under review

இமைக்கணம் (வெண்முரசு நாவலின் பகுதி - 17)

From Tamil Wiki
Revision as of 14:34, 26 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)
இமைக்கணம் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 17)
இமைக்கணம் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 17)

இமைக்கணம் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 17) கீதையின் மறு ஆக்கம். மகாபாரத மாந்தர்கள் ஒவ்வொருவரின் வழியாகக் கீதையின் ஒவ்வொரு யோகங்களும் விவரிக்கப்படுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் தனக்கேயுரிய புனைவு நேர்த்தியால் கீதையை, அதன் சாரத்தை ஒரு கனவுநிலையில் இந்த இமைக்கணத்தில் மிகச் சுருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். ‘இமைக்கணம்’, எக்காலத்துக்கும் பொதுவான, எக்காலத்திலும் அழியாத பேரறத்தைப் பற்றிப் பேசுகிறது. அந்தப் பேரறமே அகவிடுதலைக்கான ராஜபாட்டை.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் 17ஆம் பகுதியான ‘இமைக்கணம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் மார்ச் 2018 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மே 2018இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

இமைக்கணத்தைக் கிழக்கு பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

இதுவரை ‘வெண்முரசு’ நாவலில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து முதன்மைக் கதைமாந்தர்களின் உள்ளத்திலும் வாழ்நாள் முழுக்க அலைவுறும் வெளிப்படுத்தமுடியாத வினாக்களுக்கெல்லாம் விடையளிக்கும் வகையில் இந்த இமைக்கணத்தில் காட்சிகளை அமைத்துள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். அந்த வினாக்கள் அனைத்தும் முழுமெய்மையை நோக்கியனவாகவே உள்ளன. அந்த வினாக்களை எழுப்புவது மானுடராக இருந்தாலும் அவற்றுக்கு விடைகளை அளிப்பது இறைவன். மானுடரின் வினாக்களை யமன் தனக்குள் ஏற்றிக்கொண்டு, அவற்றைப் பற்றி விரிவாக இறைவனிடம் உரையாடி விடைகளைப் பெறுவதாக ஒரு நாடகீயமாகவே உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

தருக்க உரையாடல்கள் இறுதியாகத் தத்துவத்தில் நிலைபெறுகின்றன. அந்தத் தத்துவம் மானுடரின் உள்ளத்தை முழுமெய்மையை நோக்கி நகர்த்துகிறது. மானுடர் தன்னுடைய உலகவாழ்வில் தான் இயற்றுவதும் எய்துவதும் எவை என்பன குறித்து முழுதறிவுபெறுகிறார். அதுவே, அவர்களுக்கான விடுதலையாக அமைகிறது. தன் வினாக்களிலிருந்து விடுபடுபவனே விடுதலை பெற முடியும். அந்த விடுதலைக்கான களமாகத்தான் இந்த ‘இமைக்கணம்’ உள்ளது.

யமன் தனக்குள் பொங்கிய வினாக்களுக்கு விடைதேடி இளைய யாதவர்  வடிவில் இருக்கும் திருமாலிடம் செல்கிறார். அவர் தன்னுடைய வினாக்களை நேரடியாகக் கேட்காமல் தன்னைப் போலவே உலகில் அகவினாக்களால் பித்தேறி, நிம்மதியற்று அலையும் மானுடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் உருவில் கலந்து, அவர்களின் கனவுகளின் வழியாக இளைய யாதவரைச் சந்திக்கிறார். கர்ணன், பீஷ்மர், சிகண்டி, விதுரர், கிருஷ்ண துவைபாயனன் (வியாசர்), யுதிஷ்டிரர் மற்றும் திரௌபதி ஆகிய மானுடர்களை யமன் தேர்ந்தெடுக்கிறார். திரௌபதியின் உருவினைத் தான் ஏற்கும்போது யமன் யமியாக மாறிக்கொள்கிறார். இந்த மானுடர்களின் அகவினாக்கள் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வை உள்ளடக்கியதாகவே உருப்பெற்றுள்ளன. அதனால்தான், இளைய யாதவர் அவற்றுக்கு விடையளிக்கும்போது, அவர்களை அவர்களின் முற்காலத்துக்கும் பிற்காலத்துக்கும் காலத்தைக் கலைத்து அழைத்துச் செல்கிறார்.

இமைக்கணம் பன்னிரண்டு பகுதிகளாக விரிந்துள்ளது. ‘கொலையைத் தொழிலாகச் செய்யும் தென் திசைத் தெய்வமான யமனை அறத்தின் இறைவனாகக் கருதுவது எப்படி?’ என்ற வினாவோடு துவங்குகிறது இமைக்கணம். திரேதாயுகத்தில் இறப்பு நின்றுவிட்டதை, தியானிகன் என்னும் புழு, பிரபாவன் என்னும் சிட்டுக்குருவியுடன் ஒரு நாள் திடீரென்று உணர்ந்திட, அதை மற்ற உயிர்களும் அறியச் செய்ததும் அனைத்து உயிர்களும் பெரும் கொண்டாட்டத்தில் திளைக்கின்றன. கொண்டாட்டமும் விடுதலையும் வெகு காலம் நீடிக்க நீடிக்க ஓர் அயர்ச்சி அடைவதைப் போல இறப்பு நின்றுவிட்டதால் வாழ்வுக்கும் பொருளே இல்லாமல் போனதை உணர்ந்து திகைக்கின்றன. இறப்பை அகற்ற உருவான பசி இல்லாமல் போனவுடன், பசியை அடிப்படையாகக் கொண்டுள்ள மொத்த உலக இயக்கமும் நின்றுவிட, உயிர்களின் உறுப்புகள் தனக்கான அர்த்தத்தை இழக்க, அவையும் அவற்றின் இயக்கத்தை நிறுத்தத் தொடங்குகின்றன. ‘இறப்பு இன்றி உலக இயக்கமும் இல்லை’ என்பதை உணர்ந்த தியானிகனும் பிரபாவனும் அதற்கான காரணத்தை அறிய நாரதரின் உதவியை நாட, உயிர்களின் எஞ்சிய தவ வலிமையின் மூலம் நாரதர் யமனைச் சந்தித்து காரணத்தை வினவுகிறார்.

ஸ்ரீராமர் அவதாரத்தை முடித்து வைத்ததில், தனது அறம் பிழையானதாகக் குறிப்பு இருப்பதால், தான் இறப்புத் தொழிலை நிறுத்தியதாக யமன் கூறுவதோடு, பாசம் என்னும் மாயையியிலிருந்து விடுபடாமல் எமனுலகம் அடைந்த ராமரால், மாயை குறித்தும், அறம் குறித்தும் எண்ணற்ற வினாக்கள் தன்னுள் எழுவதாகவும் கூறுகிறார். அவ்வினாக்களுக்கான விடை, பெருமாளின் மறு அவதாரத்தில் ஸ்கண்ணன் மூலமே கிடைக்கும் என்பதை நாரதர் உணர்த்த, தான் காத்திருக்க முடிவெடுத்து தொழிலை தொடர்கிறார் யமன். மஹாபாரத காலத்தில் பெரும் போர் முற்றிப் போகும் சூழலில், தான் கொண்ட உறுதியைப் பேண இளைய யாதவர் நைமிசாரண்யம் என்னும் காலம் கடந்த காட்டில் தனித்திருக்க, அதுவே தன் ஐயங்களைத் தீர்க்கும் தருணம் என எமன் வருகிறார்.

மானுடர்களின் உலகியல் அனுபவங்களால் உருவாகாத வினாக்கள் பயனற்றவை என உணர, இளைய யாதவரை சந்திக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மஹாபாரதக் கதைமாந்தர்களின் உள்ளத்தில் புகுந்து, அவரவர் உருவத்திலேயே வந்து, அவர்கள் வாழ்வின் அனுபவங்களால் எழுந்த வினாக்களை இளைய யாதவரிடம் கேட்கிறார் எமன். கர்ணன், பீஷ்மர், சிகண்டி, தருமன், வியாசர், திரெளபதி, அர்ஜூணன் எனப் பல்வேறு நபர்களின் வடிவில் புகுந்து வினாவிய யமன் இறுதியில், தன் மகன் சுகர் வடிவில் சென்று முழுத் தெளிவு பெறுகிறார்.

இந்தப் பத்து நிலைகளில் யமன் அறக்குழப்பபத்திலிருந்து முழுமையாக விடுபட்டு யம உலகிற்கு மீண்டு செல்கிறார். நாவலின் இறுதிப்பகுதியான இறைப்பாடலில், முந்தைய பத்து நிலைகளில் கூறப்பட்டவைகள் தொகுக்கப்பட்டு, பகவத்கீதையாக அர்ஜூணனுக்கு ஸ்ரீகிருஷ்ணனால் உரைக்கப்படுகிறது. மாயையை வெறுக்காமல் மதித்தால் நலமாக வாழ முடியும் என்பதை அறியமுடிகிறது. எளியோர், ஆள்வோர், அறிஞர், முனிவர் எனப் பலதரப்பட்டோருக்கான அறிவையும் மெய்மையையும் அவரவருக்கேற்பக் கண்டடையும் வாய்ப்பை இமைக்கணம் வழங்குகிறது.

இதில் நிகழும் உரையாடல்கள் பல இறைவன்-ஆன்மா ஆகியவற்றுக்கு இடையில் நிகழ்வதாகவே கருத இடமுள்ளது. அந்த உரையாடல்கள் தருக்கமாகத் துவங்கி, தத்துத்தைக் கண்டடைந்து, முழுமெய்மையை நோக்கிச் சென்று, அகவிடுதலையை அளிக்கின்றன. சிண்டி, சுதாமன் (குசேலன்) பற்றியும் பாண்டவர்களின் படை ஒருக்கம், குடிமக்களைப் போர்க்களத்தில் நிறுத்தும் பீமனின் முயற்சி குறித்தும் இதில் பேசப்பட்டுள்ளன. ‘இமைக்கணம்’ என்ற இந்தப் பகுதியில் ‘மரணம்’ குறித்தும் ‘அகவிடுதலை’ பற்றியும் பேசப்பட்டுள்ளது. இயற்றுதல் ‘மானுடக் கடமை’ என்றும் எய்துதலே ‘அகவிடுதலை’ என்றும் காலத்தின் போக்கில் தன்னை ஒப்புக்கொடுத்து, ஊழின் பெருவிசைக்கு எதிர்நிற்காமல் இருத்தலே ‘முழுவாழ்வு’ என்றும்  நாம் இந்த ‘இமைக்கணம்’ வழியாகப் பொருள்கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல, ‘இறைவனேயானாலும் மனிதராகப் பிறந்துவிட்டால் மரணம் உறுதி’ என்ற நிலையாமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. இராமனின் மரணம் பற்றிப் பேசும்போது, இயல்பாகவே இளைய யாதவரும் இறப்பார் என்பதை வாசக மனம் ஏற்கத் தொடங்கிவிடுகிறது.

ஒட்டுமொத்த ‘வெண்முரசு’ நாவல் கதை குருக்ஷேத்திரப் போரை நோக்கி நகர்கிறது. போருக்கு முன் அழிவிற்குக் காரணமாகப் போகிறவர்களின் மனமயக்கத்தைத் தீர்ப்பதாகவும் இந்திய மெய்மையை மெய்யுசாவல் வழியாக அறியச் செய்வதற்காகவும் இந்த இமைக்கணம் பயன்படுகிறது. ‘இமைக்கணம்’, எக்காலத்துக்கும் பொதுவான, எக்காலத்திலும் அழியாத பேரறத்தைப் பற்றிப் பேசுகிறது. அந்தப் பேரறமே அகவிடுதலைக்கான ராஜபாட்டை.

கதை மாந்தர்

இளைய யாதவரும் யமனும் முதன்மைக் கதைமாந்தர்கள். நாரதர், தியானிகன், பிரபாவன், தர்மர், அர்சுணன், திரௌபதி, வியாசர், சிகண்டி, சுதாமன் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

இணைப்புகள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.