under review

இருகூரான்

From Tamil Wiki
Revision as of 10:33, 29 March 2024 by Logamadevi (talk | contribs)
இருகூரான்

இருகூரான் (மூஸா சுல்தான் இருகூரான்; மூஸா சுல்தான்; ஐ.எம். சுல்தான்) (பிப்ரவரி 12, 1937 – ஜூலை 31, 2012) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர். தமிழகத்தின் பல்வேறு இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய பல நூல்களை எழுதினார். இஸ்லாமிய சமூகம் சார்ந்த பல படைப்புகளை எழுதினார். கதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

பிறப்பு, கல்வி

மூஸா சுல்தான் என்னும் இயற்பெயர் கொண்ட இருகூரான், பிப்ரவரி 12, 1937 அன்று, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இருகூரில் மூஸா ராவுத்தர் - பீவி இணையருக்குப் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை கற்றார். தையல் தொழில் கற்றார்.

எழுத்தாளர் இருகூரான்

தனி வாழ்க்கை

இருகூரான் தையல் தொழிலாளியாகப் பணியாற்றினார். சுதந்திர எழுத்தாளராகவும், பதிப்பாளராகவும் செயல்பட்டார். மணமானவர். மனைவி: தாஜின்னிஸா. மகன்கள்: ஜாகிர் உசேன், ஷாஜஹான், பத்ருதீன். மகள்: பவுசியா.

இருகூரான் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

இருகூரான் தொடக்கக் காலத்தில் கவிதைகள் எழுதினார். தமிழாசிரியர் ஸ்ரீரங்கம்பிள்ளை சுல்தானின் திறமையை அறிந்து ஊக்குவித்தார். தனது ஊரின் பெயரையே புனை பெயராகக் கொண்டு ‘இருகூரான்’ என்ற பெயரில் எழுதினார். கவிதையைத் தொடர்ந்து இதழ்களில் பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை எழுதினார். சிறார்களுக்காகச் சில கதைகளை, நாவல்களை எழுதினார். இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு பல படைப்புகளை எழுதினார்.

சிறுகதை, நாவல், கட்டுரை, ஆன்மிகம், சிறார் இலக்கியம், சமய விவாதம், வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு பிரிவுகளில் பல நூல்களை எழுதினார்.

இதழியல்

இருகூரான், எழுத்தாளர் சாவியால் ஆதரிக்கப்பட்டார். தினமணி கதிர் இதழில் ஆசிரியராக இருந்த சாவி, இருகூரானைத் துணை ஆசிரியராக நியமித்தார். சாவி, குங்குமம் இதழ் ஆசிரியரானதும் இருகூரானும் அவ்விதழில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து முத்தாரம் உள்ளிட்ட முரசொலி குழும இதழ்களில் 22 ஆண்டு காலம் பணியாற்றினார்.

பேசும்படம், தினசரி, பெண்மை உள்ளிட்ட பல இதழ்களில் துணை ஆசிரியர், உதவி ஆசிரியர், இணை ஆசிரியர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றினார்.

பதிப்பு

இருகூரான் ‘அமானி பப்ளிகேஷன்ஸ்' என்னும் பெயரில் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கினார். பல நூல்களைத் தொகுத்து வெளியிட்டார்.

விருதுகள்

இஸ்லாமிய பண்பாட்டு இலக்கிய நிலையம் அளித்த ‘சதக்கதுல்லாஹ் அப்பா இலக்கியப் பரிசு'

மறைவு

இருகூரான், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜூலை 31, 2012-ல் காலமானார்.

மதிப்பீடு

இருகூரான் தனது பதிப்பகம் மூலம் விவாத நூல்கள் பலவற்றைத் தொகுத்து வெளியிட்டார். பொது வாசிப்புக்குரிய பல நூல்களை எழுதியவராகவும், இஸ்லாமிய சமூகம் சார்ந்த பல படைப்புகளை எழுதியவராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • சுமைதாங்கி
  • உழைக்கும் மகளிரின் வெற்றிக் கதைகள்
  • ஜெரினா
  • நம்பிக்கை
  • நல்லொளி
  • ஆனந்தபுரி இளவரசி
  • புதுப்பாட்டு புதுமெட்டு
  • காற்றுவேலி
  • மண்ணில் ஒரு விண்மீன்
  • ரத்த சாட்சி
  • புதுசா ஒரு காதல் பாட்டு
  • பி.எஸ்.அப்துல் ரஹ்மான் வாழ்க்கை வரலாறு
  • சாதனையாளர் அ.அப்துல் ரஹ்மான் வாழ்க்கை வரலாறு
  • நபிகள் நாயகம் (ஸல்)
  • அறிவியல் ஆராய்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு
  • சின்னஞ்சிறு வயதில் கேளாத கானங்கள்
  • மாமிச உணவு மனிதனுக்கு அனுமதிக்கப்பட்டதா? விலக்கப்பட்டதா?'
  • உண்மை உழைப்பின் திருப்புமுனைகள் (ஐந்து பாகங்கள்)

மற்றும்பல

உசாத்துணை


✅Finalised Page