ஆலவாய் அழகன்

From Tamil Wiki
Revision as of 19:42, 16 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஆலவாய் அழகன் (1960) ஜெகசிற்பியன் எழுதிய வரலாற்று மிகுபுனைவு நாவல். பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையை சோழர் ஆதிக்கத்தில் இருந்தும் ஹொய்ச்சால படையெடுப்பில...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆலவாய் அழகன் (1960) ஜெகசிற்பியன் எழுதிய வரலாற்று மிகுபுனைவு நாவல். பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையை சோழர் ஆதிக்கத்தில் இருந்தும் ஹொய்ச்சால படையெடுப்பில் இருந்தும் மீட்டு பாண்டிய அரசை உருவாக்கியதைப் பற்றிய நாவல் இது.

எழுத்து,வெளியீடு

ஜெகசிற்பியன் இந்நாவலை 1960ல் குமுதம் வார இதழில் தொடராக எழுதினார். இந்தத் தொடர்கதைக்கு கோபுலு வரைந்த கோட்டோவியங்கள் தமிழில் வரையப்பட்ட மிகச்சிறந்த கதைச்சித்திரங்களாக கருதப்படுகின்றன

வரலாற்றுப் பின்னணி

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொயு 1216 ல் பதவிக்கு வந்தார். அவருடைய அண்ணன் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் சோழப்பேரரசர் மூன்றாம் குலோத்துங்க சோழரின் கீழ் கப்பம் கட்டி சிற்றரசராக இருந்து வந்தார். குலோத்துங்க சோழனுக்கு எதிராக ஒரு போரை தொடங்கிய குலசேகர பாண்டியனை சோழப்படைகள் தோற்கடித்து மதுரையைச் சூறையாடின. அதற்கு பழிவாங்குவதாக சூளுரைத்து மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்கு வந்தான் என்று சொல்லப்படுகிறது.

பதவி ஏற்ற சில ஆண்டுகளிலேயே மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டின் மேல் படையெடுத்தான். நாற்பதாண்டுக்கால மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் சோழநாடு பலவகையிலும் வலுவிழந்திருந்தது. வலங்கை இடங்கை பூசல்கள் மிகுந்து உள்நாட்டுப்போர்கள் நடந்துகொண்டிருந்தன. மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சாவூரையும் உறையூரையும் கைப்பற்றினான். பட்டத்து இளவர்சனாகிய மூன்றாம் ராஜராஜ சோழன் தலைநகர்களை கைவிட்டுவிட்டு தப்பி ஓடினான். சுந்தரபாண்டியன் தஞ்சாவூரிலுள்ள ஆயிரத்தளி என்னும் ஊரில் உள்ள முடிகொண்டசோழபுரம் என்னும் இடத்தில் தனக்கு வீராபிஷேகம் செய்துகொண்டான். சிதம்பரத்தையும் பொன்னமராவதியையும் கைப்பற்றினான். சிதம்பரம் ஆலயத்தில் துலாபாரம் என்னும் எடைக்கு எடை பொன்வழங்கும் வழிபாட்டை நிறைவேற்றினான்

மூன்றாம் குலோத்துங்க சோழன் தன் மருமகனாகிய இரண்டாம் வீரவல்லாளனிடம் உதவி கோரினான். பட்டத்து இளவரசன் வீரநரசிம்மனின் தலைமையில் ஒரு படை சோழநாட்டுக்கு வந்தது. சோழர்களுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தம் செய்துகொண்டாலும் மாறவர்மன் சுந்தர பாண்டியன் மீண்டும் சோழநாட்டின்மேல் படையெடுத்து ஹொய்சாலர்களையும் சோழர்களையும் வென்றான். இவ்வெற்றிச்செய்தி திருக்கோளூர் செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ளது


காரேற்ற தண்டலைக் காவிரி நாணனைக் கானுலவும் தேறேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்த்து தாரேற்ற வெம்படை ஆரியர் தண்டு படத்தனியே போரேற்று நின்ற பெருவார்த்தை இன்னும் புதுவார்த்தையே

உசாத்துணை

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005