என் கதை

From Tamil Wiki
Revision as of 09:02, 3 February 2022 by Jeyamohan (talk | contribs)
என் கதை

என் கதை ( 1970) தமிழில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதிய தன்வரலாறு. தமிழில் எழுதப்பட்ட தன் வரலாறுகளில் முக்கியமான சிலவற்றில் ஒன்றாக கருதப்படுகிறது.

எழுத்து, பிரசுரம்

1970ல் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இந்நூலை எழுதினார். நண்பர்கள் தன் வரலாற்றை எழுதும்படிச் சொல்வதாகவும், தன் வாழ்க்கை அவ்வளவு முக்கியமல்ல என்பதனால் எழுதாமலிருந்ததாகவும் பின்னர் எல்லா வாழ்க்கையிலும் அரிய நிகழ்வுகளுண்டு என்பதனால் எழுதியதாகவும் முன்னுரையில் இராமலிங்கம்பிள்ளை சொல்கிறார். ‘ஒரே மாதிரி தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு கூட்டத்திலும்கூட ஒருவனுடைய வாழ்க்கையில் நேரக்கூடிய நிகழ்ச்சிகளோ சந்தர்ப்பங்களோ இன்னொருவனுடைய வாழ்க்கையில் இருப்பதில்லை. ஆதலின் உலகத்தில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி சரித்திஅங்கள் இருக்கின்றன’ என்கிறார்.

உள்ளடக்கம்

இராமலிங்கம் பிள்ளையின் என் கதை புனைவுக்கு நிகரான அமைப்பு கொண்டது. தொடர்ச்சியாக காலவரிசையில் இந்நூல் அமையவில்லை. அவருடைய பிறப்புக்குக் காரணமாக அவர் அப்பா வெங்கடராம பிள்ளைக்கு ஒரு பிராமணப் பெரியவர் வாழ்த்து சொன்ன நிகழ்வில் இருந்து பாரதியைச் சந்தித்த நிகழ்வு வரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் கதைபோல தனித்தனியாகச் சொல்லப்பட்டுள்ளன.

ஆர்வமூட்டும் நிகழ்வுகள்

  • முதல்மனைவி முத்தம்மாளை மணந்தது : விரும்பாமல் திருமணம் செய்துகொண்டு மனைவியை ஒதுக்கி வைத்த இராமலிங்கம் பிள்ளை மனைவியின் துயர் கண்டு அவரை ஏற்றுக்கொண்ட நிகழ்வு.
  • அசைவ உணவு உண்பது: காந்தி பேச்சை கேட்டுக்கொண்டு அசைவ உணவை தவிர்ப்பவர் அசைவ உணவை தன் வீட்டிலேயே திருடி உண்பது
  • முதல் மனைவி முத்தம்மாளின் மறைவு : தன் தங்கையை மணம்செய்துகொள்ளும்படிச் சொல்லிவிட்டு முத்தம்மாள் மறைந்த நிகழ்வு
  • பாரதியுடன் அறிமுகமாதல் : கவிஞரின் நண்பர் வெங்கட கிருஷ்ணய்யர் அவரை ஓவியர் என அறிமுகப்படுத்தியிருக்கிறார். 'ஒ,பிள்ளைவாள் நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும், நாம் உம்மை காவியத்தில் தீட்டுவோம்' என்று பாரதி சொன்னார்.

இலக்கிய இடம்

தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த தன் வரலாறுகளிலொன்று என் கதை. புனைவுக்கு இணையான இனிய நடையும் நுட்பமான விவரணைகளும் கொண்டது. பாரதி உட்பட அக்காலகட்ட ஆளுமைகளின் சித்திரங்கள் அடங்கியது ‘தன் சொந்த அனுபவங்களை எடுத்து பிறரும் அனுபவிக்கும் படிச் சொல்வது மிகவும் சிறப்பான கலை. இந்தக் கலையை மிகவும் சிறப்பான முறையில் நம்தலைமுறையில் இரண்டொருவர் கையாண்டுள்ளார்கள். அவர்களின் முதன்மையானவர் என்று நாமக்கல் கவிஞரைச் சொல்லலாம்’ என்று க.நா.சுப்ரமணியம் கூறுகிறார்

உசாத்துணை