ஆறுமுக உபாத்தியாயர்

From Tamil Wiki

ஆறுமுக உபாத்தியாயர் (~1820-1890) கர்னாடக இசைப்பாடல்கள் இயற்றியவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் முப்பது ராகங்களில் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்.

இளமை

ஆறுமுக உபாத்தியாயர் தஞ்வாவூர் மாவட்டம் கருந்தட்டாங்குடியில் சுமார் 1820ல் வேளாள குலத்தில் பிறந்தார்.

தனிவாழ்க்கை

ஆறுமுக உபாத்தியாயர் கருந்தட்டாங்குடியில் பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்தார். இவருக்கு ஒரு கொடிய நோய் தாக்கியபோது, முருகனடியார் ஒருவர் முருகனை வழிபட்டால் நோய்தீரும் என்றார். கருந்தட்டாங்குடி கருகூலநாதர் ஆலய மேற்கு நுழைவாயிலில் உள்ள தண்டபாணியை வழிபட்டு அவர் மீது பாடல்கள் இயற்றி, நோய் நீங்கி குணமடைந்தார்.

இசைப்பணி

முறையான இசைப்பயிற்சி இல்லாமல் கேள்வி ஞானத்திலேயே முதல் பாடலை இயற்றினார். அப்பாடல்,

ராகம்: பைரவி

பல்லவி:

மனதென்றன் மீதில் வைத்தாயா - கிருபை செய்ய

மயிலேறி வாரும் முத்தையா

அதன் பின்னர் தஞ்சையில் இசைக்கலைஞராக இருந்த சுந்தரராவ் என்பவர் நட்பு கிடைத்து அவரிடமே இசை கற்றார். முருகன் மீது பல கீர்த்தனைகள் பாடினார்(1841). இவர் பாடிய பாடல்கள் ”கந்தர் பஜனை அல்லது சிவசுப்பிரமணிய சுவாமி கீர்த்தனம்” என்ற பெயரில் பலமுறை அச்சிடப்பட்டன. இந்நூலில் விருத்தம், வெண்பா முதலிய 45 பாடல்களும், வேலாயுதக் கண்ணி என்ற தலைப்பில் 105 கண்ணிகளும் 76 கீர்த்தனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

இவருடைய கீர்த்தனைகள் யாவும் நெஞ்சுக்கு உபதேசம் உரைக்கும் வடிவில் எளிய நடையில் எழுதப்பட்டவை. முப்பது ராகங்களில் கீர்த்தனைகள் எழுதியிருக்கிறார். சுந்தரராவ் இவரது பாடல்களுக்கு ராக-தாளம் அமைத்தார். இப்பாடல்கள் 1871-லும் 1875-லும் அச்சானது. நான்காம் பதிப்பு 1883-ல் வெளிவந்தது.

எடுத்துக்காட்டு

ராகம்: நாதநாமக்கிரியை, தாளம்: ஆதி

பல்லவி:

முருகனையே நினை மனமே - முற்றிலும் நம்பி

முருகனையே நினை மனமே

அனுபல்லவி:

முருகனையே நினை முன்செய்த வினையில்

வருமோர் பிறவி வாருதியி லழுந்தாமல் (முருகனையே)

சரணம்:

அண்டர் முனிவர்கள் கண்ட திசயமென

மண்டல மதிரவே மயிலில் நடம்புரி (முருகனையே)

உசாத்துணை