standardised

ஆலி ஆட்டம்

From Tamil Wiki
Revision as of 12:11, 5 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


ஆலி ஆட்டம்

ஆலி என்பது மூங்கிலையும், காகிதங்களையும் வண்ணம் தீட்டி பூதம் வடிவில் செய்யப்பட்டிருக்கும். இந்த ஆலியை தலையில் மாட்டிக் கொண்டு கலைஞர்கள் ஆடுவதே ஆலி ஆட்டம் எனப்படும். இந்த ஆலி ஆட்டத்தின் துணையாக புலி, கரடி, கிழவி போன்ற வேஷங்களை புனைந்து ஆடுவர். ஆலி ஆட்டம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக நிகழ்கிறது. இக்கலையைக் கோவில் அரங்குகளிலும், பொதுவிடங்களிலும், தெருக்களிலும், தேரோட்டத் திருவிழாவிலும், அரசியல் ஊர்வலங்களிலும், கொடியேற்றம் நிகழும் மைதானங்களிலும் நிகழ்த்துகின்றனர்.

நடைபெறும் முறை

மூங்கிலால் செய்யப்பட்ட ஆலியை அணிந்து ஆடுபவரின் உருவம் வெளியே தெரியாத வண்ணம் நீண்ட பாவாடையால் மூடி ஆடுவர். ஆலி உருவத்தின் தொப்பூழ் பகுதியில் அமைய பெற்ற சிறிய துவாரத்தின் வழியே ஆலி ஆடும் கலைஞர் வெளியே பார்த்துக் கொள்வார்.

ஆலி ஆட்டத்தில் மொத்தம் ஒன்பது கலைஞர்கள் ஆடுவர். இவர்களுள் ஒருவர் ஆட்டக்குழுவின் தலைவர். ஆலி ஆட்டம் ஆடுபவர்கள் இருவர். புலி, கரடி, கிழவி என முறையே மூவர் புனைந்து ஆடுவர். தம்புரு செட், நாதஸ்வரம், ஜால்ரா அடிக்க முறையே ஒவ்வொருவரும் உள்ளனர்.

இந்த கலையை நிகழ்த்தும் கலைஞர்கள் எந்த ஒப்பனையும் செய்வதில்லை. மாற்றாக மூங்கிலால் செய்யப்படும் ஆலி உருவத்திற்கும், அட்டையால் செய்யப்படும் புலி, கரடி உருவத்திற்கும் அலங்காரம் செய்யப்படுகிறது. ஆலி ஆட்டம் ஆடும் கலைஞர்கள் மூங்கில் கூட்டினை தாங்கி ஆடுவதற்கு ஏதுவாக உடல் மெலிந்து இருப்பர். இவர்கள் இசைக் கருவிகளின் தாளத்திற்கு ஏற்ப உடல் வளைத்து ஆடுகின்றனர். வெளிப் பார்வையாளர்களுக்கு பொம்மை உருவங்கள் ஆடுவது போன்று இருக்கும்.

ஆலி ஆட்டத்திற்கு நையாண்டி மேளமே முக்கிய பின்னணி இசையாக உள்ளது. இது போக ஜால்ரா, தம்புரு செட் போன்ற இசைக்கருவிகளையும் பயன்படுத்துகின்றனர்.

கூத்து பயிற்றுமுறை

ஆலி ஆட்டம் பயிற்சி அதிகம் கோரும் சற்று கடுமையான கூத்து. மூங்கில் கூண்டு சரியாதபடி ஆட வேண்டும். மேலும் கூண்டிற்குள் காற்றும் சரியாக புக முடியாத வகையில் அதன் அமைப்பு இருக்கும். எனவே இக்கலையினை நீண்ட கால அனுபவம் வாய்ந்தவரே பயிற்றுவிக்கின்றனர். இவரை மற்றவர்கள் தலைவர் என்றழைக்கின்றனர். இவரே ஆலி உருவங்களையும், பிற இசைக் கருவிகளையும் பாதுகாக்கிறார். அதன் பராமரிப்பு செலவினையும் ஏற்றுக் கொள்கிறார்.

பதினைந்து முதல் இருபது வயது உள்ள இளைஞர்கள் அவர்களின் ஓய்வு நேரங்களுக்கு ஏற்ப பயிற்றுவிக்கப்படுகின்றனர். அதற்கு ஊதியமாக தங்களால் முடிந்த தொகையை தலைவருக்கு கொடுக்கின்றனர். இவர்கள் கூத்திற்கு பெறும் சம்பளம் கூத்து நடக்கும் ஊரின் தொலைவை பொறுத்து அமையும். உள்ளூரிலோ அல்லது அருகில் உள்ள ஊருக்கோ செல்லும் போது பணம் குறைவாக வாங்குவர். ஊர் விழா முடிந்து அளிக்கும் பணத்தை தலைவர் அனைவருக்கும் பகிர்ந்து வழங்குவார்.

ஆலி ஆட்டத்தை தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர் சாதி மக்கள் பெருமளவிலும் பிற சாதியினர் சிறு அளவிலும் நிகழ்த்துகின்றனர்.

நிகழ்த்துபவர்கள்

  • தலைவர் - இவரின் ஆட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.
  • ஆலி வேஷம் அணிந்தவர் - இவரே மூங்கிலால் ஆன ஆலியை அணிந்து ஆடுவார்.
  • புலி, கரடி, கிழவி வேஷம் - இவர் மூவரும் ஆலி ஆட்டத்தின் துணை கலையான புலி ஆட்டம், கரடி ஆட்டம், கிழவி வேஷம் என்னும் ஆட்டத்தை நிகழ்த்துவர்.
  • இசைக் கலைஞர்கள் - நையாண்டி மேளம் வாசிப்பவர் இசைக் கலைஞர்களுள் முக்கியமானவர். இதனுடன் ஜால்ராவும், தம்புரு செட்டும் இசைக்கப்படும்

ஆலி ஆட்டத்தில் பெண்கள் பங்கேற்பதில்லை. ஆண் ஆலி ஆட்டக் கலைஞரே பெண் வேடமிட்டு ஆடுவார்.

அலங்காரம்

ஆலி ஆட்டத்தில் கலைஞர்கள் எந்தவித ஒப்பனையும் செய்வதில்லை. தங்களின் ஆலி, புலி, கரடி பொம்மைக்கு அலங்காரம் செய்கின்றனர்.

நிகழும் ஊர்கள்

இந்தக் கலை தென் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகிறது. கரடிகுளம், புளியங்குடி, சாம்பவர் வடகரை, கடைவால் உருட்டி, சின்னத் தம்பி நாடார் ஊர், வேலப்ப நாடார் ஊர், சேந்தமரம், சுரண்டை போன்ற தென் தமிழக கிராமங்களில் இது நிகழ்த்தப்படுகிறது.

நடைபெறும் இடம்

தேரோட்டம், ஊர்வலம், பேரணி போன்ற நிகழ்ச்சிகளில் அந்த அவை நிறைவு பெறும் வரை ஆடுகின்றனர். ஆலி ஆட்டத்தை புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் நிகழும் கோவில் தேர்த் திருவிழாவின் போது ஆடுகின்றனர். மற்ற அரசியல் அல்லது சமூக நிகழ்வுகளில் ஆடும்போது இவர்கள் நாள் மாதம் பார்ப்பதில்லை. இக்கலையை நான்கு மணி நேரம் வரை நிகழ்த்துகின்றனர்.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

வெளி இணைப்புகள்