இரும்புக்குதிரைகள்

From Tamil Wiki

இரும்புக்குதிரைகள் (1984 ) பாலகுமாரன் எழுதிய நாவல். லாரிப்போக்குவரத்து சார்ந்த களம் கொண்டது.

எழுத்து வெளியீடு

1986ல் கல்கி இதழில் தொடராக வெளிவந்தது. பின்னர் நூலாகியது. இந்நாவலில் வரும் விஸ்வநாதன் என்பவர் மறைந்த சிறுகதையாசிரியரும் பாலகுமாரனின் நண்பருமான சுப்ரமணிய ராஜு தான் என்று மாலன் நாவலுக்கான முன்னுரையில் சொல்கிறார்.

கதைச்சுருக்கம்

கதை லாரிப்போக்குவரத்து சார்ந்த சூழலில் நிகழ்கிறது. தண்ணித்தொட்டி தெருவில் இரண்டு காந்திலால், ராவுத்தர் என இருவரின் லாரிக்கம்பெனிகள் உள்ளன. ராவுத்தரின் லாரிகளில் ஒன்று ஒருவரை அடித்து போட்டுவிட்டு வர இன்னொன்று ஒரு கிணற்றை இடித்துவிடுகிறது. காந்திலாலின் லாரி, இங்கிலீஷ் கம்பெனியின் சரக்கை ஏற்றி வரும் வழியில் காணாமலாகிறது. இங்கிலீஷ்க் கம்பெனி ஆள் விஸ்வநாதன் அதைத் தேடிப் போகுமிடத்தில் கதை தொடங்குகிறது. லாரிக்கம்பெனிகளிலுள்ள சிறு ஊழல்கள், சமரசங்கள், எழுதப்படாத விதிகள் என நாவல் விரிகிறது

கதைநாயகன் விஸ்வநாதன் திரைத்துறையில் நுழைந்துவிடவேண்டும் என்னும் கனவுடன் பிழைப்புக்காக குமாஸ்தாவாக இருக்கிறான்.அவன் குதிரைகளை பாடுபொருளாக்கி எழுதும் கவிதைகள் இந்நாவலின் மைய ஓட்டம். அவன் மனைவி தாரிணிக்கு அந்தக் கவிதைகள் பிடிக்கவில்லை. அவர்கள் கசப்பான ஓர் இல்லறவாழ்க்கையை வாழ்கிறார்கள். வாத்தியார் நாராயணசாமி எனும் நாணு ஐயர் தன்னிடம் படித்த இருந்த வடிவேலின் கடையில் தன் மகள் காயத்ரிக்கு வேலை வாங்கித்தருகிறார். நாணு ஐயருடன் விஸ்வநாதன் நட்பாகிறான். காயத்ரி விஸ்வநாதன் திருமணமானவன் என தெரிந்தும் அவனை விரும்புகிறாள். திருமணம் வேண்டாம், ஆனால் விஸ்வநாதனின் குழந்தை தனக்கு வேண்டும் என்று சொல்கிறாள். விஸ்வநாதன் அதை ஏற்பதில்லை, ஆனால் நாணு ஐயர் அதை ஏற்றுக்கொள்கிறாள். காயத்ரி பிரிந்துசெல்கிறாள். விஸ்வநாதனும் அவன் மனைவி தாரிணியும் அவனுடைய கவிதைகளை இரும்புக்குதிரைகள் என்றபெயரில் நூலாக்குகிறார்கள்.

இலக்கிய இடம்

தமிழிலக்கியச் சூழலில் பேசப்படாத ஒரு தொழில்துறையை சிறிய செய்திகள் வழியாக விவரித்திருப்பதனால் இது கவனத்திற்குரிய நாவல். ஆனால் விஸ்வநாதன், காயத்ரி, நாணு ஐயர் என மையக்கதாபாத்திரங்கள் பொதுவாசகர்களுக்காக கற்பனாவாதத்தன்மை கொண்டவர்களாகவோ அதிர்ச்சியூட்டும் பார்வை கொண்டவர்களாக்வோ வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள்

உசாத்துணை