second review completed

உபதேச மஞ்சரி

From Tamil Wiki
Revision as of 23:08, 14 April 2024 by Tamizhkalai (talk | contribs)
உபதேச மஞ்சரி

உபதேச மஞ்சரி (1929) பகவான் ரமணரின் அடியவர்களுள் ஒருவரான சாது நடனானந்தர் தொகுத்த வினா - விடை அமைப்பில் அமைந்த நூல். ஆன்மிகம் குறித்து பகவான் ரமணரிடம் பல்வேறு சமயங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளின் தொகுப்பே உபதேச மஞ்சரி.

(’உபதேச மஞ்சரி’ என்ற தலைப்பில், ராமகிருஷ்ண பரமஹம்சர், சிவானந்தர், சங்கராச்சாரியர் உள்ளிட்ட பலரது உபதேசங்கள் தொகுக்கப்பட்டுள்ளன)

பதிப்பு, வெளியீடு

உபதேச மஞ்சரியின் முதல் தொகுப்பு, 1929-ல், திருவண்ணாமலை நாகராஜா அச்சியந்திர சாலை மூலம் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர்: பாதிராபுலியூர் வெ. கோவிந்த ரெட்டியார். தொகுத்தவர்: சாது நடனானந்தர். இந்நூல் பின்னர் ரமணாச்ரமத்தால் பல முறை பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ரமணாச்ரமம் தொகுத்த ஸ்ரீ ரமண நூல் திரட்டிலும் இடம் பெற்றது.

ஆசிரியர் குறிப்பு

சாது நடனானந்தரின் இயற்பெயர் நடேச முதலியார். இவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சுவாமி விவேகானந்தரின் ஞான யோகத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தார். விவேகானந்தருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் குருவாக அமைந்தது போல் தனக்கும் ஒரு குரு அமைய வேண்டும் என்ற தேடுதலில் இருந்தார். ஸ்ரீ குப்பண்ணா சோமயாஜி என்பவர் மூலம் பகவான் ரமணரைப் பற்றி அறிந்தார்.

1918-ல், பகவான் ரமணரைச் சரணடைந்தார். அது முதல் பகவான் ரமணரின் அடியவரானார். பல்வேறு சமயங்களின் ஆன்மிகம், தத்துவம், சமயம், அத்வைதம் குறித்துத் தனக்கு இருக்கும் பல சந்தேகங்களை பகவான் ரமணரிடம் கேட்டார். அக்கேள்விகளுக்கு பகவான் ரமணர் அவ்வப்போது அளித்த விடைகளின் தொகுப்பே உபதேச மஞ்சரி.

சாது நடனானந்தர் ‘ஸ்ரீ ரமண தரிசனம்’ என்ற நூலையும் இயற்றினார். உபதேச மஞ்சரி நூல் பகவான் ரமணரால் சிறப்பித்துக் கூறப்பட்ட நூல்களுள் ஒன்று.

நூல் அமைப்பு

உபதேச மஞ்சரி நூல், உபதேசம் (அறிவுறுத்தல்), அப்யாஸம் (பயிற்சி), அனுபவம் (அனுபவம்) மற்றும் ஆரூடம் (அடைதல்) என நான்கு பிரிவுகளைக் கொண்டது. கேள்விகள் மற்றும் பதில்களின் தொகுப்பாக அமைந்துள்ளது.

நூல் மகிமையில் (முன்னுரை) நூலின் வடிவம், பொருள், பயன், நூல் எழுந்ததன் காரணம் ஆகியன விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ”வேதங்கள் மற்றும் ஆகமங்கள் அனைத்தின் உச்சமாகவும் இதயமாகவும் விளங்கும் நித்திய பிரம்மமே இந்த நூலின் பொருள்” என்றும், “ஆன்ம சித்தியே இந்த நூலின் பரமப்பிரயோஜனம்” என்றும் நூலின் முன்னுரையில் சாது நடனானந்தர் குறிப்பிட்டார்.

உள்ளடக்கம்

வேதாந்த மார்க்கத்தின் முடிவு, சித்தாந்த மார்க்கத்தின் முடிவு, சாதகன் அனுஷ்டிப்பதற்கான நெறிகள், எதுவரை சாதனை செய்ய வேண்டும்? ஆனந்தவியல், உபதேசவியல், சற்குருவியல், சற்சீடவியல், ஞானத்தின் ஆருடவியல் மற்றும் விவேக இயல் யாது? - என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடைகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நூலிருந்து சில பகுதிகள்

கே: ஆனந்த இயல் யாது?

ப: சர்வ வியவகாரங்களும் அற்றதும் சுழுப்தியைப் போன்று உள்ளதுமான அவ்விஞ்ஞான நிலையிலுள்ள சுக (சாந்த) அநுபவமாம். இதனைக் கேவல நிர்விகல்ப நிலையென்றும் கூறுவர்.

கே: ஆனந்தாதீத இயல் யாது?

வியவகாரங்களற்ற சுழுப்தியைப் போன்றுள்ள அந்நிலையினின்று நனவிற் சுழுப்தி நிலைபெற்று மாறாத சித்தோப சாந்தியுடன் விளங்கும் நிலையாம். இந்நிலையில் தேக இந்திரிய கரணாதிகளின் சலனம் இருந்தும், நித்ராமக்ந பால நியாயம் போல்* அதில் தனக்கு அற்பமும் திருஷ்டி இன்மையால் இத்தகைய யோகி சர்வ வியவகாரங்களையும் செய்தும் செய்யாதவனாகின்றான். இதனை ஸஹஜ நிர்விகல்ப சமாதியென்றும் கூறுவர்.

(* உறங்கும் பாலர்கள் செய்யும் அருந்தலாதிய வியவகாரங்கள் பிறர் திருஷ்டியில் உள்ளனவே அன்றி அப்பாலர்களின் திருஷ்டியில் இன்மையால் அவர்கள் அவ்வியவகாரங்களைச் செய்தும் செய்திலர்.)

கே: சராசர ப்ரபஞ்சங்கள் யாவும் தன்னையே ஆச்ரயித்து உள்ளன என்பதற்கு அநுபவம் யாது?

ப: தான் என்பதற்குத் தேகியே பொருளாகலானும், சுழுப்தியில் அடங்கிக் கிடந்த சக்தியானது நான் என்ற ஞானத்துடன் வெளிப்பட்ட பின்பே சகல விஷயங்களும் அநுபவமாகலானும், காண்பானாகிய தான் அங்கங்கும் இருத்தலானும், தான் இல்லாவிடத்து அன்னியத் தோற்றங்கள் அற்பமும் இன்மையானும், சர்வமும் தன்னிடத்தில் தோன்றி நின்று அழிகின்றன என்பதில் சிறிதும் சம்சயம் இல்லை.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.