இசைநுணுக்கம்

From Tamil Wiki
Revision as of 19:18, 21 September 2022 by Subhasrees (talk | contribs) (இசைநுணுக்கம் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இசைநுணுக்கம் என்பது இசை இலக்கணம் குறித்த இடைச்சங்க காலத்து நூல். சிகண்டி என்னும் முனிவர் இயற்றியது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை; பிற நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சில பாடல்களே கிடைக்கின்றன.

ஆசிரியர்

இந்த இசைத்தமிழ் இலக்கண நூலின் ஆசிரியர் சிகண்டி, அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களில் ஒருவர். அநாகுலன் என்ற பாண்டிய மன்னனுக்கும் திலோத்தமை என்னும் தேவருலகப் பெண்ணுக்கும் பிறந்த சாரகுமாரன் என்பவர் இசை குறித்து அறிவதற்காக இசைநுணுக்கம் என்னும் நூல் சிகண்டி முனிவரால் இயற்றப்பட்டது என சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரைப்பாயிரம் குறிப்பிடுகிறது.

”இனித் தேவவிருடியாகிய குறுமுனி பாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டி என்னும் அருந்தவ முனி, இடைச்சங்கத்து அகாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேரேறி விசும்பு செல்வோன் திலோத்தமை என்னும் தெய்வ மகளைக் கண்டு தேரிற் கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியா நிற்கத் தோன்றினமையிற் சார குமாரன் என, அப்பெயர் பெற்ற குமாரன் இசையறிதற்குச் செய்த இசைநுணுக்கம்” - சிலப்பதிகார உரைப்பாயிரம், அடியார்க்கு நல்லார்.

இறையனார் அகப்பொருள் என்னும் நூலுக்கு எழுதிய உரைப்பாயிரத்தில்

“அவர்க்கு நூல்‌ அகத்தியமும்‌ தொல்காப்பியமும்‌ மாபுராணமும்‌, இசைநுணுக்கமும்‌ பூத புராணமும் என இவை என்ப” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பௌத்த நூல் தரும் தகவல்கள்

சிகண்டி என்பவரைப் பற்றி பௌத்த நூல்களில் ஒரு கதை வருகிறது:

சக்கன் (இந்திரன்) உடைய தேர்ப்பாகனான மாதலியின் மகன் சிகண்டி. இந்த சிகண்டியை திம்பரு (தும்புரு) என்னும் கந்தர்வனுடைய மகள் பத்தா சூர்ய வச்சசா என்னும் பெண் காதல் கொண்டிருந்தாள்.

பஞ்சசிகா என்னும் பதினாறு வயதுடைய அழகிய கந்தர்வன் இசைக்கலை தேர்ச்சி பெற்றவன். சக்கனுடைய இசைப்புலவனாக இருந்தவன். பத்தா சூர்ய வச்சசா மீது காதல் கொண்டு அக்காதலைப் பற்றி இசைப்பாட்டு ஒன்றை இயற்றி அவளிடம் பாடினான். அதில் புத்தர் பிறந்த சாக்கிய குலத்தின் சிறப்புக் கூறப்பட்டிருந்ததால் தான் காதலித்த சிகண்டியை மணந்து கொள்ளாமல் பஞ்சசிகாவை மணந்து கொண்டாள்.

இந்தக் கதை இசைநுணுக்கம் இயற்றிய ஆசிரியர் சிகண்டி குறித்த தொன்மமா என்பது உறுதியாக இல்லை எனக் குறிப்பிடப்படுகிறது[1].

நூல் அமைப்பு

சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் அடியார்க்கு நல்லார் இசைநுணுக்கத்தில் இருந்து சில பாடல்களை எடுத்து மேற்கோளாகக் கையாண்டிருக்கிறார்.

”வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்

றிந்நான் கெல்லை தமிழது வழக்கே” என்றார் சிகண்டியாருமாகலின் - (வேனிற்காதை-வரி 1 - .சிலப்பதிகார உரைப்பாயிரம், அடியார்க்கு நல்லார்)

”இடைபிங்‌ கலையிரண்டு மேறும்‌ பிராணன்‌

புடைநின்ற பானன்மலம்‌ போக்கும்‌-தடையின்றி

உண்டனகீ ழாக்கு முதானன்‌ சமானன் எங்கும்‌

கொண்டெறியு மாறிரதக்‌ கூறு” எனவும்


”கூர்ம னிமைப்புவிழி கோணாகன்‌ விக்கலாம்‌

பேர்வில்‌ வியானன்‌ பெரிதியக்கும்‌-போர்மலியும்‌

கோபங்‌ கிருகரனாங்‌ கோப்பி னுடம்பெரிப்புத்‌

தேவதத்த னாகுமென்று தேர்” எனவும்‌,


“ஒழிந்த தனஞ்சயன்பே ரோதி லுயிர்போய்க்‌

கழிந்தாலும்‌ பின்னுடலைக்‌ கட்டி-அழிந்தழிய

முந்நா ளதிப்பித்து முன்னியவான்‌ மாவின்றிப்‌

பின்னா வெடித்துவிடும்‌ பேர்ந்து” எனவும்


இசைநுணுக்க முடைய சிகண்டியாரும்‌ கூறினாராகலின்‌” - (அரங்கேற்று காதை, 26ஆம் அடியில் வரும் மேற்கோள் - .சிலப்பதிகார உரைப்பாயிரம், அடியார்க்கு நல்லார்)


இசைப்பாக்களின்‌ வகைபற்றிப்‌ அடியார்க்கு நல்லார்‌ உரையில் விளக்கும்போது,

“பாக்கள் இசைப்பா, இசையளவுபா என இருவகைப்படும்‌. இசையளவுபா விரியால்‌ பத்து வகைப்படும்‌. அவையாவன. செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம்‌, பெருவண்ணம்‌, ஆற்றுவரி, கானல்வரி, விரிமுரண்‌, தலைபோகு, மண்டிலமென. என்னை?

செந்துறை வெண்டுறை தேவ பாணிய்யிரண்டும்‌

வந்தன முத்தகமே வண்ணமே-கந்தருவத்‌

தாற்றுவரி கானல்‌ வரிமுரண்‌ மண்டிலமாத்‌

தோற்று மிசையிசைப்பாச்‌ சுட்டு என்றார்‌ இசைநுணுக்க முடைய சிகண்டியாரென்க” என்கிறார்.

(கடலாடு காதை, 35ஆம் அடியில் வரும் மேற்கோள் - .சிலப்பதிகார உரைப்பாயிரம், அடியார்க்கு நல்லார்)

உசாத்துணை

மறைந்துபோன தமிழ் நூல்கள் - மயிலை. சீனி. வேங்கடசாமி

அடியார்க்கு நல்லார் உரைத்திறன் - டாக்டர் ச. வே. சுப்பிரமணியன் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

அடிக்குறிப்புகள்

  1. மறைந்து போன தமிழ் நூல்கள் - மயிலை. சீனி. வேங்கடசாமி