இந்து பாக சாஸ்திரம்

From Tamil Wiki
Revision as of 22:40, 20 October 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சமையல் கலை குறித்துத் தமிழில் முதன் முதலில் அச்சான நூல் ‘இந்து பாக சாஸ்திரம்’ (மஹாராஷ்டிர, கர்நாடக, ஆந்திர மற்றும் திராவிட இந்து பாக சாஸ்திரம்) இதனை எழுதியவர் சேலத்தைச் சேர்ந்த தொ.கி. ராமச்சந்திர ராயர். இந்த நூலின் முதல் பதிப்பு 1891-ல் வெளிவந்தது. இந்த நூலுக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து பல பதிப்புகள் வெளியாகின.

பதிப்பு, வெளியீடு

சமையல் கலை குறித்த ‘இந்து பாக சாஸ்திரம்' நூல், சேலத்தைச் சேர்ந்த தொ.கி. ராமச்சந்திர ராயரால் எழுதப்பட்டது. இதன் முதல் பதிப்பு 1891-ல் வெளிவந்தது. நூலின் விலை ரூ: 2.00. படங்களும் இடம் பெற்றிருந்தன. 2000 படிகள் அச்சிடப்பட்டு ஒரு சில வருடங்களிலேயே அனைத்துப் பிரதிகளும் விற்பனையானதால், இரண்டாம் பதிப்பு 1900-த்தில் வெளியானது. சக்ரவர்த்தி மகுடாபிஷேகப் பதிப்பாக மூன்றாம் பதிப்பு 1912-ல் வெளியாகியுள்ளது. இதன் நான்காம் பதிப்பை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், 1922-ல் வெளியிட்டனர். இந்த நூலுக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து இந்த நூலைப் பலரும் அச்சிட்டு வெளியிட்டனர். 1952 வரை ஆறு பதிப்புகளுக்கு மேல் இந்த நூல் வெளிவந்திருகிறது.

இந்த நூலை முன்னோடியாகக் கொண்டு ‘மிலிடேரி பாக சாஸ்திரம்’, ‘நளவீமபாக சாஸ்திரம்’, ‘ஹிந்துமத ஸம்பிரதாய பாக சாஸ்திரம்’, ‘இந்துக்களின் அனுபோகபாகமாகிய சைவபாகசாஸ்திரம்’, ‘சரபேந்திர பாக சாஸ்திரம்’, ‘சைவபாகசாஸ்திரம்’,  அன்னிய பதார்த்தமென்னும் பெரிய மிலிடெரி பாகசாஸ்திரம்’, ‘நளவீமபாகசாஸ்திரமென்னும் பெரிய பாகசாஸ்திரம்’, ‘பதார்த்த ருசிகர சிந்தாமணி’, ‘மிலிடேரி இந்து பாகசாஸ்திரம்’, ‘போஜன குதூகலம்’, ‘சிவேந்திர பாகசாஸ்திரம்’ எனப் பல சமையற்கலை சார்ந்த நூல்கள் அடுத்தடுத்து வெளியாகின.