under review

உபாத்தியாயர்

From Tamil Wiki
Revision as of 03:16, 3 October 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
உபாத்தியாயர் இதழ் 1887

தமிழ் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஜூன் 1887 முதல் வெளிவந்த இதழ் உபாத்தியாயர் (The Village School Master).

பதிப்பு, வெளியீடு

கல்வித் திட்டங்களைப் பற்றி முழுமையாக ஆசிரியர்களும் மாணவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், மாணவர்களுக்கு பாட நூல்கள் தொடர்பான முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஜூன் 1887-ல், ஆரம்பிக்கப்பட்ட இதழ் உபாத்தியாயர். (The Village School Master) இதன் ஆண்டு சந்தா தபால் செலவு உள்பட ரூபாய் ஒன்று. தனி இதழ் ஒன்றின் விலை 1 அணா, நான்கு பைசா. 16 பக்கங்களைக் கொண்டதாக இவ்விதழ் வெளிவந்தது.

இதன் ஆசிரியர் பெயர் குறித்தோ, எத்தனை ஆண்டுகள் இந்த இதழ் வெளிவந்தது என்பது குறித்தோ விவரங்கள் கிடைக்கவில்லை.

இதழின் நோக்கம்

ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுதல், பாடத்திட்டங்களை எளிமையாகவும் செம்மையாகவும் மாணவர்களுக்கு போதிக்க வழிகாட்டுதல், சாதாரண க்ராண்ட்-மெட்ரிக் க்ராண்ட் பாடத் திட்ட விளக்கங்கள், வழிகாட்டல்கள், ஆலோசனைகள் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் இவ்விதழ் வெளிவந்தது.

கணிதப் புதிர்

உள்ளடக்கம்

உபாத்தியாயர் இதழ் மாதம் ஒருமுறை இதழாக வெளிவந்தது. இவ்விதழில் கிண்டர் கார்டன், மனோதத்துவமும் வித்தியாப்பியாசமும், முதல் ஸ்டாண்ர்ட் வகுப்புக்கு விஷய பாடக்குறிப்பு, இலக்கணம், காலம் அரைமணி, ஒரே உபாத்தியாயர் இரண்டு மூன்று வகுப்பை நடத்தும் முறை, பாடம், எழுத்து - வாசிப்பு, சிறு குழந்தைகளைக் குறித்த சில விஷயங்கள், விலக்க வேண்டிய புத்தகங்கள், மனக்கணக்கு, பள்ளிக்கூடப் புத்தக அதிசயம், பாடசாலைக் கூச்சல், பரீட்சைகள், அங்க கணிதம், கிருஷி சாஸ்திரம், ஆசான் குறைகள், கடிதங்கள், கதை சொல்வது, சமாசாரக்குறிப்பு, வர்த்தமானக் குறிப்புகள் என பல வகையிலான கட்டுரைகள் இடம்பெற்றன.

சுவாரஸ்யமான கணிதப் புதிர்களும், விடுகதைகளும், அறிவுரைகளும் இவ்விதழில் அவ்வப்போது இடம் பெற்றுள்ளன.

ஆவணம்

உபாத்தியாயர் இதழ்களில் சில தமிழிணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

உபாத்தியாயர் இதழ்கள்: தமிழிணைய மின்னூலகம்


✅Finalised Page