இளையான்குடி மாற நாயனார்

From Tamil Wiki
Revision as of 23:05, 19 April 2022 by Subhasrees (talk | contribs) (இளையான்குடி மாற நாயனார் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இளையான்குடி மாற நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இளையான்குடி மாற நாயனார் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வேளாண் குலத்தில் பிறந்தவர். மாற நாயனார் தன் இல்லம் தேடி வரும் சிவனடியார்களுக்கு நாள்தோறும் உணவளிப்பதையே அறம் எனக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

சிவனின் ஆடல்

சிவனடியார்க்கு உணவிடும் திருப்பணியை வறுமையுற்றாலும் தடையின்றி செய்ய வல்லவர் மாற நாயனார் என்று உலக்குக்குக் காட்ட சிவன் ஒரு ஆடலை நிகழ்த்தினார். இளையான்குடி மாறனாரின் செல்வம் குறைந்து வறுமை உண்டாகியது. இவ்வாறு செல்வம் குறைந்தாலும், தம்மிடமிருந்த நிலங்கள் முதலியவற்றை விற்றும், கடன்வாங்கியும் அடியார்க்கு அமுதளிக்கும் பணியை விடாது செய்து வந்தார்.

அடை மழைக்காலத்தில் ஒருநாள், மாற நாயனாரும் அவர் மனைவியும் உணவின்றிப் பசியால் வாடியிருந்தனர். அந்நிலையிலும் இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால், கதவைப்பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். நள்ளிரவில் சிவபெருமான், அடியார் உருவில் மாறனாரது வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி அழைத்தார். மாறனார் கதவைத் திறந்து, சிவனடியாரை வீட்டினுள் வரவேற்று தங்க இடம்கொடுத்தார்.

வீடுதேடி வந்த சிவனடியாருக்கு உணவளிக்க வீட்டில் ஏதுமில்லையே என மாற நாயனாருக்கு வருத்தம் மிகுந்தது. கடன் கொடுக்கவும் யாருமில்லை என்று கலங்கிய மாறநாயனாரிடம் அவர் மனைவி அன்றைய பகற்பொழுதில் நிலத்தில் விதைத்த நெல்மணிகள் மழைநீரில் மிதந்து கொண்டிருக்கும் என நினைவுபடுத்தினார். மாற நாயனாரும் மகிழ்வுடன் சென்று அவற்றை சேகரித்து வந்து, கீரைகளைப் பறித்து வந்தார். அடுப்பெரிக்க விறகில்லாமல், வீட்டின் சிதலமடைந்த கூரையிலிருந்த மரக்கட்டைகளை வெட்டிப் பயன்படுத்தி உணவு சமைத்து, மாறனாரும் அவரது மனைவியும், சிவனடியாருக்கு உணவு படைத்தனர்.

அடியார் உருவில் வந்த சிவபெருமான், சோதிப் பிழம்பாய் தோன்றினார். அது கண்டு திகைத்து நின்ற மாறனார் மற்றும் மனைவி முன்னர், சிவபெருமான் உமாதேவியுடன் எருதின் மேல் தோன்றி அருளினார்.

குருபூஜை

இளையான்குடி மாற நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆவணி மாதம் மக நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.

உசாத்துணை