second review completed

ஆறுமுக நாவலர்

From Tamil Wiki
Revision as of 16:04, 18 February 2022 by Anandsudha (talk | contribs)
ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழறிஞர், சைவ அறிஞர், தமிழ் & ஆங்கில ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். திருக்குறள் பரிமேலழகர் உரை, நன்னூற் காண்டிகை மற்றும் பல பழந்தமிழ் நூல்களையும் பிழையின்றி பதிப்பித்தார். சைவ சமய சொற்பொழிவுகள் மற்றும் அச்சுப்பணிக்காக நினைவுகூறப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் டிசம்பர் 18, 1822-ல் கந்தப்பிள்ளைக்கும் சிவகாமிக்கும் கடைசி மகனாக ஆறுமுக நாவலர் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை. ஐந்து வயதில் ஏடு தொடங்கினார். சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் மூதுரை முதலிய நீதிநூல்களையும், நிகண்டு முதலிய கருவி நூல்களையும் பயின்றார். சரவணமுத்து புலவர் மற்றும் சேனாதிராச முதலியாரிடம் உயர்கல்வி பயின்றார். தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றார்.

ஆசிரியப்பணி

தாம் பயின்ற யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனில் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார். ஆறுமுகத்தம்பிரான் இவருடைய மாணவர்.

சைவப்பணி

பைபிளை தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சைவம் நலிவுறுவதைக் கண்டு சைவ மதப் பரப்பாளராக ஆனார். எண்ணற்ற சைவக் கட்டுரைகள், துண்டு பிரசுரங்கள், சிறு நூல்களை எழுதினார். பழமையையும், மரபையும் மீட்டெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டார். சிதம்பரத்தில் நவம்பர் 11, 1864-ல் 'சைவப் பிரகாச வித்யாசாலை' என்ற சைவ பாடசாலையைத் தொடங்கினார். போர்ச்சுகீசியரால் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் எனும் பழைமையான சிவபெருமான் திருக்கோயிலை மீண்டும் உருவாக்க முயற்சி செய்தார். சைவ சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். 1875-ல் புலோலியில் 'சைவவித்யாசாலை' நிறுவினார்.

சொற்பொழிவாளர்

வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847-ல் முதல் சொற்பொழிவு ஆற்றினார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு மேற்கொண்டார். நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879-ல் சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை நாளான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றது.

இலக்கிய வாழ்க்கை

ஆறுமுக நாவலர் சரித்திரம்

வள்ளலாரின் அருட்பாவிற்கு எதிராக 'மருட்பா' எழுதினார். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயத்திற்கு விளக்கமாகவும் 24 நூல்கள் எழுதியுள்ளார். 16 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் உரை எழுதிய நூல்களுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலான சிறுவர் இலக்கியமும் அடங்கும்.

‘தமிழ் உரை நடையின் தந்தை’, ‘தமிழ் வசன நடையின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். மேலைநாட்டவர் பயன்படுத்திவந்த முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, வினாக்குறி, வியப்புக்குறி ஆகியவற்றை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்.

பைபிள் மொழிபெயர்ப்பு

ஆறுமுக நாவலரின் தமிழறிவையும் ஆங்கிலப் புலமையையும் கண்ட பெர்சிவல் பாதிரியார் பைபிளை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை அளித்தார். யாழ்ப்பாணத்தில் இந்தப் பணி நடந்து கொண்டிருந்தது. சென்னை கிறிஸ்தவ சபையினரும் இதே பணியை செய்து கொண்டிருந்ததை கேள்வியுற்று எந்த மொழிபெயர்ப்பு சிறந்தது என்பதை நிறுவ ஆறுமுக நாவலருடன் பெர்சிவல் பாதரியார் சென்னை வந்தார். மழவை வித்துவான் மகாலிங்க ஐயர் நடுவராகச் செயல்பட்டு ஆறுமுக நாவலரின் மொழிபெயர்ப்பே சிறந்தது என்ற தீர்ப்பை வழங்கினார்.

பதிப்பாளர்

ஏட்டுச்சுவடிகளை கண்டறிந்து பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். 1849-ல் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் சொந்தமாக 'வித்தியானு பாலனயந்திரசாலை' என்ற அச்சுக் கூடம் நடத்தினார். அது நடத்தமுடியாமல் போகவே சென்னை வந்து அச்சுக்கூடத்தை நிறுவினார். பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் எனப் பலவகையாக 44 நூல்களை பதிப்பித்தார்.

விருதுகள், நினைவகங்கள்

  • திருவாவடுதுறை ஆதினம் நாவலர் என்ற பட்டத்தை வழங்கினார்.
  • ஆறுமுக நாவலரின் நினைவாக இலங்கை அரசு அக்டோபர் 29, 1971-ல் நினைவு அஞ்சல்தலை வெளியிட்டது.
  • நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் நாவலர் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மறைவு

ஆறுமுக நாவலர் டிசம்பர் 5, 1879-ல் (கார்த்திகை 21) வண்ணார்பண்ணையிலுள்ள தம் வீட்டில் காலமானார்.

நூல்கள்

இயற்றி பதிப்பித்த சைவ சமய நூல்கள்
  • சைவ சமய சாரம்
  • சிவாலய தரிசன விதி
  • நித்திய கருமவிதி
  • சிரார்த்த விதி
  • தர்ப்பண விதி
  • குருசிஷ்யக்கிரமம்
  • மருட்பா (போலியருட்பா மறுப்பு)
இயற்றி பதிப்பித்த கிறித்தவமத கண்டன நூல்கள்
  • சிவதூடணப் பரிகாரம்
  • மித்தியாவாத நிரசனம்
  • சுப்பிர போதம்
  • வச்சிரதண்டம்
இயற்றி பதிப்பித்த வசன நூல்கள்
  • பெரியபுராண வசனம்
  • திருவிளையாடற்புராண வசனம்
  • கந்தபுராண வசனம்
  • பெரியபுராண சூசனம்
  • யாழ்ப்பாணச் சமயநிலை
இயற்றி பதிப்பித்த பாட நூல்கள்
  • பாலபாடம் 1
  • பாலபாடம் 2
  • பாலபாடம் 3
  • பாலபாடம் 4
  • இலக்கண வினா விடை
  • சைவ வினா விடை
பதிப்பித்த நூல்கள்
மூலப்பதிப்புகள்
  • வில்லிபுத்தூரார் பாரதம்
  • சேது புராணம்
  • கந்த புராணம்
  • பெரிய புராணம்
  • திருவாசகம்
  • திருக்கோவையார்
  • திருச்செந்தூரகவல்
  • நால்வர் நான்மணிமாலை
  • மறைசையந்தாதி
  • சிதம்பர மும்மணிக்கோவை
  • குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
  • உவமான சங்கிரகம்
  • இரத்தினச் சுருக்கம்
மூலமும் உரையும் கொண்ட பதிப்புகள்
  • நன்னூல் விருத்தியுரை
  • நன்னூல் காண்டிகையுரை
  • தொல்காப்பியச் சூத்திரவிருத்தி
  • சிதம்பரமான்மியம்
  • சிவஞானபோதமும் வார்த்திகமென்னும் பொழிப்புரையும்
  • இலக்கணக் கொத்துரை
  • தொல்காப்பியம் சொல்லதிகாரம்
  • சேனாவரையம்
  • சிவஞானபோத சிற்றுரை
  • சிவராத்திரி புராணம்
  • சிவசேத்திராலய மஹாத்ஸவ உண்மைவிளக்கம்
  • சிவாலய தரிசனவிதி
  • சுப்பிரமணிய போதகம்
  • இலக்கண விளக்கச் சூறாவளி
  • திருக்குறள் பரிமேலழகருரை
  • கொலை மறுத்தல்
  • தருக்க சங்கிரகவுரை
  • அன்னபட்டீயம்
  • பிரயோக விவேகம்
  • திருச்சிற்றம்பலக் கோவையுரை
  • திருக்கோவையார் நச்சினார்க்கினியருரை
  • சூடாமணி நிகண்டுரை
புத்துரைப் பதிப்புகள்
  • ஆத்திசூடி
  • கொன்றைவேந்தன்
  • நன்னெறி
  • நல்வழி
  • வாக்குண்டாம்
  • கோயிற்புராணம்
  • திருமுருகாற்றுப்படை
  • சைவ சமய நெறி
  • சிவதருமோத்தரம்
  • திருச்செந்தினீரோட்டக யமகவந்தாதி
  • மருதூரந்தாதி
  • சௌந்தரியலகரி

உசாத்துணை

  • Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
  • ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
  • சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
  • http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.