under review

ஆயிரம் மசலா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
Line 109: Line 109:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Second review completed}}
{{Finalised}}

Latest revision as of 12:38, 5 May 2024

ஆயிரம் மசலா (ஆயிர மசலா; ஆயிர மசலாவென்று வழங்கும் அதிசய புராணம்), (பொ.யு. 1572) தமிழில் இயற்றப்பட்ட முதல் இஸ்லாமிய இலக்கிய நூல். இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளின் விளக்கமாக வினா-விடை வடிவில் அமைந்தது. ஆயிரம் மசலா நூலை இயற்றியவர், கீழக்கரையைச் சேர்ந்த செய்கு முதலி இஸ்ஹாக் எனும் வண்ணப் பரிமளப் புலவர்.

பதிப்பு, வெளியீடு

ஆயிரம் மசலா நூல், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகின் முதல் காப்பிய நூல். பொ.யு. 1572-ல், இதனை இயற்றியவர், வகுதை நாடன் செய்கு முதலி இஸ்ஹாக் என்னும் வண்ணப் பரிமளப் புலவர். இந்நூல், காயற்பட்டணம் கண்ணகுமதுமகுதூ முகம்மதுப் புலவரால் பரிசோதிக்கப்பட்டு சீர்திருத்தப்பட்டு, 1923-ல், சென்னை ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மறுபதிப்பு இல்லாதிருந்த இந்நூலை மு. செய்யது முஹம்மது ஹசன் 1984-ல் பதிப்பித்தார்.

ஆசிரியர் குறிப்பு

ஆயிரம் மசலா நூலை இயற்றியவர் வகுதை நாடன் செய்கு முதலி இஸ்ஹாக் என்னும் வண்ணப் பரிமளப் புலவர். இவர் மதுரையைச் சேர்ந்தவர். அன்றைக்கு ‘வகுதை’ என்றும் இன்றைக்குக் ‘கீழக்கரை’ என்றும் அழைக்கப்படும் பகுதியில் பிறந்தவர். ’வண்ணம்’ என்னும் இலக்கிய வகைமையில் பாடுவதில் வல்லவராக இருந்ததால் ’வண்ணப் பரிமளப் புலவர்’ என்று அழைக்கப்பட்டார்.

மதுரையில் வாழ்ந்த வண்ணப் பரிமளப் புலவர், ஆயிரம் மசலா நூலை மதுரை செந்தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்தார்.

நூல் அமைப்பு

மசலா’ என்பது அரபி மொழிச்சொல்லான ‘மஸ்லா’ என்பதன் தமிழ் வடிவம். இதற்கு கேள், விசாரி, தெளிவுபெறு என்று பல பொருள்கள் உள்ளன. இச்சொல், வினா-விடை வடிவத்தைக் குறிக்கும்.

ஆயிரம் மசலா நூல் 1092 பாடல்களைக் கொண்டுள்ளது. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டுள்ளது. காப்புச் செய்யுள்களாக இரண்டு செய்யுள்கள் இடம்பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்தில் 35 பாடல்கள் உள்ளன. அதனை அடுத்துள்ள 'பதிக வரலாறு’ என்னும் பகுதியில் உள்ள பத்துப் பாடல்களில் நபி பெருமானின் வாழ்க்கை சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

யூத அறிஞர் அப்துல்லா இப்னு சலாமுக்கும் நபி பெருமானாருக்கும் இடையே நடைபெற்ற விவாதங்களின் தொகுப்பாக ஆயிரம் மசலா அமைந்துள்ளது. அரபுச் சொற்கள் நிறைய இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அரபு மொழிச் சொற்கள் அரபு மொழியில் பயின்றுவரும் விதத்திலேயே தமிழில் எடுத்தாளப்பட்டுள்ளன.

உள்ளடக்கம்

ஆயிரம் மசலா நூல் நபி பெருமானின் வாழ்வையும் வாக்கையும் உள்ளடக்கிய ஹதீது அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஆயிரம் மசலா' எனப் பெயரிடப்பட்டிருப்பினும் இந்நூலில் முன்னுாறு கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. எனினும் அக்கேள்விகளுக்கான விடைகளில் ஆயிரம் இஸ்லாமிய உண்மைகள் தர்க்க வாத அடிப்படையில் ஆசிரியரால் எடுத்தோதப்படுவதால், ‘ஆயிரம் மசலா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கதை

அப்துல்லா இப்னு சலாம் என்பவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். உயர் கல்வியறிவு பெற்றிருந்த இவர் 'கைபார்’ எனும் நகரில் வாழ்ந்து வந்தார். தன் காலத்துக்கு முன்னர் இறைவன் தன் நபிமார்கள் மூலம் அனுப்பிய சபூர், தவ்ராத், இன் ஜீல் ஆகிய வேதங்களில் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்நபிமார்களின் வரிசையில் இறுதி இறைத்தூதராக நபி பிறந்து, உலக மக்களுக்கு தீன் நெறி புகட்டி நெறிப்படுத்துவார் என்பதையும் முன்னரே அறிந்திருந்தார். நபி பெருமானின் வருகைக்காகக் காத்திருந்தார்.

நபிகள் நாயகம் மதினா மாநகரத்தில் இருந்தபோது ஒருநாள் வானவர் தலைவர் ஜிபுரயில் தோன்றி மதினாவுக்கு வடக்கே வாழும் அப்துல்லா இப்னு சலாம் எனும் அறிஞர் பெருந்தகைக்கு மடல் விடுத்துத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அண்ணலார், தோழர் உக்காஸ் என்பவரை அழைத்து வானவர் தலைவர் கோரியபடி அப்துல்லா இப்னு சலாமுக்குக் கடிதம் வரையுமாறு பணித்தார். அக்கடிதத்தில் 'இறைதூதர் முகம்மது நபி' என்று குறிக்கப்பட்டது.

கடிதத்தைப் பெற்ற அப்துல்லா இப்னு சலாம், இறுதி நபியை எதிர்பார்த்திருந்த நிலையில் நபியொருவர் விடுத்த கடிதம் அது என்பதறிந்து வியந்தார். தான் வாழும் நகர மாந்தர் அனைவரையும் ஒருங்கழைத்து, கடித விவரம் கூறினார். பின் வேதங்களில் தெளிவு பெற விரும்பித் தான் விடுக்கும் ஐயங்களை – மசலாக்களை – நபி பெருமானாரிடம் கேட்பது என்றும், அவற்றிற்கு அண்ணலார் உரிய விடையளித்தால் அவரே உலகம் எதிர்நோக்கி நிற்கும் இறுதி இறைத் தூதர் எனத் தெளிந்து, அவர் வழியில் இணைவோம் என்றும் கூறினார். மக்களும் ஒப்பினர்.

அப்துல்லா இப்னு சலாம், நபிபெருமானைச் சந்தித்து தன் முடிவைத் தெரிவித்தார். அது கேட்டு மகிழ்ந்த நபிகள், அப்துல்லா இப்னு சலாமின் நிபந்தனைக்கு இணங்கி, கேள்வி கேட்கப் பணித்தார். அப்துல்லா இப்னு சலாம் விடுத்த வினாக்களுக்கெல்லாம் உரிய விடையை நபி பெருமானார் அளித்தார். அதனைக் கேட்டு பெருமானாரின் பெருமையையும், சிறப்பையும் தீன் நெறியின் மகத்துவத்தையும் முழுமையாக அறிந்தார், அப்துல்லா இப்னு சலாம்.

தான் முன்பே அறிவித்தபடி, அப்துல்லா இப்னு சலாமும் அவர் உற்றார் உறவினரும், கைபார் நகரத்தாரும் தீன் நெறியாம் இஸ்லாத்தைப் பின்பற்றி முஸ்லிம்களாயினர். - இதுவே 'ஆயிரமசலா’ நூல் கூறும் கதை.

பாடல்கள் நடை

வினா

மானாக மேவந்த மக்காவில் வாழ்
தேனாவி லேவந்த செப்போசையாய்
மீனாக மேகொண்ட மெய்த்தூ தரே
தீனாவ தேதென்று செப்பீர் மனே…

விடை

வீறான சூதர்க்கு மேலானவா
தேறாகு பாகொத்த தீனாவதே
சாறான கலிமா ஷஹாதத்துட
னீறாத சீபத்தி லீமானுமாம்

வினா

உங்களுக்கு இறைச் செய்தி எவ்வாறு எட்டுகிறது?

விடை

அப்படிக் கலம் இறையால் அணிபல கையில்எழுத
மெய்ப்பொருள் இசுறாபீல் மீக்காயில் தமக்கருள
செப்பிய மீக்காயீல் ஜிபுறயீ லுக்கருள
இப்படி ஜிபுறயீல்வந் தேகிஎமக் கருள்வார்

வினா

பிதாவினும் பிள்ளை மூர்க்கம்
பெற்றுறு தந்தை தன்னைச்
சதாளுறும் கோல தாகச்
சதிசெயும் அது ஏதென

விடை

இரும்பு பிறக்கும் கல்லிடத்தில்
ஈடுபடுத்தும் இரும்புகல்லைப்
பொருந்த உருக்கை இரும்புபெறும்
பூண்ட இரும்பை உருக்கறுக்கும்
திருந்த நெருப்பை உருக்கீனும்
செய்ய உருக்கைத் தீவாட்டும்
வருந்தும் பிதாவின் பிள்ளைமிடுக்
காகும் மசலா இது என்றார்

வினா

கருதி ஒரு நாட்பொழுதைக் கண்ட நிலம் எது?

விடை

காசாக்கம் செய்யும் பிருவூன் கலக்கத்தால்
மூசாப் பயகாம்பர் முன்னீர் இடை புகவே
ஆசாத் தடியால் அடித்தார் ஈராறுவழி
ஊசாப் பெருங்கடலின் உட்புகுந்து கொண்டதுமே

வினா

மண் தரைக்குள் ஏறாது வானிருந்து ஓடாது அங்கு
அந்தரத்தில் ஓராறுண்டது எமக்குக் கூறுமென

விடை

விந்தமலர் புயதடு இறசூல் மெய்யினில் வெப்பு என்றாரே

மதிப்பீடு

ஆயிரம் மசலா நூல் இஸ்லாமிய நெறியின் பல்வேறு சிறப்பம்சங்களையும் தீன் நெறியின் நுட்பங்களையும் விளக்குகிறது. இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை தத்துவார்த்தமாக, வரலாற்று அடிப்படையில் கூறுகிறது. ஆயிரம் மசலா நூலில் உள்ள கருத்துக்கள், இஸ்லாமிய மார்க்கப் போதனைகளையும், இஸ்லாமியர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளையும் விரிவாக விளக்குகின்றன. இலக்கியச் சிறப்புடன் கூடிய நீதி இலக்கிய நூலாகவும், முதலில் தோன்றிய இஸ்லாமியக் காப்பிய நூலாகவும் ஆயிரம் மசலா நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page