இரா. கவியரசு

From Tamil Wiki
இரா. கவியரசு.jpg

This page is being created by ka. Siva

இரா.கவியரசு

இரா.கவியரசு ( பிறப்பு : டிசம்பர் 25, 1986 ) தமிழ் கவிஞர். சென்னையில் அரசுப் பணியில் இருக்கிறார்.

பிறப்பு, கல்வி

இரா.கவியரசு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை எனும் கிராமத்தில் டிசம்பர் 25 ,1986 அன்று M.K.ராஜேந்திரன் - கலாவதி தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ளிக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளியில் படித்தார். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர்

கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை கணிப்பொறி அறிவியல் பயின்று பட்டம் பெற்றார். 2013 முதல் சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார்.

தனி  வாழ்க்கை

2015 ல் திருமணம். மனைவி: கீதா மகள்கள்: கண்மணி, மகிழ்மதி. தற்போது திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கல்கி இதழில் முதல் கவிதை 2005- ல் வெளிவந்தது. 2010 முதல் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார். இலக்கிய ஆக்கத்தில் சங்கக் கவிதைகள் மற்றும் சமகாலத்தில் நவீன கவிஞர்களின் கவிதைகள்  பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிடுகிறார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பு " நாளை காணாமல் போகிறவர் " ஆகஸ்ட் 2020 தேநீர் பதிப்பகம் வாயிலாக வெளிவந்தது.

தற்போது தனது இணையப்பக்கத்தில் தமிழின் நவீன கவிஞர்களின் கவிதைகள் குறித்து வாழ்பனுபவங்களுடன் கட்டுரையாகத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இலக்கிய இடம்

கவியரசுவின் கவிதைகள் குறித்து கவிஞர் வேல்கண்ணன் தனது முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். "ஆயிரக்கணக்கான பார்வையாளர்களையும் 22 ஆட்டக்காரர்களையும் கொண்ட கால்பந்து விளையாட்டில் எல்லோருடைய பார்வையும் கால்பந்தை நோக்கியே இருக்கும். தொலைக்காட்சி பார்வையாளர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இந்தக் கால்பந்தை   போன்றது தமிழில் வரும் கவிதைத் தொகுப்பும். ஆனால், இங்கே பார்வையாளர்கள் கவிதை எழுதிக்கொண்டு இருப்பவர்களாகவும் எழுதப் போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இது தமிழில் தொடர்ந்து நடந்தேறிக் கொண்டு  இருக்கிறது.சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி நடந்த நாட்களில் மட்டும் தமிழில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன.இந்தக் கவிதைகள் எழுதித் தீர்த்தும் இன்னும் தீரவில்லை. உலகின் தொன்மையான மொழிக்கு இது கூட இல்லை என்றால் எப்படி என்று ஒரு வித தற்பெருமை கொண்டாலும் எதைப்பற்றி எழுதப்படுகிறது என்றும் எந்த விதமாக நுகரப்படுகிறது என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. கவியரசு, எந்தக்  கேள்விகளையும் பதிலையும் வைத்துக் கொள்ளாமல் கவிதையென்னும் கால்பந்தை உருட்டி விளையாண்டு பார்த்திருக்கிறார். கோல் போடுவதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்,  முதலில் உருட்டி விளையாடுவோம் என்று முடிவெடுத்து இருக்கிறார் என்று தோன்றுகிறது. சில இடங்களில்  லாவகமாக சில இடங்களில் எளிமையாக தொட்டு இருக்கிறார். மரபு வழக்கை மெதுவாக திசை திருப்புகிறார் கவியரசு. பழைய வழியைத் தவிர்த்து அவர் அழைத்துச் செல்லும் இடம் கவித்துவமானது.தலைப்பு கவிதையான 'நாளை காணாமல் போகிறவர்'' என்பதில்  ஒரு மனிதனின் இருத்தலை  ஆதார் கார்டு, சிசிடிவி போன்ற எத்தனை தொழில் நுட்பம் கொண்டு இணைத்தாலும் தொலைந்து போவதற்கு  கடைத்தெரு முக்கம் போதும் என்கிறார்."

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு

நாளை காணாமல் போகிறவர் ( 2020)

விருதுகள்

திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின்

கனவு இலக்கிய விருது (2021)

செங்கனி பதிப்பக விருது ( 2021 )

நாமக்கல் தமிழ்ச்சங்க அறக்கட்டளை விருது (2022)

இணையப்பக்கம்

rajkaviyarasu.blogspot.com