being created

இரட்டைமலை சீனிவாசன்

From Tamil Wiki
Revision as of 17:31, 27 March 2024 by Ramya (talk | contribs) (Created page with "இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945) அரசியல், சமூக சிந்தனையாளர், அரசியல்வாதி, வழக்கறிஞர், செயற்பாட்டாளர், இதழியலாளர். பறையர் மகாஜன சபையைத் தோற்றுவித்தார். == வாழ்க்கைக்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945) அரசியல், சமூக சிந்தனையாளர், அரசியல்வாதி, வழக்கறிஞர், செயற்பாட்டாளர், இதழியலாளர். பறையர் மகாஜன சபையைத் தோற்றுவித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இரட்டைமலை சீனிவாசன் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்ற சிற்றூரில் இரட்டைமலைக்கு ஜூலை 7, 1859 பிறந்தார். கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை காரணமாக இவரது குடும்பம் அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர். அயோத்திதாசரின் முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார்.

தனிவாழ்க்கை

இரட்டைமலை சீனிவாசன் 1887-ல் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர். நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890-ல் சென்னைக்கு வந்தார்.


ஆதி தமிழர் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையன் (இதழ்) என்ற திங்கள் இதழையும் நடத்தியவர்.



வறுமை காரணமாக பள்ளிக் கல்வியோடு இவர் படிப்பை முடித்துக் கொண்டார்.


பறையர் மகாசன சபை

1891-இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893-1900 வரை 'பறையன்' என்ற திங்கள் இதழை நடத்தினார். டிசம்பர் 1, 1891-ல் அயோத்திதாசப் பண்டிதர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 1893-ல் அதை ஆதிதிராவிட மகாசன சபை எனப் பெயர் மாற்றி பதிவும் செய்தார்.


தென் ஆப்பிரிக்கப் பயணம் இரட்டைமலை சீனிவாசன் 1900-ஆம் ஆண்டில் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார்.

இவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916-இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனை ஒட்டி 1917-இல் ஆதி திராவிட மகாசபை எம். சி. இராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது. 1921இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பினார்.

சட்டசபை உறுப்பினர் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920 இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்கு ஆதி திராவிடரில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். (1937 வரை ஓர் அவை மட்டுமே இருந்தது. 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டன) இரண்டாவது தேர்தலுக்குப் பின் 19.11.1923-இல் இரட்டைமலை சீனிவாசன், எல். சி. குருசாமி உள்ளிட்ட 10 பேர் (பட்டியல் சாதியினர்) சட்டசபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். 1920 முதல் 1936 வரை ஆதி திராவிடர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. எல்லா நிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.

சட்டமன்ற செயல்பாடுகள் 22.08.1924-இல் சட்ட சபையில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்டது.

(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,

(ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம்மட்டிலும், ஆதி திராவிடர் வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், அரசின் கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத் துறைகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது. – சி.பி.காட்டோஸ் அரசுச் செயலாளர் [1]

இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939-இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் வாழ்வியல்(சிவில்) உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.

20.01.1922 இல் எம். சி. இராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் 25.03.1922-இல் பறையர்,பள்ளர் மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார்.[2] உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.

பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் ஆதிதிராவிடர் வசிக்கும் தெருவிற்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – ஆதிதிராவிடர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல். சி. குருசாமியும் முன் வைத்தார்.[3] இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், தெலுங்கு மொழி தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.[4]

இரட்டைமலை சீனிவாசன் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் உரையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை 06.02.1925 அன்று தொடங்கியது. ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்தினார். இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார். எம். சி. மதுரை பிள்ளை, சாமி சகஜானந்தம் ஆகிய இருவர் மட்டும் சட்டசபையில் தமிழிலேயே பேசினார்கள்.

மது ஒழிப்புத் தீர்மானம் இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கிய தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதாக சீனிவாசன் கருதினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929-இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது.[5]

ஆலய நுழைவுத் தீர்மானம் ப. சுப்பராயன், 1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில் ஆதிதிராவிடர்களை கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார். இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள், ஆதிதிராவிடர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19 வாக்குகள் நடுநிலையாகவும் இருந்தது. எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்துக்களின் சமய நம்பிக்கைகளை பாதிப்பதாகக் கூறி, இந்தியாவின் தலைமை ஆளுனர் (கவர்னர் ஜெனரல்) ஒப்புதல் அளிக்காததால் இத்தீர்மானத்துக்கு சட்ட ஏற்பு கிட்டவில்லை.[6]

ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 29.01.1928இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசனைத் தலைமை ஏற்கும்படி வி. ஜி. வசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி. ஐ. முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிகளுக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி. மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என். சிவராஜ் சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும். இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும். உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. 1928இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது. மதுரை பிள்ளை வரவேற்புரையில் பச்சையப்பன் கல்விக் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.)

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பு 1930–32களில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் இவர், அம்பேத்கருடன் ஆதிதிராவிட மக்களின் பிரதிநிதியாகச் சென்று கலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் தனக்கிருந்த நட்பைக் கொண்டு இலண்டனில் காந்தியுடன் நேரில் சந்தித்துப் பிரச்சினையைச் சுமூகமாக முடித்துவிட முயன்றார். ஆனால் பலன் இல்லை. அம்பேத்கருடன் இணைந்து காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். கடைசி வரையில் அம்பேத்கருடனும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினருடனும் நட்புணர்வுடன் செயல்பட்டு வந்தார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் ஆதிதிராவிட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், ஆதிதிராவிட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் தயாரித்துக் கொடுத்த ஆவணம், ஆதிதிராவிட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத் தருவதாக அமைந்திருந்தது. இரட்டைமலை சீனிவாசனை வட்டமேசை மாநாட்டிற்கு அழைத்துச் சென்று தம்மைப் புறக்கணித்து விட்டார் என்ற கோபத்தில் எம். சி. இராசா, அம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தின்போது இந்து மகா சபைத் தலைவர் மூஞ்சேவுடன் சேர்ந்து கொண்டும் காந்திக்கு ஆதரவாகவும் செயல்பட்டார்.

மதமாற்றக் கருத்து அம்பேத்கர் 1935-இல் தான் மதம் மாற வேண்டும் என அறிவித்தபோது இரட்டைமலை சீனிவாசன் ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார்.

மாறுபட்ட அணுகுமுறை இரட்டைஇலை சீனிவாசனின் அரசியல் பயணத்தைக் கவனிக்கிறபோது அவர் பல்வேறு நிலைப்பாடுகள், ஆளுமைகள் சார்ந்து ஊடாடிவந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒடுக்கப்பட்டோரின் சமயம்குறித்து அவருடைய காலத்தின் பிற தலைவர்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை இரட்டைமலை சீனிவாசன் கொண்டிருந்தார். அயோத்தி தாசர் பவுத்தம் தழுவ உதவிய கர்னல் ஆல்காட்டை 1880-களிலேயே சந்தித்து உரையாடிவந்தபோதிலும், சீனிவாசன் பவுத்தம் தழுவவில்லை. பின்னர், அம்பேத்கரோடு தொடர்பு கொண்டிருந்தபோதும் அவருடைய மதமாற்றம் பற்றிய கருத்தோடு சீனிவாசன் இணக்கம் கொள்ளவில்லை. ஆனாலும், ஒடுக்கப்பட்டோரின் ஆன்மிக மரபுகளைத் தேடுவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இதன்படி, பின்னாளில் ஆலயப் பிரவேசம் நடந்தபோது பல்வேறு கோயில்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை எடுத்துக்காட்டி, ஆலயப் பிரவேசத்தை ஆதரித்தார். திருவாரூர் தியாகராஜ பெருமாள் கோயிலில் தியாகசாம்பான் வழிவந் தோர்க்கென்று அளிக்கப்பட்ட உரிமைகள், கும்ப கோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைப் பற்றியெல்லாம் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

1900-ல் சீனிவாசன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அவர் இந்தியாவில் இல்லாத காலத்திலும் அவர் தொடங்கி விட்டுச்சென்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. 1920-களில் இந்தியா திரும்பினார். இந்தக் காலத்தில் நீதிக் கட்சியினரின் தொடர்பு அவருக்கு இருந்தது.


அரசியல் வாக்கை

சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

இரட்டைமலை சீனிவாசன் 1939 இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ”ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30 பக்க நூல் ஒன்றை வெளியிட்டார்.

விருதுகள்

  • இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு ‘ராவ்சாகிப்’, ‘திவான் பகதூர்’, ‘ராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்தது.
  • திரு.வி. கல்யாணசுந்தரனார்‘திராவிடமணி’ எனும் பட்டம் வழங்கினார்.

மறைவு

இரட்டைமலை சீனிவாசன் செப்டம்பர் 18, 1945-ல் பெரியமேடு பகுதியில் தன் 87-ஆம் வயதில் காலமானார்.

நினைவு

இந்திய நடுவண் அரசு, 15.08.2000 இல் இரட்டைமலை சீனிவாசனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்புச் செய்தது.

நூல் பட்டியல்

  • ஜீவிய சரித்திர சுருக்கம்

உசாத்துணை

  • இரட்டைமலை சீனிவாசன் உடனான அம்பேத்கரின் நட்பு - ஒரு சிறப்புப் பார்வை:



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.