being created

இராம கண்ணபிரான்

From Tamil Wiki
இராம கண்ணபிரான் அயோவா அனைத்துலக எழுத்துத் திட்டத்தில் பங்கேற்ற போது (1998)

இராம.கண்ணபிரான் (பி- 1943) சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சன கட்டுரைகள் எழுதி வருபவர். இலக்கியம் சார்ந்த பல்வேறு அரசு அமைப்புகளில் முனைப்புடன் செயலாற்றுபவர். சிறுகதைகள் குறித்து அவர் எழுதும் கட்டுரைகள் விமர்சன போக்கில் முக்கியமானவை என கருதப்படுகிறது. சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டையில் அமிர்தலிங்கம் ராமசாமி முதலியார்- மாரிமுத்து அம்மாள் இணையருக்கு 27.12.1943 அன்று மகனாக பிறந்தார். அவருடன் பிறந்தோர் மூன்று சகோதரிகள்.

அம்மாப்பேட்டை கிராமத்தில் தொடக்கப்பள்ளி பயின்றவர் 10 வயதில் 1953ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிங்கப்பூருக்கு வந்தார். சிங்கப்பூரில் மெக்நேயர் தொடக்கப்பள்ளியில் பயின்று பின்னர் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் எச்எஸ்சி வரையில் படித்தார். அதன் பின்னர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

வாழுமங்கலம் ராஜகோபாலன்- குப்பம்மாள் இணையரின் நான்காவது மகளான ஜானகியை 1965இல் திருமணம் செய்தார். செந்தில் பூங்கொடி, பால்வண்ணன் என இரண்டு பிள்ளைகள் அவருக்கு.

ரோசைத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியைத் தொடங்கினார். தொடக்கத்தில் ஆங்கில மொழி ஆசிரியராக சேர்ந்த அவர், பள்ளியில் தமிழாசிரியர் பற்றாக்குறை நிலவியதால் பின்னர் தமிழாசிரியராகவும் 37 ஆண்டுகள் (1966-2002) அதேபள்ளியில் பணியாற்றி 59 வயதில் விருப்ப ஓய்வுபெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

அவரது தந்தை திரு அ. ராமசாமி சிங்கப்பூரில் ‌‌ஸ்ரீ ராதாருக்மணி விலாஸ் புக்டிப்போ என்ற கடை 1922இல் தொடங்கி நடத்தி வந்தார். தொடக்கத்தில் நூல்களையும் வீட்டு உபயோகப் பொருட்களையும் விற்ற அந்தக் கடை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜவுளிக்கடையானது. கண்ணபிரானுக்கு புத்தகங்கள் அப்படிதான் அறிமுகம் ஆயின. அச்சில் வந்த அவரது முதல் சிறுகதையான 'மூத்தபிள்ளை' 1958இல், அவரது பதினைந்தாம் வயதில் தமிழ் முரசில் வெளிவந்ததது. தொடர்ந்து 44 ஆண்டுகள் புனைவு இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். 63 சிறுகதைகளும் மூன்று குறுநாவல்களும் எழுதினார். இக்காலகட்டத்தில் ஐந்து கதை நூல்களை சென்னை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டது. பின்னர் கட்டுரை இலக்கியத்தில் அவரது கவனம் திரும்பியது. சிறுகதை இலக்கியக்கூறுகள், இலக்கியத் திறனாய்வுகள், சிங்கப்பூர் தமிழ் இலக்கியம், மலேசியத் தமிழ் இலக்கியம், தமிழகத் தமிழ் இலக்கியம், நூல் ஆய்வு, அறிமுகம், அணிந்துரை உள்ளிட்ட துறைகளில் 2022 வரையில் கிட்டத்தட்ட 200 கட்டுரைகளை எழுதியுள்ளார். 2018லிருந்து தமது எழுத்துகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.  2021இல்  ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார்.

இலக்கியப் பணி

பாங்காக்கில் 1990ஆம் ஆண்டு தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி ஸிரிந்தோனிடம் தென்கிழக்காசிய எழுத்து விருதைப் பெறுகிறார் இராம கண்ணபிரான்

எழுத்தாளர் அகிலன் 1975இல் சிங்கப்பூருக்கு வந்துபோது, அமைக்கப்பட்ட அகிலன் வரவேற்புக் குழு உறுப்பினராக இராம கண்ணபிரானின் பொது இலக்கியப் பணி தொடங்கியது. 1976ஆம் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் எழுத்தாளர் எழுத்தாளர் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான  இராம.கண்ணபிரான், கழகத்தின் முதல் செயலவை உறுப்பினராக ஈராண்டுகள் பங்காற்றினார். 1975இல் சிங்கப்பூர் இலக்கியக் களத்தை அமைத்த பத்து எழுத்தாளர்களுள் இராம.கண்ணபிரானும் ஒருவர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை 1977ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய ஆய்வரங்கத்தில் சிங்கப்பூரில் சிறுகதை என்ற தலைப்பில் முதல் ஆய்வுக் கட்டுரையைப் படைத்தார். தொடர்ந்து சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

இராம கண்ணபிரான்

சிங்கப்பூர்  தேசியப் பல்கலைகழகத்தின் கலைகள் மையத்தின் (NUS Centre For the Arts) குழு உறுப்பினராக 1990களின் இறுதியில் செயலாற்றினார். மையத்தின்  புத்தாக்க கலைப் பயிற்சித் திட்டத்தில் (Creative Arts Programme) 1996 முதல் 2001 வரை பயிலரங்குகளை நடத்தியுள்ளார்.  இலக்கிய  அமைப்புகளிலும் இலக்கியப் பயிலரங்குகளை நடத்தியுள்ளார். நூலகம் உள்ளிட்ட சிங்கப்பூரின் நான்கு மொழி இலக்கியங்களை ஆங்கிலத்தில் மையம் வெளியிட்ட   'சிங்கா ' தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்டவற்றில்  உதவியுள்ளார். சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் (National Arts Council, Singapore) 1991ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது முதல் அதன் ஆலோசனைக் குழு, வளக் குழு, நாடக பரிசீலனை ஆய்வுக் குழு, சிங்கப்பூர் எழுத்தாளர் விழா ஏற்பாட்டுக் குழு ஆகியவற்றில் 21 ஆண்டுகள் அங்கத்தினராக முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளார். சிங்கப்பூர் எழுத்தாளர் விழாக்களில் பங்கேற்றிருக்கும் இவர், சிங்கப்பூரைப் பிரதிநிதித்து டெல்லி, ஹைதராபாத் எழுத்தாளர் விழாக்களிலும் பங்கேற்றுள்ளார்.  சிங்கப்பூர் இலக்கிய, சமூக அமைப்புகள் பலவற்றுக்கும் ஆலோசராகவும் ஆதரவாளராகவும் பல ஆண்டு காலம் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்  இராம.கண்ணபிரான்.

இலக்கிய இடம்

சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் மூத்த எழுத்தாளராகக் கொண்டாடப்படும் இவரது எழுத்துகள் மரபு சார்ந்த அறவிழுமியங்களை முன்வைப்பவை. "கையில் பிரம்புடன் வகுப்புக்கு வந்து மேஜைமேல் தட்டி ‘அமைதி! அமைதி!’ என்று கூவிவிட்டு பேசத்தொடங்கும் ஆசிரியரின் குரலில் அமைந்த கதைகள் இவை. சிங்கப்பூரின் ஒருகாலகட்டத்தின் வாழ்க்கைச்சிடுக்குகள் அறியாமலேயே வெளிப்பட்ட கதைகளைக்கொண்டு இத்தொகுப்புகளை இலக்கியவரலாற்றில் இடம்பெறச்செய்யமுடியும்," என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அயோவா திட்டத்தில் பங்கேற்று சிங்கப்பூர் திரும்பிய இராம கண்ணபிரானுக்கு 26.1.1989ல் சிங்கப்பூர் அமெரிக்கத் தூதரகம் பைன்ட்ரீ கிளப்பில் அளித்த விருந்தின்போது. இராம கண்ணபிரானுடன் (இடமிருந்து இரண்டாவது) தூதரகத்தின் அன்றைய கலாசார துறை அதிகாரி திரு ரிச்சர்ட் வான், இயக்குநர் (USIS) திரு ரிச்சர்ட் கோங், அமெரிக்க நடிகை டெஸ் ஹாபர்.
இராம கண்ணபிரான் தமது இல்லத்தில் 2017

விருதுகள்

  • 1982 - 'இருபத்தைந்து ஆண்டுகள்' நூலுக்கு சிங்கப்பூர்த் தேசியப் புத்தக மேம்பாட்டு மன்றத்தின் முதல் பரிசான புத்தக விருது
  • 1988- சிங்கப்பூரைப் பிரதிநிதித்து, அமெரிக்காவின் அயோவா அனைத்துலக இலக்கியப் படைப்பாக்கத் திட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு மூன்று மாதங்கள் தங்கியிருந்தபோது, ‘பீடம்’ என்னும் குறுநாவலை எழுதிமுடித்தார். அப்பணிக்காக அயோவா பல்கலைக் கழகம் இவருக்கு, ‘HONOURARY FELLOW IN WRITING’ என்னும் கௌரவ இலக்கிய விருதை அளித்தது.
  • 1990- தாய்லாந்தின் தென்கிழக்காசிய எழுத்தாளர் விருது
  • 1997- சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகக் கலை மையத்தின் ‘மாண்ட் பிளாங்’ இலக்கிய விருது 1998- சிங்கப்பூர்த் தேசியக் கலை மன்றத்தின் இலக்கியத்திற்கான கலாச்சாரப் பதக்கம்
  • 2004- சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருது
  • 2007- சிங்கப்பூர்த் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் பாரதியார் - பாரதிதாசன் இலக்கிய விருது 2013- சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் கணையாழி விருது
  • 2022- சிங்கப்பூர் மீடியாகார்ப் தொலைக்காட்சி தமிழ்ச் செய்தியின் வாழ்நாள் சாதனையாளர் விருது

நூல் பட்டியல்

கதைகள்
  • இருபத்தைந்து ஆண்டுகள் (சிறுகதைகள், சென்னைத் தமிழ்ப் புத்தகாலயம், 1980, சிங்கப்பூர்க் கிரிம்சன் ஏத் பதிப்பகம், 2015)
  • உமாவுக்காக (சிறுகதைகள், சென்னைத் தமிழ்ப் புத்தகாலயம், 1980)
  • வாடைக் காற்று (சிறுகதைகள், சென்னைத் தமிழ்ப் புத்தகாலயம், 1981)
  • சோழன் பொம்மை (சிறுகதைகள்,சென்னைத் தமிழ்ப் புத்தகாலயம், 1981)
  • பீடம் (குறுநாவல், சென்னைத் தமிழ்ப் புத்தகாலயம், 1992)
  • வாழ்வு (சிறுகதைகள், சிங்கப்பூர்க் கிரிம்சன் ஏத் பதிப்பகம், 2015),
  • அமைதி பிறந்தது (சிறுகதைகள், சிங்கப்பூர்க் கிரிம்சன் ஏத் பதிப்பகம், 2018)
  • இராம. கண்ணபிரான் கதைகள்  (1958-1992) (2021)
கட்டுரை
  • சிறுகதை-கூறுகளும் செப்பனிடுதலும் (2021)
  • நூல் அணிந்துரைகள் (2021)
  • வானொலியில் நூல் அறிமுகங்கள் (2021)
  • சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் (2021)
  • அறம் பழுத்த வாழ்வு (2021)
  • இராம.கண்ணபிரான் கதைகள்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.