சை மாவட்டத்தின் தாசில்தாராகப் பணியாற்றியவர். தந்தை சங்கு கோவிந்தசாமி நாயுடு புகழ்பெற்ற வைணவ அறிஞர், வைணவப் பயணநூல்களை எழுதியவர். ராமானுஜலு நாயுடு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.ஏ. படித்தார்.

தனிவாழ்க்கை

எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு 19 வயதில் தந்தையை இழந்தார். ராமானுஜலு நாயுடுவுக்கு ஆறு குழந்தைகள். 49 வயதில் எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு இறந்தபோது வயதான தாய், மனைவி மற்றும் ஆறு பிள்ளைகள் நிர்க்கதியில் நின்றிருக்கிறார்கள்.[1].

இதழியல் வாழ்க்கை

ஆனந்தகுணபோதினி விளம்பரம்

எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு 1904-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரஜாநுகூலன் என்ற மாத இதழை தொடங்கினார். தமிழாய்வுகளையும் சமகால செய்திகளையும் வெளியிட்டது அவ்விதழ். பண்டிதர். ம. கோபால கிருஷ்ண ஐயர் பிரஜானுகூலனின் ஆசிரியரைக் காண திருவரங்கம் வந்தபோது பதினேழுவயது இளைஞர் இதழ் ஆசிரியராக இருப்பதைக் கண்டு வியந்து பதிவுசெய்திருக்கிறார். அப்போதே சுதேசமித்திரன் உள்ளிட்ட இதழ்களில் பாலபாஸ்கரன் என்ற புனைபெயரில் செய்திகளையும் கருத்துக்களையும் எழுதிவந்தார். சுப்ரமணிய பாரதியார் ஆசிரியராக இருந்த சக்கரவர்த்தினி இதழில் இப்பெயரில் பிப்ரவரி, 1906-ல் 'பால்ய விவாகமும் பெண்கல்வியும்' என்னும் கட்டுரையை எழுதினார்.

1907-ல் சேலம் தக்ஷிண தீபம் பத்திரிகை உதவி ஆசிரியர் டி.ஏ. ஜான் நாடார் அதிலிருந்து விலகி தனி இதழைத் தொடங்கியபோது ராமானுஜலு நாயுடு அவ்விதழில் நடைமுறை ஆசிரியராகவே செயல்பட்டார். திராவிடாபிமானி என்ற பெயரில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் தலையங்கமும் வியாழனன்று முக்கியச் செய்திகளையும் திருவரங்கத்திலிருந்து எழுதி அனுப்பினார். சென்னையிலிருந்து வெளியான வந்தேமாதரம் என்ற வாரம் மும்முறை வெளியாகும் பத்திரிகையிலும் இவர் தலையங்கம் இடம் பெற்றது.

1919 முதல் ராமானுஜலு நாயுடு சென்னைக்கு இதழியல் பணிக்காக அடிக்கடி சென்று வந்தார். அங்கே அ.மாதவையா, சுப்ரமணிய பாரதியார், ஜே.ஆர். ரங்கராஜு முதலிய பல இலக்கியவாதிகளுடன் நட்பு கொண்டார். 1919-ஆம் ஆண்டு சேலத்தில் தமிழ்நாடு பத்திரிகையை காங்கிரஸ் தலைவரான பி. வரதராஜலு நாயுடு தொடங்கி நடத்தி வந்தார். அவர் சேலத்தை விட்டு செல்ல நேர்ந்தபோது அவர் அழைப்பின்பேரில் எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு அவ்விதழை பொறுப்பேற்று நடத்தினார்.

ஆநந்த குணபோதினி

1926-ல் தி. ராஜகோபால் முதலியார் தொடங்கிய ஆநந்த குணபோதினி இதழில் ஆசிரியராக ராமானுஜலு நாயுடு பொறுப்பேற்றார். ஆனந்த போதினி இதழுக்கு போட்டியாக தொடங்கப்பட்ட இதழ் அது. ஆனந்த போதினி அன்று ஆரணி குப்புசாமி முதலியாரின் தொடர்கதைகளை வெளியிட்டு புகழ்பெற்றிருந்தது. ஆநந்த குணபோதினியின் அமைப்பும் பெயரும் தன் பத்திரிகைபோல் இருப்பதாக எண்ணிய அதன் உரிமையாளர் நாகவேடு முனுசாமி முதலியார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவே ஆநந்த குணபோதினி தன் வடிவையும் அமிர்த குணபோதினியாக பெயரையும் மாற்றிக்கொண்டது. 1934-ஆம் ஆண்டு அமிர்த குணபோதினி மதுரை இ.மா. கோபால கிருஷ்ண கோனுக்கு விற்கப்பட்டபோது அவருக்கும் எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடுவுக்கும் முரண்பாடு உருவாகியது. எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு இதழில் இருந்து விலகினார்.

பல இதழ்களில் எழுதியும், பல இதழ்களில் ஆசிரியராக இருந்தும்கூட எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு அவர் 17 வயதில் தொடங்கிய பிரஜானுகூலனை நிறுத்தவே இல்லை. பிப்ரவரி 21, 1932-ஆம் நாள் பிரஜானுகூலன் தனது வெள்ளிவிழாவைக் கொண்டாடியது. அன்று புகழ்பெற்றிருந்த எம்.ஏ. நெல்லையப்ப முதலியார், பரலி.சு. நெல்லையப்பப் பிள்ளை, எஸ்.எஸ். வாசன், ஜே.ஆர். ரங்கராஜூ, கல்கி.ரா. கிருஷ்ணமூர்த்தி, வை.மு. கோதைநாயகியம்மாள் ஆகியோர் அந்த விழாவில் கலந்துகொண்டனர்.

இதழியல் எழுத்துமுறை

ராமானுஜலு நாயுடு சலிக்காமல் எழுதிக்குவிப்பவர். ஆநந்த குணபோதினி இதழில் சிறுவர் பக்கம், பெண்கள் பக்கம், சென்ற மாதம், பத்திரிகாச்சாரம் என பல பகுதிகளை அவர் எழுதினார். நமது கதாப்பிரசங்கி என்ற பெயரில் நகைச்சுவைக்கதைகள், நடைச்சித்திரங்கள் எழுதினார். அவ்விதழில் மாறல் கார்த்திகேய முதலியார், அரியூர் வ. பதுமநாப பிள்ளை என சிலர் தவிர எல்லா பக்கங்களும் அவரே எழுதியவை. சுப்ரமணிய பாரதியாரின் எள்ளல் நடையை அணுக்கமாக தொடர்ந்தவர் ராமானுஜலு நாயுடு. பாரதியாரின் தராசு கட்டுரைகள் போலவே ’நமதுகடை’ என்னும் பகுதியை எழுதினார். ’பரமசிவம் படியளக்கிற கொள்ளை’, ‘எதிலே குறைச்சல் என்னத்திலே தாழ்த்தி?’, ‘ரயில்வே பிரயாண தமாஷ்’ போன்ற அவருடைய தலைப்புகளே வேடிக்கையானவை.

ராமானுஜலு நாயுடு திராவிடாபிமானி, நகரதூதன், ஆத்மசக்தி, மகாவிகடதூதன் போன்ற இதழ்களிலும் ஆசிரியப்பொறுப்பில் சிலகாலம் இருந்திருக்கிறார். அவர் மறைந்தபின் ஜே.ஆர். ரங்கராஜு எழுதிய அஞ்சலிக்குறிப்பில் இருந்து அவர் தமிழ்நாடு, பணம் என மேலும் பல இதழ்களில் ஆசிரியராக இருந்தது தெரியவருகிறது. ஒரே சமயம் அவர் பல இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

சென்றுபோன நாட்கள் புதிய பதிப்பு

நினைவுக்குறிப்புகள்

ராமானுஜலு நாயுடுவின் முதன்மையான பங்களிப்பு அவர் அன்றைய பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் இதழாளர்களைப் பற்றி எழுதிய நினைவுக்குறிப்புகள். சுப்ரமணிய பாரதியார் பற்றி இவர் எழுதியதே அவரைப் பற்றிய முதல் வாழ்க்கைக்குறிப்பு. ரா.அ. பத்மநாபன், சீனி. விசுவநாதன், மா.சு. சம்பந்தம் மூன்று பேருமே அந்தக் கட்டுரையை மட்டும் மறுவெளியீடு செய்திருக்கிறார்கள்.

  • வி. நடராஜ ஐயர்
  • எம். வீரராகவாச்சாரியார்
  • டி.வி. கிருஷ்ணதாஸ்
  • டி.வி. கோவிந்தசாமி பிள்ளை
  • குருமலை சுந்தரம் பிள்ளை
  • ஏ. சங்கரலிங்கம் பிள்ளை
  • பி. வேணுகோபாலசாமி நாயுடு
  • சி. சுப்பிரமணிய பாரதி (இன்னொரு இதழாளர்)
  • சி. செல்வராஜூ முதலியார்
  • ஜீவரத்தின முதலியார்
  • ம. கோபால கிருஷ்ண ஐயர்
  • டி. வில்சன்
  • டி.ஏ. ஜான் நாடார்
  • கே.எஸ். கதிர்வேலு நாடார்
  • சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார்
  • கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு
  • பா.அ.அ. இராஜேந்திரம் பிள்ளை
  • வ. ராமசாமி ஐயங்கார்

1926 முதல் 1934 வரை அவர் எழுதிய இக்கட்டுரைகள் ‘சென்றுபோன நாட்கள்’ என்ற பெயரில் வெளியாகின. அவற்றை நீண்ட இடைவேளைக்குப்பின் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் காலச்சுவடு வெளியீடாக 2015-ல் கொண்டுவந்தார்.

சென்றுபோன நாட்களின் பின்னட்டை குறிப்பு:

‘கதை சொல்வதில் சமர்த்தர்’ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு. பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இவரை நினைவுகூர்வார்கள். 1928-ல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது ‘சென்றுபோன நாட்கள்’ தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஒரு ‘கிளாசிக்’ ஆகும். 1926-1934-ல் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு எழுதிய  ‘சென்றுபோன நாட்கள்’ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது. முதல் முறையாக இப்பொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை - இவை இந்த நூலின் சிறப்புகள். பல்லாண்டுக்காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ.இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஒரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார்.

மறைவு

எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு 1935-ல் தன் 49-ஆவது வயதில் மறைந்தார்.

இலக்கிய இடம்

தமிழ் இதழியல் தொடங்கிய காலகட்டத்தில் அதன் முன்னோடி வடிவங்களை உருவாக்கியவர்களில் ஒருவர் எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு. தமிழ்ப்பண்பாட்டில் அதற்கு முன் இல்லாத ஒரு மொழிவடிவம், இதழியல் எழுத்து, வேடிக்கை, செய்திப்பரிமாற்றம், விமர்சனம் மற்றும் கேளிக்கைப்புனைவு என அதன் வகைகள் பல. ஆங்கிலம் வழியாக அவ்வடிவங்களை தமிழுக்கு ஏற்ப உருமாற்றிக் கொண்டுவந்தவர்களில் ராமானுஜலு நாயுடு முக்கியமானவர். பாரதி அவருக்கு அவ்வகையில் முன்னோடி. கல்கியை அவருடைய வழிவந்தவர் எனலாம். சுஜாதா வரை வந்துசேரும் பல்சுவை இதழியல் எழுத்தின் ஊற்றுமுகங்களில் ஒன்று ராமானுஜலு நாயுடு.

'ஶ்ரீமான் நாயுடுகாரு பழங்காலத்து பிரபல பத்திரிகை ஆசிரியர்களான காலஞ்சென்ற ஶ்ரீமான் ஜி. சுப்பிரமணிய ஐயர், ஶ்ரீமான் சுப்பிரமணிய பாரதியார், ஶ்ரீமான் அ. மாதவ அய்யர், ஶ்ரீமான் வேதாசலம் பிள்ளை, ஸ்ரீமான் ராஜம் ஐயர் முதலிய கோஷ்டியைச் சேர்ந்தவர். அவரை பிறவி ஆசிரியர் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அவர் தமது இளவயது முதலே பாலபாஸ்கரன் என்னும் புனைபெயருடன் சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளுக்கு விஷயதானம் செய்து வந்தார்' என்று நாவலாசிரியர் ஜே.ஆர். ரங்கராஜு குறிப்பிடுகிறார். 'எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு அனுபவம் மிக்க பத்திரிகையாளர். அது மட்டுமல்ல விஷய ஞானம் கொண்ட நாவலாசிரியர், தராதரம் தெரிந்த எழுத்தாளர், கவி பாரதியின் நண்பர்‘ என்று எழுத்தாளர் ரா.அ. பத்மநாபன் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

ராமானுஜலு நாயுடு எழுதிய நூல்கள் பல. நாவல்கள், நகைச்சுவைத் தொகுதிகள், கதைத்தொகுதிகள், சிறுகதைகள் என அவை பல தளங்களைச் சேர்ந்தவை. நூல்களை பதிப்பித்துமிருக்கிறார்.

நகைச்சுவைத் தொகுதிகள்
  • ஆனந்த கதா கல்பகம்
  • ரஞ்சித ரத்னம்
  • பாலிகா கல்பம்
  • ஆனந்த கதா ரத்னம்
தொகுப்பு நூல்கள்
  • கதாமோகன ரஞ்சிதம்-1915. பாரதியின் சுவர்ணகுமாரி கதை இத்தொகுப்பில் உள்ளது. கதையில் பல மாறுதல்கள் உள்ளன என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பாரதியின் பெயரில் அக்கதை பிரசுரமாகவுமில்லை.
பதிப்பு நூல்கள்
  • விஷ்ணு ஸ்தல யாத்ரா மார்க்க விவரணம் (ராமானுஜலு நாயுடுவின் தந்தை சங்கு கோவிந்தசாமி நாயுடு எழுதியது. அவர் தம்பி கோபாலகிருஷ்ண நாயுடு உதவியுடன் 1914-ல் பதிப்பிக்கப்பட்டது. 108 திவ்யதேசங்களுக்கும் பயணம் செய்வதற்கான உதவிநூல்)
நாவல்கள்
  • ஆயிரம் தலை வாங்கிய அதிசய சிந்தாமணி
  • ஜெயவிஜயன்
  • இந்திரா
  • லலிதமனோகரம்
  • ஆசையின் முடிவு
  • வித்தியா நவநீதம்
  • நாகரீக பாரிஜாதம்
  • ஜனகாமோகன சாதுரியம்
  • பன்னிரு மரகத மர்மம்
  • விசித்திர துப்பறியும் கண்
  • ராம் மோகனன்
  • சுகுமார திலகம்
  • மரகதம் சுகுமார்
  • பரிமளா
சிறுகதைகள்

ராமானுஜலு நாயுடு ஆநந்த குணபோதினியில் நிறைய கதைகள் எழுதியிருக்கிறார். அவை நூல்வடிவில் வெளிவரவில்லை. தன் தந்தை சங்கு கோவிந்தசாமி நாயுடு பெயரிலும் கதைகள் எழுதியிருக்கிறார்.

  • பாக்கியரதி
  • பேபே செட்டியார்
  • நாடகலாபம்
  • சனிக்கிழமை விரதம்
  • தங்கையின் மறு கல்யாணம்
  • அத்தையின் பேராசை
  • புது மனிதனின் புதுமைகள்
  • சாமுண்டியின் பிற்கால வாழ்வு
  • தொந்தி சுப்பு
  • வினோத கடிதங்கள்

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.