எம்.சி.ராஜா

From Tamil Wiki
Revision as of 08:44, 16 March 2022 by Jeyamohan (talk | contribs)

எம்.சி.ராஜா (17 ஜூன் 1883 – 20 ஆகஸ்ட் 1943) ராவ் பகதூர் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராஜா தமிழ்நாட்டு சிந்தனையாளர்களில் ஒருவர், தலித் இயக்க முன்னோடி, இதழாளர்.

பிறப்பு, கல்வி

எம்.சி.ராஜா சென்னையிலுள்ள செயிண்ட் தாமஸ் மவுண்டி (பறங்கிமலை )யில் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை - இணையருக்கு 17 ஜூன் 1883ல் பிறந்தார். சின்னத்தம்பிப்பிள்ளை சென்னை லாரன்ஸ் காப்பகத்தில் மேலாளராக வேலை பார்த்தார். ராயப்பேட்டையிலுள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் ஆரம்பக்கல்வியும் பின் வெஸ்லி கல்லுரியில் உயர்நிலைப் படிப்பு முடித்து சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.

தனிவாழ்க்கை

அரசியல்வாழ்க்கை

எம்.சி.ராஜாவின் தந்தை மயிலை சின்னத்தம்பி ப்பிள்ளை 1887இல் உருவாக்கப்பட்ட ஆதிதிராவிடர் மகாஜன சபையின் செயலாளராக இருந்தவர். தந்தையின் அரசியலுக்கு எம்.சி.ராஜா மாணவர் வாழ்க்கையிலேயே நுழைந்தார். தந்தைக்கு பின்னர் 1916ல் ஆதிதிராவிடர் மகாசன சபைக்குத் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1917ல் மாண்டேகு செம்ஸ்போர்டு அரசமைப்புக் குழுவிடம் ஒடுக்ககப்பட்டோருக்கான உரிமைகளை வலியுறுத்தி கூட்டு மனு ஒன்றை அளித்து இந்திய அளவில் கவனம்பெற்றார். 1919 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சென்னை மாகாணச் சட்டசபையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

192 ல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சம்மேளனம் என்னும் அமைப்பின் நிறுவனத்தலைவராகவும் அதன் முதல் செயலாளராகவும் விளங்கினார். இந்திய அளவில் பணிகளை விரிவாக்கிக்கொண்டார்.1930ல் மையச் சட்டசபையான நாடாளுமன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தலித் மக்களின் முதல் பிரதிநிதி அவரே. 1934 ல் அந்த அவைக்கு தற்காலிக சபா நாயகராக இருந்தார். நாடாளுமன்றத்தில் தீண்டாமையை சட்டபூர்வமாக விலக்கும் மசோதா ஒன்றை1933ல் கொண்டு வந்தார். அது அவையில் தோற்கடிக்கப்பட்டது

அம்பேத்கருடன் முரண்பாடு

எம்.சி.ராஜா இந்திய தலித் அரசியல்வாதிகளில் முன்னரே களத்திலிறங்கியவர், அம்பேத்கருக்கு முன்னரே புகழ்பெற்றவர். ஆயினும் 1930 ஆண்டு தொடங்கிய வட்டமேசை மாநாடுகளில் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு டாக்டர்.அம்பேத்கருக்கும் ரெட்டமலை சீனிவாசம் அளிக்கப்பட்டது. இதனால் எம்.சி.ராஜா அம்பேத்கருடன் முரண்பட்டார். இரட்டை வாக்குரிமை பற்றி அவர்களுக்கிடையே நிகழ்ந்த விவாதத்தில் முதலில் எம்.சி.ராஜா அதை வரவேற்றார், அம்பேத்கர் எதிர்த்தார். வட்டமேஜை மாநாட்டுக்குப்பின் அம்பேத்கர் அதை ஆதரித்தார், ஆனால் நாடெங்கும் உருவான மனநிலையை கண்டபின் எம்.சி.ராஜா எதிர்த்தார். இது அவர்களுக்கிடையே நேரடியான அரசியல் போட்டியாகவும் மாறியது. பின்னர் அம்பேத்கருடன் சமரசமாகி இணைந்து செயல்பட்டார்.

1922ல் பறையர், பஞ்சமர் என்ற வார்த்தைகளுக்குப் பதில் ஆதி திராவிடர் என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

1921ல் பனகல் அரசரின் நீதிக்கட்சியரசு அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டினை அமலுக்குக் கொண்டுவந்தது. அதில் பட்டியல் பிரிவு மக்களுக்கு எந்தவொரு சலுகையும் தரப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ராஜா பட்டியல் பிரிவு மக்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென வலியுறுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்த போராட்டக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். அந்தப் போராட்டங்களுக்கு நீதிக்கட்சி கொஞ்சங்கூட அசைந்து கொடுக்கவில்லை. மாறாக அந்த ஆண்டு புளியந்தோப்பில் நடந்த கலவரத்துக்குக் காரணம் பறையர்களை சமாதனப்படுத்த பிரிட்டிஷ் அரசு எடுத்த முடிவுதான் என்று நீதிக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர். இதனால் வெகுண்ட ராஜா நீதிக்கட்சியிலிருந்து 1923ல் விலகினார். 1926 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1928ல் அனத்திந்திய தாழ்த்தப்பட்டோர் சங்கத்தினை ஏற்படுத்தி அதன் தலைவாரானார். 1926 முதல் 1937 வரை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

1932ல் இந்திய தேசிய காங்கிரசின் வலதுசாரிகளான டாக்டர் பி. எஸ். மூஞ்சே மற்றும் ஜாதவுடன் ராஜா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி ராஜா அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றும் அதற்குப் பதில் அவர்கள் பட்டியல் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுதான் அனைத்திந்திய அளவில் தேர்தலில் பட்டியல் பிரிவு மக்களுக்கென்று தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென அம்பேத்கார் அதிகாரபூர்வமாகக் கோரத் தூண்டுதலாய் அமைந்தது.

1937ல் ஏப்ரல் முதல் ஜூலை வரை சென்னை மாகாணத்தில் சொற்பகாலமே ஆட்சியிலிருந்த கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் தற்காலிக இடைக்கால அமைச்சரவையில் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

இலக்கியப்பணிகள்

எம். சி. ராசா பல பள்ளிப் புத்தகங்களை எழுதியுள்ளார். ஆர். ரங்கநாயகி அம்மாள் என்பவருடன் இணைந்து Kindergarten Room என்ற தலைப்பில் மழலையர் பள்ளிப் பாடநூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் மூன்றாம் பதிப்பு 1930 ஆம் ஆண்டில் வெளியானது.

மறைவு

23 ஆக்ஸ்ட் 1945ல் எம்.சி.ராஜா சென்னை, செயிண்ட் தாமஸ் மவுண்டில், ராஜா தெருவிலிருந்த தனது வீட்டில் காலமானார்.